பிழைப்புக்கு தனியார் பணி, திருப்திக்கு பரம்பரை பனைத் தொழில் செய்யும் அப்துல்லா!
பனைமரங்களும், பனையேறிகளும் அழிந்துவரும் நிலையில், பழவேற்காட்டைச் சேர்ந்த இவர், மூன்றாம் தலைமுறையாய் பனை ஓலையில் கலைப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார்.
ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக கம்பீரமாய் ஓங்கி உயர்ந்து நின்றன ஆயிரக்கணக்கான பனை மரங்கள். ஆனால், இன்றோ அவை அங்கொன்று இங்கொன்றுமாய் தென்படுகின்றன. பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதால் பனைச்சார்ந்த தொழில்களும் அருகி விட்டன. இந்நிலையிலும், பரம்பரைத்தொழிலை மறக்காமல் அதில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவர், அப்துல்லா. திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டை சேர்ந்த அவர், மூன்றாம் தலைமுறையாய் பனை ஓலையில் கலைப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார்.
“எங்களோட பரம்பரைத் தொழில் இது. 1968ம் ஆண்டுகளில் தாத்தா முதன் முதலில் ஆரம்பித்தார். அப்போது, பழவேற்காட்டில் பெரும்பாலான குடும்பங்கள் இந்தத் தொழில் செய்து வந்தனர். இப்போது 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பனைகளை காக்கவும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவவேண்டும் என்ற நோக்கில் இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகிறேன், என்கிறார் அப்துல்லா.
கண்களைக் கவரும் இந்த கலைப் பொருட்களை உருவாக்கும் மூலப் பொருள்; பனையின் இளம் ஓலைகள். குருத்து ஓலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பனை மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் ஓலைகளை முதலில் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். ஓலை நன்கு காய்ந்த நிலையில் ஓலையின் இரு ஓரங்களும் கடினமானதாக இருக்கும்.
முதலில் ஓலைகளில் உள்ள ஈர்க்குகளை சிறிய கத்தி மூலம் பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் செய்யப்படுகின்ற பொருட்களுக்கு ஏற்ப ஓலைகளை சிறு கத்தி மற்றும் பொருட்கள் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். அடுத்ததாய், நவீன உலகத்தாரை ஈர்க்கும் விதமாக ஓலைகளுக்கு சாயமிடப்படுகிறது. பனை ஓலைகளுக்கு பயன்படுத்தப்படும் சாயங்கள் கடைகளிலே கிடைக்கிறது.
மஞ்சள், சிவப்பு, நீலம் என கிடைக்கும் சாயத்தினை வாங்கி, தேவையான சாயத்தை பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் கலக்கி கொதிக்கவிட வேண்டும். பின், கொதிக்கும் நீரில் ஓலைகளை போட்டு கொதிக்கவிட வேண்டும். இச்செயல்முறையின் போது சாயம் ஓலையில் நன்கு ஏறிவிடும். பின், அதை நிழல் பகுதியில் போட்டு காயவைக்க வேண்டும். இந்த படிநிலையை முடிக்க 2 நாட்களாகும். அதன் பிறகு, கலைப்பொருள்கள் செய்வதற்கு தகுதி பெறுகின்றன பனைஓலைகள்.
“ஒரு பனையில் இருந்து கிடைக்கும் குருத்து ஓலை 50 ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சொந்த பந்தம், அக்கம் பக்கத்தினர் என 30 பேர் இவ்வேலையில் ஈடுபடுகின்றனர். தேவைப்படும் நேரங்களில் பனைஓலைகள் வீட்டுக்கே வந்துகொடுத்துவிடுவார்கள். அவரவர் வீடுகளிலே ஓலைகளில் சாயமேற்றிவிட்டு பொருள்களை செய்து கொடுத்து விடுவார்கள். கூடை, பெட்டி, கிளுகிளுப்பை, வரவேற்பு அலங்காரத் தட்டுகள், ஷாப்பிங் பைகள், சாப்பாட்டு பைகள் என 70க்கும் மேற்பட்ட பொருள்களை தயாரித்து வருகிறோம்,” என்றார்.
தயாரிப்புப் பணிகளை மனைவியும், தங்கையும் கவனித்துகொள்ள விற்பனைகள் மேற்கொள்வதை நான் கவனித்து கொள்கிறேன். கைவினைப்பொருள்கள் கண்காட்சிகளில் பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகிறேன். அதன்மூலம், சில நிரந்தர வாடிக்கையாளர்களும் கிடைக்கின்றனர். ஆர்டர்களும் கிடைக்கிறது. ஆனால், பொருள்களைச் செய்ய ஆட்கள் தான் இல்லை,” என்கிறார் வருத்தமாக அப்துல்லா.
பிளாஸ்டிக் பொருள்களின் வரவுக்கு முன்னால், பனை ஓலைகளின் ராஜ்ஜியம் தான். பனைக் கூடைகள், தொன்னைகள், பெட்டிகள், பாய்கள் என பனைஓலையில் செய்யப்பட்ட பொருள்களே அனைத்து வீடுகளையும் ஆக்கிரமித்து இருந்தன. குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொழிலில் முன்பு ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஈடுபட்டு வந்தனர்.
வருவாய்க்காக மட்டுமின்றி, கலையுணர்வை வெளிப்படுத்தவும், பொழுதுபோக்காகவும் பனைஓலைத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பிளாஸ்டிக் பொருள்களின் வருகையால், கடந்த 25 ஆண்டுகளில் இத்தொழில் படிப்படியாக நலிந்துவந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காட்டூர் மற்றும் ஆந்திராவில் இருந்து தான் பனைஓலைகளை வாங்கி வருகிறோம். ஆனால், சமீப ஆண்டுகளில் அதிகளவில் பனைமரங்கள் அழிக்கப்பட்டதில், பனை ஓலைகளே கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையே நீடிக்கிறது. ஓலை, சாயம், செய்கூலி என உற்பத்தி செலவே அதிகம் வந்துவிடும். மேற்கொண்டு லாபம் வேறு அதிகம் வைத்தால், மக்கள் பனை ஓலைப் பொருள்களையே புறந்தள்ளிவிடுவர்.
மிகக் குறைவான லாபத்தை வைத்து விற்பனை செய்கிறோம். இதனால், தொழிலாளர்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க முடியவில்லை. அவர்களும் அதை புரிந்து கொள்வதால் தான் இத்தொழிலில் நிலைத்து இருக்க முடிகிறது.
இத்தொழிலில் பணிபுரியும் அனைவருமே பெண்கள் தான். வீட்டு வேலை அனைத்தும் முடிந்து பொருள்களை செய்யத் துவங்குவார்கள். அவர்கள் தயாரிக்கும் பொருள்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒருநாளுக்கு ரூ200 வரை சம்பாதிக்கின்றனர். தற்போது ஆன்லைன் மூலம் பனைப்பொருட்களுக்கு ஓரளவு டிமான்ட் இருப்பதால் விற்பனை செய்வது சற்று சுலபமாகியுள்ளது.
நான் இதிலிருந்து வருகின்ற வருமானத்தை நம்பியிருக்கவில்லை. சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். இந்த வருமானத்தை எதிர்பார்த்தால் நிச்சயம் தொழில் செய்ய முடியாது,” என்கிறார் அப்துல்லா.
பனைஓலைகள் எடுக்க பனையேறிகளும் கிடைப்பதில்லை. இப்போது, இரண்டு மூணு பேர் பனை ஓலைகள் எடுத்துத் தருகின்றனர். அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் பனைஏற போகப் போகுவதில்லை. அதுதான் நிலை என்கிறார் வருத்தத்துடன்.
பனை ஓலைத் தொழிலில் ஈடு படுவோரின் உழைப்பு அதிகம். ஆனால், அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால், தொழிலாளர்களின் பொருளாதார நிலை கீழ்நோக்கியே செல்வதால், அவர்களும் முன்னேற்ற பாதையில் பயணிக்க மாதச்சம்பளத்துக்கு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கும் சென்றுவிடுவதால் 3 மாதகாலம் சிரமமாக இருக்கும்,” என்றுக் கூறி முடித்தார் அப்துல்லா.
ஆனால் இத்தனை சிக்கல்கள், பணப்பிரச்சனை இருந்தாலும், தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் பல தலைமுறையினரது பரம்பரைத் தொழிலாக இருந்த வந்த பனைத்தொழிலை முற்றிலும் ஒதுக்கிவிடாமல் தன்னால் ஆன பங்கை ஆற்றும் அப்துல்லா போன்றோர்களால் மட்டுமே இத்தொழில்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இவர்களின் பனை கலைப்பொருட்களை பெற ஃபேஸ்புக் பேஜ்: Pulicat Handicrafts