‘இளம் இந்தியர்களில் அதிகரிக்கும் உடல் பருமன்’ - ஒட்டுமொத்த நலனுக்காக செய்ய வேண்டியவை என்ன?
பருமன் என்பது, உடல் சார்ந்த சிக்கல்களை கடந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உடல் பருமன், மனநிலை சார்ந்த கோளாறுகள், கவலை மற்றும் தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்துகிறது.
இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. சராசரியாக 28 வயதை கொண்ட மக்கள் தொகை பலத்தின் காரணமாக, நம்முடைய நாடு உலகின் இளம் மக்கள்தொகையை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தியா வேகமாக வளர்ந்து வந்தாலும், அதன் இளம் ஊழியர்கள் படை உடல் பருமன் உள்ளிட்ட வாழ்வியல் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தான் துரதிர்ஷ்டவசமானது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி,
தனிநபரின் உடல் நிறை குறியீடு (BMI) 25 அல்லது மேல் போகும் போது அவர் அதிக எடை கொண்டவராகவும், 30க்கு மேல் இருந்தால் உடல் பருமன் கொண்டவராகவும் கருதப்படுகிறார். உடல் பருமன் பாதிப்பு அதிகம் இருப்பதால், ஆசியர்களுக்காக இது 3 புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது.
உடல் நிறை குறியீடு மற்றும் எடை இயந்திரம் ஆகியவற்றை கடந்து, இந்த விஷயம், பரவாத தன்மை கொண்ட நோய்களின் பாதிப்பை வரிசையாக உண்டாக்குவதாக அமைகிறது.
உடல் பருமனில் துவங்கி, பக்கவாதம், மாரடைப்பு, தூக்கமின்மை, நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு உண்டாகும் அபாயம் உள்ளது. மந்தமான வாழ்வியல் முறை, தொழில்நுட்பம் மீதான மிகை சார்பு மற்றும் அதிக அழுத்தம் கொண்ட பணிகள் உடல் பருமனை உண்டாக்குகிறது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தேசிய உடல் பருமன் சராசரி அதிகரித்துள்ளது. செயலின்மை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் மட்டுமே இதற்குக் காரணம் இல்லை. ஹார்மோன்கள், சுற்றுச்சூழல், மரபணு, உணர்வு சிக்கல்களும் காரணமாகின்றன.
சேஜ் ஜர்னலில் 2021ல் வெளியான ஒரு ஆய்வு,
மக்கள் தொகையில் 40 சதவீத உடல் பருமன் இருப்பதகாவும், பெண்கள் மற்றும் நகரத்து வாசிகள் மத்தியில் இது அதிகம் என்றும் தெரிவிக்கிறது. 2012 முதல் நகர்புற மக்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
உலக உடல்பருமன் கூட்டமைப்பு, வரும் பத்தாண்டுகளில் பத்தில் ஏழு பேர் உடல் பருமன் கொள்ளும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் பொது சுகாதாரம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றில் உடல் பருமனை முக்கிய பிரச்சனையாக்குகிறது.
பரவாத நோய்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. பரவாத நோய்களை தடுப்பதற்கு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய கண்காணிப்பு வரைவு மற்றும் செயல் திட்டம் (NPCDCS), மானியம் கொண்ட ஊட்டச்சத்து திட்டம், நிட்டி ஆயோக்கின் உடல் பருமன் தடுப்பதற்கான திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
தேசிய குடும்ப சுகாதார சர்வே (NHFS-5) உயர் வருமானம் பிரிவில் 38.6 சதவீதம் பேர் உடல் பருமன் மற்றும் தொடர்புடைய பரவாத நோய்கள் பாதிப்புக்கான அபாயம் கொண்டுள்ளனர். உடல் பருமன் என்பது இனியும் பணக்கார நாடுகள் பிரச்சனை அல்ல. பல வளரும் நாடுகள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. வருமான, வயது மற்றும் வாழ்வியலுடன் இது தொடர்பு கொண்டதாக அமைகிறது.
இளம் மக்கள்தொகை காரணமாக எதிர்வரும் ஆண்டுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமைகிறது. ஆனால், உடல் பருமன், பரவாத நோய்கள் நாட்டின் வளர்ச்சி போக்கிற்கு தடைக்கல்லாக அமைகிறது. ஒரு பொருளாதாரமாக பலவீனமாகும் முன், இந்த பிரச்சனையை கட்டுப்படுத்தியாக வேண்டும்.
பெற்றோரில் ஒருவர் பருமனாக இருந்தால் குழந்தையும் பருமனாக இருக்க 25 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோர் இருவரும் பருமனாக இருந்தால் இது இரு மடங்காகிறது.
- மரபணு மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள், மன அழுத்தம், கவலை, பணி வாழ்க்கை சமநிலை பாதிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாசு உள்ளிட்ட காரணங்கள் இந்த மவுனமான பெருந்தொற்றுக்கு காரணங்களாக அமைகின்றன.
- உடல் பருமனின் தாக்கம், உடல் அளவோடு நின்றுவிடுவதில்லை. மனநிலை சார்ந்த கோளாறுகள், கவலை, தன்னம்பிக்கை குறைவு உள்ளிட்டவை மீதும் தாக்கம் செலுத்துகிறது. இளம் வயதினர் உடல் தோற்றம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.
- கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆகியவை வாய்ப்புகள் சார்ந்தவையாக அமைகின்றன. முதலில் சமச்சீரான ஊட்டச்சத்து உணவு சாப்பிடுவது அவசியம். பழங்கங்கள், காய்கறிகள், விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- சீரான உடல் பயிற்சி மற்றும் போதுமான ஓய்வு, ஊட்டச்சத்துக்கு வலு சேர்க்கும். திரைகளை பார்க்கும் நேரத்தை குறைப்பது மற்றும் மந்தமான செயல்களை தவிர்ப்பது நல்லது.
- தொழில்முறை சார்ந்த ஊட்டச்சத்து வல்லுனரை அணுகி தகுந்த ஊட்டச்சத்து திட்டத்தை பெறலாம். உளவியல் சார்ந்த சிக்கல்கள் இதில் இருந்தால் அதற்கேற்ற ஆலோசனையை நாடலாம்.
- மிதமான பருமனை எதிர்கொள்ள மருத்துவ வழிகள் உள்ளன. ஒரு சில நோயாளிகள், மிதமான பருமனுக்காக எண்டோஸ்கோபிக் சார்ந்த செயல்முறைகளை நாடலாம்.
- மிதமானது முதல் தீவிரமான பருமன் எனில், குறிப்பாக பருமன் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும் போது, அறுவை சிகிச்சை வாய்ப்புகளை நாடலாம். (உடல் நிறை குறியீடு 32 மற்றும் தொடர்புடைய பிரச்சனைகள்). இந்த செயல்முறைகள், கீ ஹோல் அல்லது லேப்ராஸ்கோபிக் சர்ஜரி முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
- பொது ஆரோக்கியம், நலம், ஊட்டச்சத்து சார்ந்த நிகழ்வுகளில் தனிநபர்கள் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். மராத்தான் ஓட்டம் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் குழந்தைகள் பங்கேற்புக்கு ஏற்றவை.
- நிறுவனங்கள் தங்கள் உணவகங்களில் ஆரோக்கியமான உணவு வாய்ப்புகளை வழங்கலாம். விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யலாம்.
பருமன் மற்றும் தொடர்புடைய நோய்கள் நமக்கு பெரும் சவாலாக அமைகின்றன. தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தனியே நிகழ்வதல்ல. இதற்கு அரசு, நிறுவனங்கள் மற்றும் மக்களின் அதிக பங்கேற்பு தேவை. மேம்பட்ட விழிப்புணர்வே உடல் பருமன் பிரச்சனையை இந்தியா எதிர்கொள்வதற்கான வழியாகும்.
எல்லாவற்றுக்கும் மேல், அதீத உடல் பருமனை தீவிர நோய் பிரச்சனையாக கருதுவதும், இது தொடர்பான மனத்தடைகளை அகற்றி தேவையான உதவியை நாடுவதும் அவசியம்.
கட்டுரையாளர்: டாக்டர் விகாஸ் சிங்கால்
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துகள், பார்வை கட்டுரை ஆசிரியருடையவை. யுவர்ஸ்டோரியின் பார்வையை பிரதிபலிப்பவை அல்ல.)
Edited by Induja Raghunathan