YS தமிழ் Explainer - ஐபிஓ என்றால் என்ன? அதன் பலன்கள் என்னென்ன?
இப்போதெல்லாம் வணிக செய்திகளில் ‘ஐபிஓ’ என்ற சொல்லை அடிக்கடி பார்க்கிறோம். IPO என்றால் என்ன? இதில் முதலீடு செய்வதற்கு முன்னர் அது குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வது முதலீட்டாளர்களுக்கு அவசியமான ஒன்றாகும்.
இப்போதெல்லாம் வணிக செய்திகளில் ‘ஐபிஓ’ என்ற சொல்லை அடிக்கடி பார்க்கிறோம். அப்படி என்றால் என்ன? அதன் பலன்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.
IPO-வில் முதலீடு செய்தால் லாபம் ஈட்டலாம் எனச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் இதில் முதலீடு செய்வதற்கு முன்னர் அது குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வது முதலீட்டாளர்களுக்கு அவசியமான ஒன்றாகும்.
இது சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் சார்ந்த சந்தையில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. காரணம் இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் தான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ரோம் நாகரிகத்தில் உலகின் முதல் ஐபிஓ-வை ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இருந்தாலும், இதில் வணிக வல்லுனர்களுக்கு மாற்று கருத்து உள்ளது. 18ம் நூற்றாண்டின் பிற்பாதியில் அமெரிக்காவில் உள்ள ‘பேங்க் ஆப் நார்த் அமெரிக்கா’ ஐபிஓ வெளியீட்டில் இறங்கி உள்ளது. அந்த நாட்டில் முதன் முதலில் ஐபிஓ வெளியிடப்பட்டது அப்போது தான்.
அதன் பின்னர், படிப்படியாக வெவ்வேறு நாடுகளுக்கும் இந்த வழக்கம் அறிமுகமாகி உள்ளது.
IPO என்றால் என்ன?
பொதுவாக பங்குச் சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படும். முதலீட்டாளர்கள் பங்குகளின் விலை உயரும் போது விற்கவும், அதுவே விலை சரியும் போது வாங்கவும் செய்வார்கள். இருந்தாலும் நிறுவனங்களின் இயக்கம், வளர்ச்சி, நிலைத்தன்மை போன்றவற்றை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்வார்கள்.
இந்தியாவில் பங்குகளை பரிமாற்றும் சந்தைகளில் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் பணி முக்கியமானது. பெரும்பாலும் இந்திய முதலீட்டாளர்கள் இந்த சந்தைகளில் பங்கை வாங்குவது மற்றும் விற்பதுமாக பிஸியாக இருப்பார்கள்.
ஆனால், ஐபிஓ அப்படி இல்லை. இதனை நிறுவனங்கள் நேரடியாக வெளியிடும். தனியார் வசம் உள்ள ஒரு நிறுவனம் பொது பங்கு வெளியீட்டின் மூலம் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் தங்கள் நிறுவன பங்குகளை முதல் முறையாக விற்பனைக்கு கொண்டு வரும். இதனை ஆங்கிலத்தில் Initial Public Offering (ஐபிஓ) என்பார்கள்.
இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளின் அனுமதி அவசியம். இந்தியாவில் இதற்கு செபியின் (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) அனுமதி தேவைப்படுகிறது.
தங்கள் நிறுவன பங்குகளை ஐபிஓ மூலம் பொது பங்குகளாக வெளியிட விரும்பினால் அதற்கான பங்குகளின் விலை குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். முக்கியமாக செபி போன்ற அமைப்புகளிடம் இதற்கு அனுமதி கோர வேண்டும். அனுமதி கிடைத்த பின்னர், அது குறித்த அறிவிப்பை வெளியிடலாம். அதில், ஐபிஓ வெளியிடப்படும் தேதி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கி இருக்கும்.
அதனடிப்படையில், முதலீட்டாளர்கள் ஐபிஓ முதலீட்டை மேற்கொள்ளலாம். பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் முதலீட்டாளர்கள் வசம் தெரிவிக்கப்படும். தொடர்ந்து அது பங்கு பரிமாற்ற பணிகளை மேற்கொள்ளும் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
அதன் பின்னர், முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்யலாம். அதே போல அதை நேரடியாக வாங்கவும் செய்யலாம்.
புதிய பங்கு வெளியீடு (Fresh Issue), ’ஆஃபர் ஃபார் சேல்’ (Offer for sale) மற்றும் ’ஹைபிரிட் ஆஃபர்’ (Hybrid offer) என மூன்று வகைகளாக நிறுவனங்கள் ஐபிஓ வெளியீட்டை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
பலன்கள் என்ன?
> ஐபிஓ முதலீட்டை மேற்கொள்ளும் முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் தரை தளத்தில் நுழைவதை போல என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அவர்களுக்கு வளர்ச்சி படிப்படியாக இருக்கும் என தெரிகிறது.
> மலிவான விலையில் பங்குகளை வாங்கி, பெரிய அளவில் இதில் லாபம் பார்க்கலாம். இருந்தாலும் இது நிறுவனங்களின் வளர்ச்சி, செயல்பாடு போன்றவற்றை பொறுத்தே இருக்குமாம்.
> இதில் லிஸ்டிங் கெயின் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐபிஓ வெளியிட்ட நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் நாள் அன்று அதன் முதலீட்டாளர்கள் ஐபிஓவிற்கு விண்ணப்பித்த போது பங்குகளுக்கு செலுத்திய விலையை காட்டிலும் கூடுதலாக இருந்தால் அது 'லிஸ்டிங் கெயின்' (Listing gain) என அழைக்கப்படுகிறது.
> இதன் இயக்கத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.
கவனம்: பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஐபிஓ வெளியீட்டின் போது ஏற்படும் ஹைப் காரணமாக அதில் முதலீடு செய்வதில் ஆர்வம் செலுத்துவார்கள் (உதாரணத்துக்கு அண்மையில் நடைபெற்ற LIC ஐபிஓ வெளியீடு). வளர்ந்து வரும் நிறுவனங்கள்தான் இந்த ஐபிஓ வெளியீட்டில் அதிகம் ஈடுபடும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்னர், எதிர்பார்த்த அளவுக்கு அதில் ரிட்டர்ன் கிடைக்காமல் போகலாம். அதனால் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் குறித்து தீர ஆராய்ந்து, அதன் வளர்ச்சி, செயல்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
YS தமிழ் Explainer - 'டிஜிட்டல் கோல்ட்' என்றால் என்ன? சாதக-பாதகங்கள் இதோ!
Edited by Induja Raghunathan