உயர்தர துணிப்பைகளை உருவாக்கி வருவாய் ஈட்டும் பாலக்குட்டப்பள்ளிப் பெண்கள் குழு!
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் 70 தலித் குடும்பங்கள் அடங்கிய ஒரு குக்கிராமம்தான் பாலக்குட்டப்பள்ளி. இந்தப் பகுதியை எளிதில் கண்டறியமுடியாது. பெண்கள் அடங்கிய குழு ஒன்று இந்தப் பகுதியில் இருந்து துணிப்பைகளை உருவாக்கும் வணிகத்தை உருவாக்கியுள்ளனர். இவர்கள் செயல்படும் அலுவலகம் குறித்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாதபோதும் இவர்களது பைகள் தொலைதூரங்களைச் சென்றடைந்துள்ளது.
பாலக்குட்டப்பள்ளியைச் சேர்ந்த பெண்கள் தங்களது துணிப்பைகளுக்கு யூகே, அமெரிக்கா, கனடா போன்ற பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்களைக் கண்டறிந்தனர். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு ’பாலகுட்டப்பள்ளி பைகள்’ இருப்பதால் உலகம் முழுவதும் இருந்து வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
2010-15 காலகட்டத்தில் ராயலசீமா பகுதியைக் கடும் வறட்சி தாக்கியபோது இந்தப் பெண்கள் வாழ்வாதாரத்திற்காக வருவாய் ஈட்டவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் உருவானதுதான் இந்த வணிக முயற்சி. இந்த குக்கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்கள் விவசாயத்தையே சார்ந்திருந்தது. வறட்சி காரணமாக நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை சதுப்புநிலமாக மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வருவாய் ஈட்ட வழியில்லாமல் போனது.
இந்த சமூகத்துடன் 1995-ம் ஆண்டு முதல் வசித்து வரும் மென்பொருள் பொறியாளரான அபர்ணா கிருஷ்ணன், பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக வருவாய் ஈட்ட போராடி வருவதைக் கண்டார்.
அபர்ணா ’தி நியூஸ் மினிட்’ உடன் உரையாடுகையில்,
”ஆரம்பத்தில் இந்தப் பெண்கள் ஊறுகாய்களை தயாரித்து எங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்தனர். இவர்கள் காட்டில் இருந்து நெல்லிக்காய்களை சேகரித்து அதைப் பொடியாக்கி விற்பனை செய்ய முயற்சித்தனர். இவர்களது திறமையைக் கண்டு மக்களிடம் இவர்களுக்கு உதவுவதற்காக ஆலோசனைகள் கேட்டு வந்தேன். சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒருவர் தையல் பணியைப் பரிந்துரைத்தார்.
”இங்கு வசித்த அன்னபூர்னா என்பவரிடம் தையல் இயந்திரம் இருந்ததால் துணிப்பை ஒன்றைத் தைத்துத்தருமாறு கேட்டுக்கொண்டேன். அந்தப் பை நன்றாக இருந்தது. என் நண்பர் ஹைதராபாத்தில் இருந்த அவரது கடைக்காக 100 துணிப்பைகளை ஆர்டர் செய்தார். அன்னபூர்னா மேலும் மூன்று பெண்களை இணைத்துக்கொண்டு இந்தப் பணியை நிறைவு செய்தார். இப்படித்தான் இந்த முயற்சி துவங்கப்பட்டது,” என்றார்.
பாலக்குட்டப்பள்ளியைச் சேர்ந்த பெண்களின் இந்தப் பயணம் இப்படித்தான் துவங்கியது. பின்னர் உலகத்தரம் வாய்ந்த துணிப்பைகளை தயாரிக்கத் துவங்கினர். 2017-ம் ஆண்டு நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச இயற்கை மாநாட்டிற்காக 1,700 பைகளுக்கான ஆர்டர் கிடைத்தது. இவர்கள் 5 லட்ச ரூபாய் லாபம் ஈட்டினர்.
இதனையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவா கைத்தறி கண்காட்சிக்கும் பைகளைத் தயாரித்தனர்.
தனிப்பட்ட தேவைக்கேற்றவாறான பைகளைப் பொறுத்தவரை, இந்தக் குழுவின் சார்பில் அபர்னாவும் மற்றொரு பெண்ணும் ஆர்டர்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பையின் வகை, வடிவமைப்பு, தேவையான அளவு, முகவரி போன்ற ஆர்டர் தொடர்பான தகவல்கள் ஸ்மார்ட்ஃபோன் வாயிலாக அனுப்பப்பட்டது.
பாலக்குட்டப்பள்ளி பைகள் 35 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை கிடைக்கிறது. இதில் மளிகை பைகள், மாநாடு பைகள், லோகோக்களுடன்கூடிய பைகள், பள்ளிக்குழந்தைகள் உணவு எடுத்துச் செல்ல உதவும் பைகள், நகைகள் வைக்க உதவும் பைகள், ஃபேன்சி பரிசுப்பைகள் என பல வகையான பைகளை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.
இந்தப் பெண்களின் அலுவலக அறையில் அனைத்து துணிகளும் சேமித்து வைக்கப்படுகிறது. ஆர்டர் அடிப்படையில் பெண்கள் ஒவ்வொருவரும் தேவையான அளவில் துணியைக் கட் செய்கின்றனர். பின்னர் வீட்டிற்கு எடுத்துச்சென்று தைக்கின்றனர்.
துணியைத் தைத்தபிறகு பெண்கள் அலுவலகத்திற்கு திரும்புகின்றனர். பின்னர் தர பரிசோதனை மேற்கொள்கப்படுகிறது. பிறகு சில பெண்கள் அருகாமையில் இருக்கும் கிராமத்திற்குச் சென்று பார்சல் அனுப்புகின்றனர். பெரிய ஆர்டர்களுக்கு திருப்பதி வரை சென்று வாடிக்கையாளரின் முகவரிக்கு பார்சலை அனுப்பி வைக்கின்றனர்.
அபர்ணா பைகளை சந்தைப்படுத்த Paalaguttapallee Bags – Dalitwada என்கிற ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளார். வாடிக்கையாளர்கள் பைகளுக்கான ஆர்டர் செய்வதற்கு முன்பு இந்தப் பக்கத்தைப் பார்வையிடலாம்.
பாலக்குட்டுப்பள்ளி பெண்கள் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆர்கானிக் பண்ணைக்கு மிகப்பெரிய ஆர்டரை அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்தும் ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களையும் இந்த முயற்சியில் இணைத்துக்கொண்டுள்ளனர்.
”தற்போது எங்களால் கணிசமான வருவாய் ஈட்டமுடிகிறது,” என்று ’தி இந்து’ உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டார் அன்னபூர்னா.
அபர்ணா தங்களது எதிர்காலத் திட்டம் குறித்து கூறுகையில்,
“பாலக்கட்டுப்பள்ளி பைகளைப் பிரபலமாக்க விரும்புகிறோம். இதற்கு உயர்தரமான, கண்கவரும் வகையிலான பைகளை நாங்கள் உருவாக்கவேண்டும். தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு கடன் வழங்கக்கோரி வங்கிகளை அணுகி வருகிறோம்,” என்றார்.
இவர்களது சமீபத்திய அறிமுகம் காய்கறிப் பைகள். மிருதுவான தக்காளிகளை அதிக எடை கொண்ட உருளைக்கிழங்கு நசுக்கிவிடாதவாறு வைக்கும் வகையில் இந்தப் பைகள் அமைந்துள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA