இனி இந்தியாவில் செல்போன்களில் NavIC கட்டாயம்: NaVIC என்றால் என்ன?
2023 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து போன்களிலும் NavIc கட்டாயம் என தகவல்.
வரும் 2023 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள அனைத்து போன்களிலும் இந்தியாவின் NavIc நேவிகேஷன் சிஸ்டம் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல். இது ஆப்பிள், சாம்சங், சியோமி, ஒன்பிளஸ் உட்பட போன்களை உற்பத்தி செய்து வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிகிறது.
இந்த சூழலில் NavIc குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.
இந்திய அரசின் இந்த நகர்வு பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இப்போதைக்கு இதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அது குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்.
NaVIC என்றால் என்ன?
Navigation with Indian Constellation என்பதன் சுருக்கம் தான் NavIC. இஸ்ரோ வடிவமைத்துள்ள இந்திய சாட்டிலைட் சிஸ்டம் இது. இதற்கான பணிகள் கடந்த 2006 வாக்கில் தொடங்கியது. 2011 வாக்கில் இதன் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இதற்காக சுமார் 174 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், பணிகள் 2018 வாக்கில் தான் நிறைவடைந்தது.
தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள நேவிகேஷன் சிஸ்டத்துக்கு மாற்றாக இது அமைய வேண்டுமென்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் ஜிபிஎஸ் சிஸ்டம் தான் இப்போது இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியாளரை சமாளிக்கும் வகையில் இந்தியாவின் NavIC கட்டமைக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் வான்பரப்பில் 8 சாட்டிலைட்களை இஸ்ரோ நிலை நிறுத்தியுள்ளது. அதன் மூலம் ஜிபிஎஸ் சிஸ்டத்தை காட்டிலும் துல்லியமான பொசிஷனை சுட்டிக்காட்டும் திறனை இது பெற்றுள்ளதாக தெரிகிறது.
மறுபக்கம் ஜிபிஎஸ் சிஸ்டம் உலக அளவில் சேவையை வழங்கி வருகிறது. அதற்காக 31 சாட்டிலைட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது 2 நாளுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வருகிறது. ஆனால், NavIC இந்தியா மற்றும் அதை சார்ந்த பரப்புகளில் மட்டுமே சேவையை வழங்குகிறது. அதனால் இது துல்லிய செயல்பாட்டை கொண்டிருக்கும் என தெரிகிறது.
NavIC சிஸ்டம் கொண்டுள்ள 300 ஸ்மார்ட்போன்கள்!
வரும் 2023 முதல் இந்தியாவில் விற்பனையாகும் போன்களில் NavIC சிஸ்டம் இருக்க வேண்டும் என அரசு சொல்லியுள்ளது. ஆனால், எதார்த்தம் என்னவென்றால் கடந்த 2020 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சுமார் 300 போன்களில் இந்த NavIC அம்சம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 50 புரோ ஸ்மார்ட்போனில் தான் இந்த அம்சம் முதன் முதலில் இடம் பெற்றிருந்தது.
NavIC ஆதாயம் என்ன?
பிரதமர் மோடியின் ‘சுயசார்பு இந்தியா’ என்ற தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக NavIC கட்டாயம் என்பது இந்தியாவில் ஸ்மார்ட்போன்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிகிறது.
அதே நேரத்தில் நேவிகேஷன் சிஸ்டத்திற்காக வெளிநாடுகளை சார்ந்து இந்தியா இருக்க வேண்டியதில்லை. பெரும்பாலான அயலக நேவிகேஷன் சிஸ்டங்கள் அந்த நாடுகளின் அரசால் இயக்கப்பட்டு வருகிறது. சமயங்களில் சில காரணங்களை சொல்லி மக்களின் சேவை தடைபடலாம். ஆனால், NavIC சிஸ்டம் இந்திய நாட்டுக்கானது. இதில் எந்தவித தடங்கலும் இருக்காது என நம்பப்படுகிறது.
மேலும், இப்போதைக்கு ஒரு சில பயன்பாடுகளுக்கு மட்டுமே NavIC நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்பாட்டுக்கு விரிவு செய்வது தான் இலக்கு எனத் தெரிகிறது.
உலக நாடுகளில் எப்படி?
அமெரிக்காவின் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் GLONASS, சீனாவில் BeiDou, ஐரோப்பிய ஒன்றியத்தில் Galileo நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது. இந்த நான்கும் உலக அளவில் சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவின் NavIC மற்றும் ஜப்பான் நாட்டின் QZSS பிராந்திய அளவில் தங்கள் நாடுகளில் சேவை வழங்கி வருகின்றன.
சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாட்டில் அந்த நாடுகளின் நேவிகேஷன் சிஸ்டம் போன்களில் இயங்கும் வகையில் தான் போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் போன்களில் NavIC அம்சத்தை சேர்ப்பது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு சிக்கலாக இருக்காது.
ஆனால், ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகத்திற்காக திட்டமிடப்பட்ட போன்களில் இந்த அம்சத்தை சேர்ப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது.
Edited by Induja Raghunathan