ரூ.17 லட்ச முதலீடு; 5 டன் கருப்பட்டிகள் இழப்பு: பனைகளைக் காக்க தொழில் தொடங்கிய ஐடி ஊழியர்!
‘காக்க காக்க பனை காக்க’ என்று அழிந்து வரும் மாநில மரம் பனையினை காப்பதற்காக, பல்வேறு இடங்களிலும் இயற்கை ஆர்வலர் பெரும்பாலானோர் பனை விதைகளை விதைத்து வருகின்றனர். பனைகளைச் சார்ந்து வாழ்ந்து வாழ்வதாரத்திற்காக வேறு வழி தேடிக் கொண்டவர்களை, மீண்டும் பனைத் தொழிலை திரும்ப செய்யவைத்தாலே பனைகளை காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் ‘ஜேவி நேச்சுரல் ஃபுட்ஸ் அண்ட் ஹெர்ப்ஸ்’ எனும் நிறுவனத்தை துவங்கி, பனஞ்சக்கரை, தென்னஞ்சக்கரை, தொடங்கி மதிப்பு கூட்டல் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறார் ஐடி ஊழியர் சரவணபவன்.
திருச்செங்கோடைச் சேர்ந்த சரவணபவன் அவரது ஆழ்ந்த சுற்றுச்சூழல் உணர்வால் இயற்கை சார்ந்து வாழ முனைந்ததுடன், அவர் சார்ந்த சூழலை காக்கும் பொருட்டு, அவருடைய தாத்தா காலத்து தொழிலான கருப்பட்டி தயாரிப்பை கையில் எடுத்துள்ளார்.
திருச்செங்கோட்டிலே பிறந்து வளர்ந்த அவர், எம்.இ கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் பட்டதாரி. சென்னையில் ஐடி பணியில் ஈடுபட்டுக் கொண்டே, சொந்த ஊரில் பனையேறிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையிலும், பனைகளை காக்கும் நோக்கிலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதிப்புக் கூட்டல் தொழிலை தொடங்கினார்.
“தாத்தா கருப்பட்டி தொழில் செய்தவர். அப்பா துணை கலெக்டராக பணிபுரிந்ததில், அவருக்கும் பரம்பரை தொழிலுக்கும் ஒட்டு அற்றுபோனது. நானும் ஐடி பணியில் ஈடுபடத் தொடங்கினேன். பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் இயற்கை சார்ந்த ஆர்வம் அதிகமாகி, நம்மாழ்வார் ஐயாவின் வானகத்துக்கு சென்று பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போ, அவரிடம் பரம்பரை தொழில் பற்றி பேசும் போது, நீ அதை எடுத்து பண்ணுனு சொன்னார்.”
வேலை பளு காரணமாக காலம் தள்ளிக்கொண்டே வந்தேன். பின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியின் முழு உந்துதலில் தொழிலை துவக்கினோம், என்று தொழில் தொடங்குவதற்கான ஆதிப்புள்ளியை பற்றி பகிர்ந்தார்.
‘மதிப்பு கூட்டல்’ எனும் மகத்தான தொழில் வடிவம்!
கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பை மேற்கொள்ளாமல், சரவணபவன் கருப்பட்டியில் இருந்து பனஞ்சர்க்கரை ஆக்க முயன்றார். பரம்பரை தொழில் என்றாலும் அதன் ஏ டூ இசட் தெரியாததால், ஒரு ஆண்டு முழுவதும் பல சிரமங்களை சந்தித்துள்ளனர்.
ஏற்கனவே, தொழில் அனுபவம் படைத்த மூத்தோர்களிடம் அறிவுரை கேட்டு, அதன்படி நடந்துள்ளனர். முதலாண்டு முழுவதும் தவறுகளும், திருத்தங்களுடனே கழிந்திருக்கிறது.
ஒவ்வொரு முயற்சி கொடுத்த சறுக்கலுக்கு பின், பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கி நேரடியாய் பனஞ்சக்கரை தயாரிக்கத் தொடங்கினர். இதற்காக, ஊரில் கால் ஏக்கர் நிலப்பரப்பளவில் விறகு சேமிக்கும் கூடம், சோலார் உலர்த்தி அறை, நீராக்களை காய்ச்சும் கொப்பரைகள், கட்டுமானம் என ரூ.17 லட்ச செலவில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
“பதநீரிலிருந்து மதிப்பு கூட்டல் முறையில் என்னவெல்லாம் உற்பத்தி செய்யலாம் என்று சிந்தித்தோம். அப்படி, பனஞ் சக்கரை, கருப்பட்டி நெல்லி, மொலாசஸ், பனஞ்பாகு போன்றவற்றை தயாரித்தோம். ஆனாலும், பதநீர் ஆறு மாதக் காலங்ளே கிடைக்கக்கூடியது. ஏற்கனவே, சீரான வருமானமின்றி பனையேறிகள் வேறு பணிகளே நாடத் துவங்கிவிட்டனர். அதனால், பனை மரம் ஏறும் தொழிலை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தென்னைகளில் இருந்தும் நீராக்களை பெற்று தென்னஞ்சக்கரை தயாரிக்க முடிவு எடுத்தோம்,” என்கிறார்.
தென்னையும், பனையும் ஏறத்தாழ ஒரே குணாதிசியங்களைக் கொண்டவை என்பதால், பனையில் கிடைத்த பட்டறிவைக் கொண்டு, தென்னஞ்சக்கரையை நேர்த்தியாக உற்பத்தி செய்துள்ளனர். அதிகாலை 4 முதல் 5 மணிக்கும் மரம் ஏறுபவர்கள் மரமேறி தெளுவுகளை சேகரித்தபின், வண்டியில் சென்று அவர்களிடமிருந்து மொத்த தெளுவுகளையும் பெறுகின்றனர்.
அடுத்ததாக, கொப்பரையில் ஊற்றி காய்ச்சுவதற்கு முன்னதாக மூன்றடுக்கு வடிகட்டும் முறைக்கு உட்படுத்தப்படுகிறது. பின், கொப்பரையில் ஊற்றி சரியான பதத்திற்கு வரும்வரை காய்ச்சுகின்றனர். தொடர்ந்து மூன்று மணிநேர தெளுவு காய்ச்சப்பட்டு பின், சோலார் உலர்த்தியால் ஒரு மணிநேரம் உலர்த்தி மொறுமொறுப்பான நிலையில் தென்னஞ்சக்கரை தயாராகிறது.
இனிப்பான இழப்பு... டன் கணக்கில் வீணாகிய கருப்பட்டி!
தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பனஞ்சக்கரைகளுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. அங்கெல்லாம், பனந்தோப்புகளைக் காணலாம். பனையேற்றம் என்றாலே பயத்தை அளிக்கும் பணி என்ற நிலைமை அங்கில்லை. 5 அடிக்கு ஒரு மரம், மரத்துக்கிடையே பாலம் என்று வேலையை எளிமைப்படுத்தி வைத்துள்ளனர். இங்கு மரங்களுக்கிடையே கிலோ மீட்டர் தூரம்.
சுற்றுவட்டாரத்தில் 30கி.மீக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பனை மரங்களில் இருந்து பதநீரை பெறுகிறோம். மொத்தமாக சேகரிக்கவே நேரம் பிடிக்கும். ஒரு வேளை டிராபிக்கில் மாட்டிக் கொண்டால், அன்றைய நாளின் பதநீர் புளித்து பாழாகிவிடும். இதுபோன்று ஒரு முறை பதநீர் சேர்க்கையில் நேர்ந்ததில், 1 டன் கருப்பட்டியாக வேண்டிய பதநீர் வீணாகிப் போனது.
“பதநீர் சேகரிப்பது மட்டுமின்றி, உலர வைப்பதிலும் அதிக சிரமங்கள் உள்ளன. கருப்பட்டி தன்னுள் ஈரப்பதத்தை கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. சென்னையில் வெள்ளம் வந்த சமயத்தில், வீட்டில் 3 டன் கருப்பட்டி இருப்பில் இருந்தது. வீட்டிற்குள் தண்ணீர் வந்து பாதிப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மழைநீரின் ஈரப்பதத்திலே கருப்பட்டி அனைத்தும் உருகத் தொடங்கிவிட்டது. முழு இழப்பு தான்.
ஏற்கனவே, கருப்பட்டியிலிருந்து பனஞ்சக்கரை தயாரிக்கும் முயற்சியில் 500 கிலோ கருப்பட்டிகளை இழந்ததால், நிலைமையை கையாள பழக்கப்படுத்தப்பட்டு இருந்தோம்,” என்றார் சிறு புன்னகையுடன்.
நோ வெஸ்டேஜ்; நோ லாஸ்!
நான்கு ஆண்டு முடிவில் இப்போது தான், இழப்பின்றி சீரான நடைமுறையில் தொழிலை நடத்திவருகின்றனர். பெரும் உற்பத்தியை நோக்கி நகருகையில், லாப கணக்கீடுகளை பற்றி சிந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உழைத்து வரும் அவர்கள் பனைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதையே உழைப்புக்குக் கிடைத்த ஊதியமாக கருதுகின்றனர்.
“ஆறு மாதத்திற்கு தான் பனஞ்சக்கரை தொழில். ஏகப்பட்ட இழப்பீடுகள் வேறு. அதையும் தாண்டி தொழில் நிலைத்து நிற்பதற்கான காரணங்கள் நம்மாழ்வாரின் வார்த்தைகளும், மனைவின் ஒத்துழைப்பும் தான். தொழில் கிடைக்கும் வருமானத்தை எதிர்பார்த்தால் என்றோ துவண்டிருப்போம். மனைவி தொழிலை கவனித்து கொள்ள, நான் சென்னையில் பணிபுரிகிறேன்,” என்கிரார் சரவணபவன்.
எங்களுடைய யூனிட்டில் 6 பேர் பணிகிறார்கள். 20 மரம் ஏறுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழி செய்துள்ளோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாசனம் செய்யாமலேயே, கரும்புக்கு இணையாகச் சர்க்கரை தரக்கூடிய மரம் பனை. ஆனால், அதன் மகத்துவம் அறியாது இருக்கிறோம். நீர் வளத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
ஒரு பனையை பாதுகாப்பதன் மூலம் அதை சார்ந்துள்ள பறவைகளான கழுகு, தூக்கணாங்குருவி, போன்றவைகள் பாதுகாக்கப் படுகின்றன. அதைவிட, கரும்பு பயிரிட்டு ஒரு கிலோ சர்க்கரை தயாரிக்க 300லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்கின்றனர். ஆனால், பனஞ்சக்கரை தயாரிக்க 60லிட்டர் தண்ணீரே செலவாகிறதாம். மறைமுகமாய் எவ்வளவு தண்ணீர் சேகரிக்கப் படுகிறது? இதுவே எங்களுக்கான உத்வேகத்தை அளிக்கிறது, என்கிறார்.
ஒன்றை சார்ந்து மற்றொன்று... ஒன்றால் உருவான மற்றொன்று!
நாள்ஒன்றுக்கு தோராயமாக 60லிட்டர் பதநீர், 60லிட்டர் தென்னங்தெளுவு காய்ச்சுவதால், நாள்தோறும் விறகுகளும் கிலோ கணக்கில் எரிக்கின்றனர். அதன் மிச்சமாய் தங்கும் சாம்பல்களும் ஏராளம். நாள்தோறும் கிலோ கணக்கிலான சாம்பல்கள் வீணாகுவதை தடுக்க, அதை கொண்டு பாத்திரம் துலக்கும் டிஷ் வாஷ் பவுடர் தயாரித்துள்ளனர்.
அதற்கு ‘பேக் டூ நேச்சர்’ டிஷ் வாஷ் பவுடர் என்று பெயரிட்டு சந்தைப்படுத்தி வருகின்றனர். தென்னை பனை சார்ந்த பொருள்ளை ‘மை பாம்’ என்ற பெயரில் சந்தைப்படுத்தும் அவர், ‘Back to Nature’ என்ற பிராண்டின் கீழும் பல பொருள்களைத் தயாரிக்க துவங்கியுள்ளனர்.
“சோலார் டிரையர் இருப்பதால், அதையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பில், மனைவி அவருடைய பக்குவத்தில் சமையல் மசாலாக்களை தயாரித்து வருகிறார். பருப்பு பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி, செம்மண் கட்டிய துவரம்பருப்பு போன்றவற்றை தயாரிக்கிறார். உள்ளூரிலே விற்பனை நன்றாக உள்ளது. சென்னையிலும், தங்களுடைய தயாரிப்புகளை மட்டும் விற்பதற்கென முகளிவாக்கத்தில் ‘கருப்பட்டி கடை’ என்ற பெயரில் கடை திறந்துள்ளனர்.
பல மாநிலங்களில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சி, உணவு திருவிழாக்கள் மற்றும் ஷாப்பிங் நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் எங்கள் தயாரிப்புகள் மக்களை அடைந்து வருகின்றன. இத்தனை கடின உழைப்பு மாத ஊதியமாய் 60,000ரூபாய் முதல் 70,000 கிடைக்கும். ஆனால், இவை அனைத்திற்கும் அரணாய் இருப்பது மனைவி உஷாராணி,” என்று கூறி முடித்தார் சரவணபவன்.