இந்திய கடற்படை முன்னாள் பெண் அதிகாரி ‘நாரி புரஸ்கார்’ விருது வென்ற ஐஸ்வர்யா போடபட்டி கடந்து வந்த பாதை!
நரிகா சாகர் பரிக்ரமா பயணத்தில் பங்கேற்ற இந்திய கடற்படை முன்னாள் லெப்டினெண்ட் கமாண்டர் ஐஸ்வர்யா போடபட்டி இந்த வீரதீர பயணம் பற்றி மட்டுமல்லாமல் அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஐஸ்வர்யா போடபட்டி இந்திய கடற்படை முன்னாள் லெப்டினென்ட் கமாண்டர். இவர் ஆயுதப் படையில் சேர்ந்த பத்தாண்டுகளில் கடற்படை அதிகாரி அந்தஸ்து பெற்றுள்ளார். 2018ம் ஆண்டு நவ சேனா பதக்கம் வென்றார். கடற்படை அதிகாரிகளில் இந்தப் பதக்கம் வென்ற முதல் பெண் என்கிற பெருமைக்குரியவர்.
நாரி சக்தி புரஸ்கார், டென்சிங் நார்கே விருது ஆகிய உயரிய விருதுகளை ஐஸ்வர்யா வென்றுள்ளார். நரிகா சாகர் பரிக்ரமா என்றழைக்கப்படும் பயணத்திற்காக தாரிணி கப்பலில் 254 நாட்களில் உலகை சுற்றி வந்தததற்காக இவ்விருது பெற்றுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா 2011ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்தார். பல்வேறு பிரிவுகளில் பொறுப்பேற்றுள்ளார்.
நிரந்தர கட்டளைப் பணிக்காக (Permanent Commission) இரண்டு முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால், தகுதி குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு ஐஸ்வர்யாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.
கடற்படையில் சேர்ந்தார்
விமானி ஆகவேண்டும் என்பதே ஐஸ்வர்யாவின் கனவாக இருந்தது. ஹைதராபாத் மகாத்மா காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் மெட்டலர்ஜிகல் என்ஜினியரிங் படித்தார்.
படிப்பை முடித்த பிறகு மெட்டலர்ஜிகல் என்ஜினியரிங் முடித்த பெண்களுக்கு அதிக வாய்ப்பு இல்லை என்பது புரிந்தது. நேரடியாக களத்தில் வேலை பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுவதால் பெண்கள் அதிகம் இல்லை என்பதை உணர்ந்தார்.
ஆண், பெண் இருபாலருக்கும் வேலை வாய்ப்பு இருப்பதாக இந்திய கடற்படையில் வெளியிட்டிருந்த அறிவிப்பை தற்செயலாக செய்தித்தாளில் பார்த்தார். உடனே விண்ணப்பித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார். 2011ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்தார்.
நிரந்தர கட்டளைப் பணி என்பது பெண் அதிகாரிகளுக்கு என்றும் எட்டாக்கனியாகவே இருந்தாலும்கூட ஆயுதப் படையில் சேரும் வாய்ப்பு எளிதாகக் கிடைப்பதாக ஐஸ்வர்யா தெரிவிக்கிறார். இவரது பேட்ச்சில் அதிக எண்ணிக்கையாக, மொத்தமிருந்த 256 அதிகாரிகளில் 70 பேர் பெண்கள் என்கிறார்.
துணிகர பயணம்
2016ம் ஆண்டு நவிகா சாகர் பரிக்ரமா பயணத்திற்காக ஐஸ்வர்யா தேர்வு செய்யப்பட்டார்.
கடற்படை அதிகாரிகள் இந்தப் பயணத்திற்காக ஐந்து நாடுகளைக் கடந்து சென்றனர்.
பூமத்திய ரேகையை இரண்டு முறைக் கடந்து சென்றனர். நான்கு கண்டங்களிலும் மூன்று கடல்களிலும் கப்பலை செலுத்திச் சென்றனர். 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018ம் ஆண்டு மே மாதம் வரை எட்டு மாதகாலம் கடல்வழியில் 21,600 கி.மீட்டர் பயணம் மேற்கொண்டு நிறைவு செய்தனர்.
“நாங்கள் உல்லாச சுற்றுப்பயணம் சென்றதாக மக்கள் நினைத்தார்கள். எத்தனை கடினமான பயணம் என்பதை நாங்கள் மட்டுமே அறிவோம். ஏராளமான பிரச்சனைகள். படகு கவிழ்ந்துவிடுமோ என்கிற பயம் இருந்தது. அப்படி நடந்தால் ஐந்து முதல் ஆறு கோடி ரூபாய் வரையிலான மக்கள் பணம் வீணாகிவிடும் என்கிற கவலை இருந்தது. தோல்வியைத் தழுவிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்,” என பயணம் குறித்து விவரிக்கிறார் ஐஸ்வர்யா.
இப்படிப்பட்ட அழுத்தமான சூழலில் இருந்ததால் பயணத்தை முழு ஈடுபாட்டுடன் ரசிக்கமுடியவில்லை என்கிறார். வழக்கமாக காபி குடிக்கும் பழக்கம் உள்ள இவர் டீ குடிப்பதற்கு மாறியதை மட்டுமே முக்கிய மாற்றமாகக் கருதுவதாக வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.
இந்தப் பயணத்தில் ஐஸ்வர்யா உடன் வர்திகா ஜோஷி, பிரதீபா ஜம்வால், பி ஸ்வாதி, எஸ் விஜயதேவி, பாயல் குப்தா ஆகியோர் இருந்தனர். மற்றவர்களுக்கு ஏற்கெனவே கப்பலில் பயணித்த அனுபவம் இருந்த நிலையில் ஐஸ்வர்யாவிற்கு மட்டும் இது முதல் பயணமாக அமைந்தது.
ஆண்களின் ஆதிக்கம்
ஐஸ்வர்யா எத்தனையோ தடைகளைத் தகர்த்து கடற்படை அதிகாரி என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளபோதும் பாலின பாகுபாடு தன்னுடைய பணி வாழ்க்கையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். கப்பலில் உலகைச் சுற்றி வருவதை வீரமிக்க செயலாக ஆண் அதிகாரிகள் கருதவில்லை என்கிறார்.
“சாகச செயல் புரிந்ததற்கு வீரதீர செயலுக்கான பதக்கம் கொடுப்பார்களா? இந்தப் பெண்கள் அத்தனை தகுதி வாய்ந்தவர்கள் இல்லை. இப்படி பலர் பலவிதமாகக் கருத்து தெரித்ததைக் கேட்டேன்,” என்கிறார்.
"நாங்கள் கடற்பயணத்தை மேற்கொண்டதால் எங்கள் ஆறு பேரின் அடையாளம் நாட்டு மக்களுக்குத் தெரிந்தது. பெண் அதிகாரிகள் கடுமையாகப் போராடவேண்டிய சூழல் உள்ளது. அனைத்து அதிகாரிகளும் நாட்டிற்கு சேவை செய்யவேண்டும் என்கிற அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். ஆனால், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவர்களது பாலினத்தை முன்னிறுத்தியே மதிப்பிடப்படுகிறது. குழந்தைகள் இருந்தால் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள். அப்பா கடற்படையில் இருந்தால் இப்படிப்பட்ட மதிப்பீடுகளுக்கு ஆளாவதில்லை,” என வருத்தம் தெரிவிக்கிறார் ஐஸ்வர்யா.
“சம வாய்ப்பு என்பது எங்கள் உரிமை. அதற்கு நாங்கள் தகுதியானவர்களே,” என்பதை வலியுறுத்துகிறார்.
கடற்படையில் சேவையைத் தொடர்வதில் போராட்டம்
ஐஸ்வர்யா சாதனை படைத்திருக்கிறார். பெண்கள் நிரந்தர கமிஷனுக்குத் தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் பணி ஓய்வு பெறவேண்டிய சூழ்நிலை வரும் என ஐஸ்வர்யா எதிபார்க்கவில்லை.
எட்டு ஆண்டுகள் சேவை செய்த பிறகு, 2019-ம் ஆண்டு நிரந்தர கமிஷனுக்காக முதல் முறை விண்ணப்பித்தார். மீண்டும் 2020-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
“கடற்படையில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு நிரந்தரமாக கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். இது முதல் முறை. இதே போல் ஒரு நபர் இரண்டு முறை விண்ணப்பிக்க முடியும். ஆனால், தகுதி இல்லை என என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது,” என்கிறார் ஐஸ்வர்யா.
”தகுதி, தகுதி இல்லை என்பன பற்றிய தெளிவான வரையறை ஏதுமில்லை. எங்கள் பேட்ச்சில் இருவருக்கு மட்டுமே வீரச்செயலுக்கான பதக்கம் கிடைத்தது. அதில் ஒருவருக்கு மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டது,” என்கிறார்.
“சண்டை போடலாம். ஆனால் அதுவும் எனக்கெதிராகத் திரும்பிவிடும் என்பது புரிந்தது. பத்தாண்டுகள் நிறைவு செய்ததும் வெளியேறிவிட முடிவு செய்தேன். இதைக் காட்டிலும் பெரிதாக சாதிக்கமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் இருந்தது,” என்கிறார்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு கடற்படை தலைவருக்கு ஐஸ்வர்யா கடிதம் எழுதினார். அதுவரை பணிக்காலத்தில் மேற்கொண்ட செயல்பாடுகளை அந்தக் கடிதத்தில் விவரித்திருந்தார். இருப்பினும் தேர்வாகவில்லை என்கிற பதிலே கிடைத்துள்ளது.
கடற்படையில் பத்தாண்டு காலம் பணிபுரிந்த பிறகு 2021-ம் ஆண்டு ஐஸ்வர்யா இந்திய கடற்படை வேலையை விட்டு விலகினார்.
Wells Fargo நிறுவனத்தில் உதவி துணைத் தலைவர் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரியாக சேர்ந்தார்.
2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து ஆயுதப் படையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. நிரந்தர கமிஷனுக்கும் இது வழிவகுத்தது.
இப்படிப்பட்ட தீர்ப்புகள் வந்தாலும்கூட ஆயுதப் படையில் ஒவ்வொரு பெண்ணும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருப்பதே உண்மை என்கிறார் ஐஸ்வர்யா.
நிரந்தர கமிஷன் தனக்கு மறுக்கப்பட்டதற்கான காரணம் வெளிப்படையாக தெரியவில்லை என்று கூறும் ஐஸ்வர்யா, தனக்கு அடுத்தபடியாக வரும் பெண்களுக்கு இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்கிறார்.
பெண்களின் பங்களிப்பு
முப்படைகளில் இந்திய கடற்படையில் அதிக அளவாக 6.5% பெண்களின் பங்களிப்பு உள்ளது என்கிறார் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக். இந்திய ராணுவத்தில் 0.56 சதவீதமும் இந்திய விமானப்படையில் 1.08 சதவீதமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப்படவேண்டும். அப்போதுதான் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். அதேபோல் ஆயுதப்படைகளில் இருக்கும் பணி வாய்ப்புகள் பற்றி பொதுமக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த விவரங்கள் மக்களிடம் சென்று சேரவேண்டும் என்றும் ஐஸ்வர்யா வலியுறுத்துகிறார்.
“நான் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரையாற்ற விரும்புகிறேன். என்னுடைய அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்வேன். ஆயுதப்படையில் அவர்கள் சேர ஊக்குவிப்பேன்,” என்கிறார்.
அனைவரும் ஆயுதப்படையில் சேர முன்வரவேண்டும் என்று கூறும் ஐஸ்வர்யா,
”நாட்டிற்கு சேவை செய்வதைக் காட்டிலும் உயர்ந்த பணி எதுவுமில்லை. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். பெண்களால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை எங்கள் பயணம் உணர்த்தியுள்ளது,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பூர்வி குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா