8 மணி நேரம் உட்கார்ந்து பணிபுரிபவரா நீங்கள்? - இதோ சில எளிய ஹெல்த் டிப்ஸ்!
நம்மில் பலரும் தினமும் குறைந்தது 8 மணி நேரமாவது இருக்கையில் உட்கார்ந்தபடி பணிபுரிவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இதனால், ஏற்படும் உடல் ரீதியிலான பாதிப்புகளுக்கு மிக எளிதான தீர்வு ஒன்றை முன்வைக்கிறது ஓர் ஆய்வு முடிவு.
நீரிழிவு நோய் பாதிப்பு, மாரடைப்பு அபாயம், உடல் பருமன் பிரச்சினை, மன அழுத்தம் என பல உடல்நல பாதிப்புகளுக்கு அடித்தளமாக அமைவது நம் வாழ்வியல் முறை. குறிப்பாக, தினமும் 8 மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவோருக்கு இந்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம். இந்தப் பாதிப்புகளில் இருந்து நாம் வெகுவாக தப்புவதற்காக ஓர் எளிய பயிற்சியைப் பரிந்துரைக்கிறது புதிய ஆய்வு முடிவு ஒன்று. அது...
ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறையும் 5 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உடல்நல பாதிப்புகளில் இருந்து வெகுவாக தப்பலாம்.
இதுதான் அந்த ஆய்வு முடிவு. நாம் ஒவ்வொருவரும் எளிதில் பின்பற்றத் தக்க தீர்வைத் தரும் இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் ‘மெடிசின் அண்ட் சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அண் எக்சர்சைஸ்’ இதழில் வெளிவந்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னணியே சுவாரஸ்யமானதுதான்.
ஆய்வு நடந்தது எப்படி?
மத்திய வயது மற்றும் சற்றே வயதான 11 பேரை இந்தப் பரிசோதனைக்கு ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஐந்து நாட்களுமே தினமும் 8 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஒருநாளில், உட்கார்ந்து பணிபுரியும் இந்த 11 பேரையும் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஒரு நிமிடத்துக்கு நடைப்பயிற்சி செய்ய வைக்கப்பட்டது. மற்றொரு நாளில், ஒரு மணி நேரத்துக்கு 5 நிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்படியாக, வெவ்வேறு சோதனை முயற்சிகள் செய்யப்பட்டன.
இந்தப் பரிசோதனைகளின்போது, பங்கேற்பாளர்களிடம் அவ்வப்போது சரியான இடைவெளிகளில் உடலில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், 8 மணி நேரம் உட்கார்ந்து பணிபுரியும் நபர்கள், அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நான்கில் இருந்து ஐந்து நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களின் சர்க்கரை அளவும், ரத்த அழுத்த அளவும் சீராக இருந்தது கண்டறியப்பட்டது.
மன அழுத்தத்துக்கும் பலன்:
உட்கார்ந்து பணிபுரிபவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யும்போது, அவர்களது மன நலனும் மேம்பட்டத்தை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பரிசோதனையின்போது, மன நலன் சார்ந்த சில கேள்வி - பதில் சோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்மூலம், பரிசோதனையின் பங்கேற்றவர்களின் மன அழுத்தம் வெகுவாக குறைந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் காலத்துக்குப் பிறகு, 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' முறையும் அதிகரித்துள்ள சூழலில், 8 மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்தபடி பணிபுரிபவர்கள், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்வதைப் பின்பற்றலாம் என்றும், இதனை ஊழியர்கள் பின்பற்றுவதற்கு நிறுவனங்களும் துணைபுரிய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த நடைப்பயிற்சி உத்தி மூலம் பணித் திறனும் மேம்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமான நடைப்பயிற்சி - முக்கிய டிப்ஸ்:
சரி, இனி தினமும் காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது பற்றி நம்ம ஊரு பொது மருத்துவர்கள் சொல்வதைப் பார்ப்போம்.
தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 1 மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும். அதாவது, தினமும் 3 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கலாம். குறிப்பாக, சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யக் கூடாது.
முழங்கால் வலி, மூட்டு வலி, குதிகால் வலி இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், நெஞ்சு வலி கொண்டவர்கள், அவ்வப்போது மயக்கம் ஏற்படுபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்றுதான், அவர்கள் சொல்கிறபடி நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
சுவாசிக்கச் சிரமம் ஏற்பட்டாலோ, தலைச்சுற்றல் வந்தாலோ, வாந்தி - மயக்கம் போன்றவை வந்தாலோ, நெஞ்சு அடைப்பது மற்றும் நெஞ்சு வலி போன்று உணர்ந்தாலோ, தாடையிலும் தோள்பட்டையிலும் வலியை உணர்ந்தாலோ, இதயப் படபடப்பு அதிகம் இருந்தாலோ, வழக்கத்துக்கு மாறாக அதிக வியர்வை கொட்டினாலோ மருத்துவரின் வழிகாட்டுதலைப் பெற்றுதான் நடைப்பயிற்சியைத் தொடர வேண்டும்.
- மாசு இல்லாத காற்றோட்டம் மிகுந்த திறந்த வெளிப் பகுதிகள், பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்வது நல்லது.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் எம்சிஆர் செருப்புகளோ அல்லது எம்சிபி ஷூக்களையோ அணிந்து நடைப்பயிற்சி செய்யலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சம் பாலோ அல்லது ஜூஸோ அருந்திவிட்டு நடக்கலாம். இதுபற்றி மருத்துவர் ஆலோசனையும் கேட்டுக்கொள்ளலாம்.
- அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரையில் ஏதாவது அரை மணி நேரம் நடக்கலாம்; மாலையில் என்றால், 5 மணி முதல் 7 மணிக்குள் ஏதாவது அரை மணி நேரம் நடக்கலாம்.
- வெறுங்காலில் அல்லாமல், சரியான அளவும் மென்மையும் கொண்ட ஷூவை, வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்ட பருத்தித் துணியாலான லேஸ் அணிந்து நடக்கலாம்.
தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்வதால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்; மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்; உடல் பருமன் குறையும்; சுவாச நோய்களையும் தவிர்க்க முடியும்; மன அழுத்தம் தவிர்க்கலாம்; முழங்கால் வலி தடுக்கப்படுவதுடன் கால் தசைகள் வலுவாகும்.
‘இளம் இந்தியர்களில் அதிகரிக்கும் உடல் பருமன்’ - ஒட்டுமொத்த நலனுக்காக செய்ய வேண்டியவை என்ன?
Edited by Induja Raghunathan