மணாலி டு லே: 156 மணி நேரத்தில் 480 கிமீ ஓடிய முதல் பெண்; கின்னஸில் இடம்பெற்ற சுஃபியா கான்!
மாரத்தான் மூலம் நல்ல நோக்கத்தை விதைக்கும் சுஃபியா கான்!
முதல் முறையாக மணாலியிலிருந்து லே வரையிலான 480 கிமீ தூரத்தை 156 மணி நேரத்தில் ஓடியிருக்கிறார் ஒரு பெண். அவர் பெயர் சுஃபியா கான்.
அக்டோபர் 1 ஆம் தேதி, சுஃபியா இந்த சாதனையை செய்துள்ளார். இந்த சாதனையை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் சுஃபியா கான் பெற்றார்.
156 மணி நேரத்தில் இந்த ஹிமாலயன் அல்ட்ரா ரன் பயணத்தை முடித்த சுஃபியா, இதற்காக மைனஸ் ஐந்து டிகிரிக்கும் குறைவான காலநிலை போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்.
ரெக்கார்டுகள் படைப்பது சுஃபியா ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால் இது அவரின் மூன்றாவது ஓட்ட பயணம். இதற்கு முன்பு இரண்டு முறை இதுபோல் நீண்ட தூரம் ஓடி சாதனைகளை முறையடித்துள்ளார்.
முன்னதாக, கன்னியாகுமரி - காஷ்மீர் வரை டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை என்ற நான்கு நகரங்களை உள்ளடக்கிய தூரத்தை இதற்கு முன் ஓட்டப் பந்தயம் மூலம் கடந்துள்ளார்.
சமீபத்தில் முடித்த சாதனை குறித்து யுவர்ஸ்டோரியிடம் பேசும் சுஃபியா,
"நம்பமுடியாததாக உணர்கிறேன். பயிற்சியின் போது, என்னால் அதைச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதேபோல் நான் நினைத்ததை விட இந்தப் பயணம் கடினமாக இருந்தது," என்னும் சுஃபியா இந்தப் பயணத்துக்காக 20 நாட்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்.
அதிக உயரங்களுக்கு, குறிப்பாக ஆக்ஸிஜன் அளவுகளின் சரிவு ஏற்படும் போது என்ன செய்வது என்பது தொடர்பாக பயிற்சி எடுத்தவர், பயிற்சியின் போதே அவர் ஓடவிருக்கும் பாதை பல சவால்கள் நிறைந்தது என்பதை புரிந்துகொண்டுள்ளார்.
கிடைத்த அனுபவத்தில் நிறைய ஏற்பாடுகளை செய்திருந்தாலும் திட்டமிட்டபடி விஷயங்கள் சரியாக நடக்கவில்லை.
இது மனது சம்பந்தப்பட்ட விளையாட்டு. உடல் ரீதியாக நீங்கள் எவ்வளவு கடினமாக பயிற்சி செய்தாலும், இதனை சாதிக்க உங்கள் மனமும் உங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். நிறைய முன்னேற்பாடுகளை செய்துகொண்டு சென்றாலும், நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். பனிப்பொழிவுக்கு மத்தியில் ஓட வேண்டியிருந்தது. குறிப்பாக ஒருகட்டத்தில் ஆக்ஸிஜன் செறிவு அளவு 56 ஆகக் குறைந்ததால் மயக்கமடைந்து விழுந்தேன்.
”எனது குழு தான் என்னை உயிர்ப்பித்தது. பின்னர், ஒரு நான்கு மணிநேரம் தூங்கிய பிறகு, இரவு முழுவதும் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். சரியான நேரத்தில் பயணத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவும் தொடர்ந்தேன். பூமியில் உள்ள மிகவும் அழகிய பகுதியில் ஓடினேன் என்பதால் மலைகள் நிறம் மாறுவதை நான் பார்த்தேன். என் முகத்தில் பனித்துளிகள் படர்ந்திருப்பதை உணர்ந்தேன். ஒவ்வொரு சில கிலோமீட்டருக்கும் இயற்கை மாறிக்கொண்டே இருப்பதை பிரமிப்புடன் பார்த்தேன்," என்று தனது பயணம் தொடர்பாக நெகிழ்கிறார் சுஃபியா.
சுஃபியா ஆரம்பத்தில் இருந்து தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர் கிடையாது. விமானத் துறையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர் சுஃபியா. 2017ம் ஆண்டு உடற்பயிற்சிக்காக ஓடத் தொடங்கியவர் தான் இன்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு முன்னேறியுள்ளார். உடற்பயிற்சி ஓடத் தொடங்கியவர் அதில் நல்ல முன்னேற்றங்களை பார்த்தவர் பின்னர் மராத்தான் மற்றும் அல்ட்ரா-மராத்தான்களில் கலந்துகொண்டார்.
நான் போட்டியிடவோ அல்லது எந்த சாதனையையும் முறியடிக்க ஓடவில்லை. ஒவ்வொரு சவாலிலும் எனது திறன்களை சோதிக்க விரும்பினேன். நம்பிக்கை, ஒற்றுமை, சமத்துவம், அமைதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் செய்தியை என்னால் முடிந்தவரை பலருக்கு பரப்ப விரும்பினேன். இதனை பரப்ப ஓடுவது ஒரு நல்ல வழி என்று நான் நினைத்தேன்.
“எனது இந்த முயற்சி மூலம் மக்களை, குறிப்பாக பெண்களை, அவர்களின் எல்லையை விட்டு வெளியே வரவும், அவர்களின் மனதில் உள்ள தடைகளை நீக்கவும், அவர்களின் கனவுகளைப் பின்பற்றவும் ஊக்குவிக்க விரும்புகிறேன்," என நம்பிக்கை வரிகளை உதிர்க்கும் சுஃபியா வரும் 2024 ஆம் ஆண்டு ‘உலகம் ஒரே குடும்பம்' என்று நோக்கத்தை பரப்பும் விதமாக உலகம் முழுவதும் ஓட இருக்கிறார்.