ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவைகள் திடீர் தடங்கல்: காரணம் என்ன?
ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப் சேவைகள் திடிரென தடங்கல் ஆனதற்கு ஹேக்கிங் காரணமா?
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய முன்னணி சமூக ஊடக ஊடக சேவைகள் திடிரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயனாளிகள் முழு அளவில் பயன்படுத்த முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப்பும் பாதிப்புக்குள்ளாகியது. இந்த எதிர்பாராத தடங்களுக்கு பிறகு தற்போது இந்த சேவைகள் முழுவீச்சில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முன்னணி சேவையாக இருக்கிறது. இதற்குச் சொந்தமான, புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் மற்றும் மெசேஜிங் சேவையும் கோடிக்கணக்கான பயனாளிகளால் பயன்படுத்தப்படுகின்றன.
தினமும், பயனாளிகள் நிலைத்தகவல்களை பகிர்வது துவங்கி, செய்திகளை தெரிந்து கொள்வது வரை பலவற்றுக்கு இந்த சேவைகளை நாடுகின்றனர். இந்நிலையில், நேற்று திடிரென ஃபேஸ்புக் சேவை தடங்களுக்கு உள்ளாகியது. இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சேவைகளும் பாதிப்புக்கு உள்ளாகின.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமூக ஊடக பயனாளிகள் இந்தத் தடங்கலால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தியாவை பொருத்தவரை, பயனாளிகள் புகைப்படங்கள் மற்றும் ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர்.
பல பயனாளிகள் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்டோரிகள் தரவிறக்கம் ஆகாத தடங்களையும் எதிர்கொண்டனர். ஆன்லைன் சேவைகள் செயல்பாட்டை கண்காணிக்கும் டவுண்டிடெக்டர் இணையதளம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சேவைகள் நள்ளிரவு 12 மணி அளவில் தடங்களுக்கு உள்ளானதாகத் தெரிவித்தது.
உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த தடங்களை உணர்ந்ததாகவும் அந்த இணையதளம் தெரிவித்திருந்தது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளை பயன்படுத்த முடியாமல் தடங்கள் ஏற்பட்டதை அடுத்து, பல பயனாளிகள் டிவிட்டரில் இது பற்றி தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதன் காரணமாக டிவிட்டரில் #Facebookdown, #instagramdown ஆகிய ஹாஷ்டேகுகள் பிரபலமாகின.
தனிநபர்கள் மற்றும் நிறுவன பயனாளிகளும் இதனால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ ’ நாங்களும் #instagramdown,ல் பாதிக்கப்பட்டோம்’ என டிவிட்டரில் பகிர்ந்து கொண்டது.
ஃபேஸ்புக் பயனாளிகள் குறிப்பாக நிலைத்தகவல் பிரியர்கள் இந்தத் திடீர் தடங்களால் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலர் இந்தத் தடங்களுக்கு ஹேக்கிங் தாக்குதல் காரணமாக இருக்குமோ என்று அஞ்சினர். ஆனால், இதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப வலைப்பதிவாளரான ஜேனே மன்சுன் வாங், ஃபேஸ்புக் இமேஜ் சிடிஎன் நுட்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்குக் காரணம் என கூறியிருந்தார்.
ஃபேஸ்புக் நிறுவனம் உடனே இது தொடர்பாக வெளியிட்ட குறும்பதிவில், ஒரு சில பயனாளிகளுக்கு சேவையை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதகாவும், இது விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட இந்தப் பிரச்சனை 100 சதவீதம் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தது.
வழக்கமான பராமரிப்பு செயல்பாட்டின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமாக அமைந்ததாகவும், இது உடனே சரி செய்யப்பட்டு விட்டதாகவும் ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் இதே போல சில மணி நேரம் தடங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.