18 வயதில் கணவனால் கைவிடப்பட்டு தெருவில் ஜூஸ் விற்ற ஆனி; இன்று அதே ஊரின் எஸ்.ஐ.
ரியல் ஹீரோ ஆனி!
18 வயதில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தற்போது அதே ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறியிருக்கும் செயல் தான் நெட்டிசன்கள் பலரும் தற்போது பகிரும் விஷயம்.
கேரளாவில் சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற இடம் வர்கலா. இதே பகுதியைச் சேர்ந்த பெண் தான் ஆனி சிவா. தற்போது 31 வயதாகும் இவர், தனது 18 வயதிலேயே காதல் வயப்பட்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். காதல் திருமணம் தான் என்றாலும், சில மாதங்கள் கூட இவரின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை.
காதல் கணவன் அவரை கைவிட்டுவிட, அப்போது ஆனி ஒரு குழந்தைக்கு தாய். அதுவும் ஆறு மாத பச்சிளம் குழந்தைக்கு. பொது உலகம் பெரிதாக அறியத் தொடங்கும் வயதில் கணவன் கைவிட்டுவிட, பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கே திரும்பிச் சென்றார் ஆனி.
ஆனால், அவர்களும் ஆனியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனிக்கு அப்போது கைகொடுத்தது அவரின் பாட்டி மட்டுமே. 18 வயதில் திருமணத்திற்காக படிப்பை நிறுத்திய ஆனியை மீண்டும் படிப்பின் வாசனையை ஊட்டியிருக்கிறார் அவரின் பாட்டி. ஆதரவற்ற நிலையில் இருந்த தன்னை ஏற்காத இந்த சமூகத்தில் போராட அவருக்கு இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்பதை உணர்த்த ஆனியும் இளங்கலை, முதுகலை படிப்புகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் முடித்தார்.
படிப்பின் இடையே, தனக்கும் தனது குழந்தைக்கும் ஏற்படும் செலவை கவனிக்கும் பாட்டிக்கு உதவும் விதமாக, வர்கலாவில் சிறு சிறு பணிகளை செய்யத் தொடங்கினார்.
லெமன் ஜூஸ் விற்பது, ஐஸ்க்ரீம் விற்பது, மசாலா பொருள்கள் விற்பனை, சலவை சோப்பு விற்கும் ஏஜெண்ட் என வர்கலாவின் சந்து பொந்துகளில் சுற்றி கிடைத்தை வேலைகளைச் செய்து வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்த சமயத்தில் தான் படிப்பை முடிக்கவும், உறவினர் ஒருவர் போலீஸ் வேலை பற்றிக்கூற ஆனி அதற்கு விண்ணப்பித்துள்ளார்.
சில வருடங்கள் முன்பு நிர்கதியாக யாரவது காப்பாற்றமாட்டார்களாக என ஏங்கியிருந்த ஆனி, 2016ல் தனது நம்பிக்கையின் பலனால் வைராக்கியத்தின் விளைவால் மற்றவர்களைக் காக்கும் போலீஸ் அதிகாரியாக ஆனார்.
போலீஸ் கான்ஸ்டபிளாக முதல்முதலாக காவல் பணியில் அடியெடுத்தது வைத்தார். கான்ஸ்டபிள் பணியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான தேர்வில் விண்ணப்பித்தவர் 3 ஆண்டு கடின உழைப்புக்காய் பின் அதில் வெற்றிபெற்றார்.
2019ல் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான பயிற்சியை தொடங்கிய ஆனி, தற்போது பயிற்சி முடிக்கப்பட்டு எந்த வர்கலா தெருக்களில் ஐஸ்க்ரீம், ஜூஸ் விற்றாரோ அதே பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பதவியேற்றுள்ளார். சில நாட்கள் முன் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த விஷயத்தை கேரள காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர ஆனி, மற்றவர்களின் நம்பிக்கையாக மாறியிருக்கிறார் .
வாழ்த்துக்கள் ஆனி!