‘நமக்கான பிரச்சனைகளுக்கு நாமே தீர்வை கொண்டு வரவேண்டும்’ - 20 வயது பழங்குடியின பஞ்சாயத்து தலைவர்!
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவரே நியமிக்கப்படாத கிராமம் அது. நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக ஓரங்கட்டப்பட்டிருந்தது. தான் பிறந்ததிலிருந்து வீட்டில் மின்விளக்கு எரிந்தே கண்டிராத நிலையில், ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் வெளிச்சம் பரவச் செய்துள்ளார் இந்த இளம் பஞ்சாயத்து தலைவர்!
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவரே நியமிக்கப்படாத கிராமம் அது. நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக ஓரங்கட்டப்பட்டிருந்தது. அங்குள்ள மக்கள் மின்சார வசதியின்றி வெளிச்சம் பார்க்காமலே வாழ்ந்து வந்தனர். அப்படியாப்பட்ட சூழலில் பஞ்சாயத்து தலைவராகினார் பாக்யஸ்ரீ மனோகர் லெகாமி.
தான் பிறந்ததிலிருந்து வீட்டில் மின்விளக்கு எரிந்தே கண்டிராத அவர், ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் வெளிச்சம் பரவச் செய்தார். இன்னும் ஏற்படுத்திய மாற்றங்கள் பல. வெறும் 20 வயதிலே அவர் மாற்றம் ஏற்படுத்திய கிராமம் தான் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பாம்ராகர் தாலுகாவில் உள்ள கோட்டி.
பாக்யஸ்ரீ வசிக்கும் கோட்டி கிராமப் பஞ்சாயத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் ஒரு பஞ்சாயத்து தலைவரும் நியமிக்கப்படவில்லை. அவரது தாயார், அங்கன்வாடி ஆசிரியை மற்றும் தந்தை தாலுகா நிலை ஆசிரியர். கிராமத்தில் உள்ள மக்கள், உத்தியோகபூர்வ ஆவணங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும், பதிவுப் படிவங்களை நிரப்புவதற்கும், வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும் உதவி தேவைப்படும் போதெல்லாம் பாக்யஸ்ரீயின் இல்லத்தை நாடுவர். சிறு வயதில் இருந்தே பெற்றோர்களின் உதவும் செயலை பார்த்த அவளும் அப்பணிகளை தொடரத் துவங்கியுள்ளார்.
2019ம் ஆண்டு, பஞ்சாயத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஒரு சில பெண்களில் ஒருவராக இருந்த பாக்யஸ்ரீயை, அவ்வாண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறுப்பையேற்ற சில மாதங்களில் கிராமத்திலுள்ள பெண் பிள்ளைகளின் கல்வி ஊக்குவிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், மின்சார வசதி செய்தல் என பழங்குடியினர்களின் வாழ்வை மேம்படுத்தி வருகிறார்.
"நான் ஒரு தடகள வீராங்கனை ஆக வேண்டுமென்றே விரும்பினேன். ஆனால், எனக்கு 20 வயதாகும் வரை, எங்கள் வீட்டில் நான் ஒரு விளக்கு எரிந்து பார்த்ததில்லை. ஆதிவாசிகளாகிய நாங்கள் அரசாங்கத்தின் எந்த முன்னுரிமையிலும் இல்லை. அதை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பார்த்தேன்," என்று உணர்ச்சி பொங்க கூறினார் பாக்யஸ்ரீ.
பஞ்சாயத்து தலைவராகி கிராமத்தில் மாற்றங்களை செய்திட திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தார் அவர். ஆனால், அப்பணியை அவரால் சுமூகமாக செய்ய முடியவில்லை. பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில், தினமும் கண்ணீருடன் வீடு திரும்பியதை நினைவு கூர்ந்து அவர் பகிருகையில்,
"சிறுவயதில் நாள் முழுவதும் வெளியில் விளையாடுவேன். நான் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்வேன். என் பெற்றோரால் ஒரு மகனைப் போலவே வளர்க்கப்பட்டேன். ஆனால், முதன் முறையாக உத்தியோகபூர்வ இடங்களில், தகாத முறையில் தொடப்பட்டேன், கேலி செய்யப்பட்டேன். பேச முயலும் போதெல்லாம் என் வாயை அடைத்தனர். வாழ்வில் இதுவரை எதிர்கொள்ளாத சம்பவங்கள் என்பதால் அனைத்தையும் வெறித்து மட்டுமே நோக்கினேன்."
வீட்டுக்கு வந்த நடந்ததைக் கூறி அம்மாவிடம் கதறி அழுதுள்ளேன். என்னை அதிலிருந்து மீட்டு அச்சூழ்நிலையை கையாளக் கற்றுக் கொடுத்தார் என் அம்மா. சொல்லும் கூற்றுகளை சத்தமாகவும், நம்பிக்கையுடன் பேசவேண்டும் என்றும், எடுக்கும் முடிவுகளை முதலில் நான் நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முன் எப்போதும் இருந்த பாக்யஸ்ரீ ஆக இனிமேல் இருக்கக் கூடாது என ஊக்கம் கொடுத்தார், என்றார்.
தனியார் கல்லுாரி ஒன்றில் உடற்கல்வியில் பி.ஏ படித்து வரும் இளம் தலைவர், இதுபோன்ற சூழ்நிலைகளை அவ்வப்போது எதிர்கொண்டாலும், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பைதயும் பின்னர் கற்றுக்கொண்டுள்ளார்.
கிராம மக்களுக்கும் எனக்கும் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு. கிராம மக்கள் அவர்களது பெண் பிள்ளைகளது பள்ளி மற்றும் கல்லுாரிப் படிப்புகளுக்காக செலவழிக்க விரும்புவதில்லை.
”பெண்கள் மேஜர் ஆவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்வதைத் தடுப்பதற்காக, அவர்களை எங்கள் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சந்திராபூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளியில் சேர்க்கத் தொடங்கினோம். அவர்கள் விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவதையும், விளையாட்டிலும் ஈடுபடுவும் ஊக்கமளிக்கிறோம்."
அத்துடன் மேற்படிப்புக்கு நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும் பாக்யஸ்ரீ உதவி செய்துவருகிறார். மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிராமத்திலுள்ள பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்தும் கற்பிக்கிறார்.
சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை ஆதாரங்களை அணுகுவது பழங்குடி சமூகத்திற்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. அது போன்ற சூழல்களில் ஏற்படும் தாமதங்களை சரிக்கட்டுவதே அவரது பணி என்பதை பின்னாளில் அவர் உணர்ந்துள்ளார்.
கிராமத்தார் மின்சாரம் வேண்டி விண்ணப்பித்து, 6 மாதங்களாக காத்துகிடந்துள்ளனர். இன்று அவரது அதிகாரத்தின் கீழ் உள்ள 9 கிராமங்களில் 6 கிராமங்களுக்கு மின்வசதி கிடைத்துள்ளது. கிராமத்தின் 150 குடிசை வீடுகள், தண்ணீர் மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய செங்கல் வீடுகளாக புனரமைக்கப்பட்டுள்ளன.
கோட்டி ஊராட்சியில் உள்ள பொது சுகாதார நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லாததால் மருத்துவர்கள் வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதே நிலை தான் பள்ளிக்கூடங்களுக்கும்...
"பொது சுகாதார நிலையங்கள் மருத்துவர்களால் புறக்கணிக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்குப் பிறகு குழந்தைகளுக்கு மலேரியா பாதிப்பு ஏற்படுகிறது. எங்கள் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்துக்கு வருகை தந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, சாலைகள், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற போதுமான வசதிகளை மருத்துவர்கள் கோருகின்றனர். ஆனால், அந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு மேல்மட்டத்தில் தாமதம் ஏற்படுகிறது. எங்கள் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றன,” என்கிறார்.
பள்ளிகளில் எதிர்கொள்ளும் பிரச்சனையும் இதுதான். பெரும்பாலான நாட்களில் கிடைக்கும் ஒரே ஆசிரியர் என் தந்தைதான். யாரும் இங்கு வேலை செய்ய வர விரும்பவில்லை. பலர் நக்சலிசத்தின் மீது பழி சுமத்துகிறார்கள், என்று ஆதங்கத்துடன் பேசிய பாக்யஸ்ரீ, இப்பிரச்னைகளுக்கான தீர்வினை தேடி ஓடாமல், அவரே தீர்வாகியுள்ளார்.
"நமக்கான விஷயங்களை நாமே மாற்றிக் கொள்ள முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன், அது நடக்கும் வரை நான் நிறுத்தமாட்டேன்," என்று அவர் உறுதிக் கொண்டார்.
தள்ளாத வயதிலும் தளராத மனதைரியம்; தனது கிராமத்தை மாற்ற களமிறங்கிய 89 வயது பஞ்சாயத்து தலைவி!