முருகப்பா குழும நிறுவனங்களை மூன்று சம பிரிவுகளாக பிரிக்கும் திட்டத்தில் சுணக்கம் ஏன்?
புகழ்பெற்ற முருகப்பா தொழில் குழுமத்தின் நிறுவனங்களை குடும்ப உறுப்பினர்கள் குழுக்களிடையே சமமாக பிரித்து கொள்வது தொடர்பாக விரிவான திட்டம் வகுக்கப்பட்டும், குறிப்பிட்ட சில நிறுவன பங்குகள் தொடர்பான கருத்து வேறுபாட்டினால், திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
புகழ்பெற்ற முருகப்பா தொழில் குழுமத்தின் நிறுவனங்களை மூன்று குடும்ப உறுப்பினர்கள் குழுக்களிடையே சமமாக பிரித்து கொள்வது தொடர்பாக விரிவான திட்டம் வகுக்கப்பட்டும், குறிப்பிட்ட சில நிறுவன பங்குகள் தொடர்பான கருத்து வேறுபாட்டினால், திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
குழுமத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் இடையே, பெண் வாரிசு வள்ளி அருணாச்சலம் இயக்குனர் குழுமத்தில் உறுப்பினர் இடம் கோரியது தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு, குழும நிறுவனங்களை சமமாக பிரித்துக்கொள்ளும் முயற்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் விரிவான கட்டுரையில் விளக்கியுள்ளது.
தென்னிந்தியாவின் புகழ் பெற்ற தொழில் குடும்பங்களில் ஒன்றான முருகப்பா குழுமம், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 124 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இக்குழும நிறுவனங்கள் ஐந்து தலைமுறையாக வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை, உரம், சைக்கிள், பாலிமர், நிதிச்சேவை, பொறியியல் என பல்வேறு துறைகளில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. பல நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவின் மற்றொரு புகழ் பெற்ற தொழில் குடும்பமான டிவிஎஸ் குழுமத்தின் வாரிசு பிரிவினை திட்டத்தின் அடிப்படையில், இக்குழுமத்தின் நிறுவனங்கள் பிரிவு திட்டமும் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் அதிக பங்குகள் கொண்ட குடும்ப பிரிவு மற்றவர்கள் வசம் உள்ள பங்குகளை வாங்குதாக இது அமைகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு, பங்கு பரிவர்த்தனையில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, டிஐஐ நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு சரிவில் இருந்து மீண்டும் சிறப்பாக செயல்படும் சிஜி பவர் நிறுவனம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக குழும வட்டாரங்கள் மூலம் அறிய முடிவதாக எக்கனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.
ஐந்தாவது தலைமுறையாக தொடரும் வர்த்தகத்தில், மூன்று குழுக்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கோரமண்டல் இண்டர்நேஷனல் தலைவர் எம்.ஏ.அருண் அழக்கப்பன் மற்றும் அவரது இரண்டாம் சகோரதரர் அருணாசலம் வெள்ளையன் (இஐடி பாரி), ஒரு பிரிவைச்சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.
சிஜி பவர், டிஐஐ மற்றும் சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்பாக ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கு பரிவர்த்தனை விகிதத்தில் முதல் பிரிவு அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்த மூன்று நிறுவனங்களையும் நிர்வகிக்கும் வெள்ளையன் சுப்பையா, அவரது இரண்டாவது சகோதரர் அருண் முருகப்பன், இரண்டாவது பிரிவாக அமைகின்றனர். ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட அம்சங்களை மாற்றுவதில் இப்பிரிவுக்கு உடன்பாடில்லை.
எம்.எம்.முருகப்பன் மற்றும் முத்தையா வெங்கசாசலம் மூன்றாவது பிரிவாக அமைகின்றனர். இவர்கள் வெள்ளையன் பிரிவுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இதை தனியே உறுதிப்படுத்த முடியவில்லை.
பொதுவாக குடும்ப நிறுவனங்கள் பிரிவினையில் பங்குதள் பரிவர்த்தனையில் வேறுபாடு இருந்தாலும் அது ரொக்கம் கொண்டு சரி செய்யப்படுவதாக கருதப்படுகிறது.
நான்காம் தலைமுறையை ச்சேர்ந்த சுப்பையா, குடும்ப உறுப்பினர்கள் இடையே சிறப்பாக செயல்படுபவராக கருதப்படுவதாக முருக்கப்பா குழும நோக்கர்கள் பலர் கருதுகின்றனர். குறிப்பாக சிஜி பவர் நிறுவன செயல்பாட்டில் இவரது பங்களிப்பு அதிகம் என்கின்றனர். இவரது வழிகாட்டுதலில் டிஐஐ நிறுவன பொறியியல் பிரிவு பசுமை போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றிகரமாக விரிவாக்கம் செய்துள்ளது.
எனினும், அருண் அழகப்பன் உள்ளிட்டவர்களுக்கும் குழும செயல்பாட்டில் முக்கிய பங்கு இருப்பதாக சொல்கின்றனர். ஒவ்வொரு பிரிவினருமே ஒவ்வொரு கட்டத்தில் குழும் வளர்ச்சிக்கு தனி பங்கு ஆற்றியிருப்பதாகவும் கூட்டு முயற்சியாலே குழுமம் வளர்ந்ததாகவும் ஒரு சிலர் கருதுகின்றனர்.
இதற்கு முன் குடும்ப உறுப்பினர்கள் சுழற்சி அடிப்படையில் நிறுவனங்களுக்கு பொறுப்பு வகித்துள்ளனர். எனினும், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கருத்துக்களை அறிய முடியவில்லை என நாளிதழ் தெரிவிக்கிறது.
சுப்பையா, டிஐஐ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தியுள்ளார். இந்நிலையில், பங்கு பரிவர்த்தனை விகிதத்தை மாற்றுவது ஏற்கத் தக்கது அல்ல என்கின்றனர்.
முருகப்பா குழுமம் தனக்கான குடும்ப சட்ட விதிமுறைகளை கொண்டது. குடும்ப பிரச்சனைகள் மற்றும் பங்குதாரர் பிரச்சனைகளை ஒரு குழு தீர்வு காண்கிறது.
எனினும், 2020க்கு பிறகு குழுமம், குடும்பத்தையும், நிர்வாகத்தையும், தனியே பிரிக்கும் தொழில்முறை வர்த்தக முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக தொழில்முறை இயக்குனர் குழுமம் கொண்டு வரப்பட்டுள்ளது.
குழுமத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் இடையே, பெண் வாரிசு வள்ளி அருணாச்சலம் இயக்குனர் குழுமத்தில் உறுப்பினர் இடம் கோரியது தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு, தற்போது நிறுவனங்களை சமமாக பிரிக்கும் திட்டம் முட்டுக்கட்டையை சந்தித்துள்ளது.
குழுமத்தின் பாரம்பரிய தொழில் அணுகுமுறையும் மாறிவருவதாக சொல்கின்றனர். பொதுவாக பெரிய அளவில் முதலீடு செய்யும் வழக்கம் இல்லாததை மீறி அண்மை காலங்களில் குழும நிறுவனங்கள் புதிய துறைகளில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதே போல ஆண் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்தும் முறையிலும் மாற்றம் வரலாம் என்கின்றனர்.
தகவல் உதவி: Economic Times
Edited by Induja Raghunathan