World Liver Day: கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க நாம் செய்யவேண்டியவை என்ன?
மூளைக்கு அடுத்தபடியாக கல்லீரல் நமது உடலின் இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பு. அதை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என டாக்டர் ஆலோசனையை கேளுங்கள்.
சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக மக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவற்றில் கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளும் ஒன்றாகும்.
கல்லீரலை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி ’உலக கல்லீரல் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க நமது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் கணைய நோய்கள் – அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது குறித்து டாக்டர் ஜாய் வர்கீஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
”மூளைக்கு அடுத்தபடியாக கல்லீரல் நமது உடலின் இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பு ஆகும். நோய் எதிர்ப்புச் சக்தி, வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சேமித்தல் தொடர்பான பல முக்கியப் பணிகளை கல்லீரல் மேற்கொள்கிறது. இந்த நிலையில், கல்லீரலை முறையாக பராமரிக்காவிட்டால், அது எளிதில் பாதிக்கக்கூடும் அபாயம் உள்ளது,” என்கிறார்.
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானதாகும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குதல், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இருப்பினும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கவழக்கங்கள் ஆகியவை கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்த கட்டுரையில், ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்கவும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறும் சில எளியமுறைகள் வருமாறு:
ஆரோக்கியமான உணவு
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க ஆரோக்கியமான உணவு அவசியம் ஆகும். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் அதே நேரத்தில், பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டி–ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளும் கல்லீரலை பாதுகாக்க உதவும். கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்கும் சில உணவுகள் குறித்த விவரம் வருமாறு:–
- கீரைகள்: பசலைக்கீரை, முட்டைக்கோஸ் மற்றும் கொலார்ட் கீரைகளில் குளோரோபில் நிறைந்துள்ளது, இது ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது.
- கோஸ் வகைகளை சேர்ந்த காய்கறிகள்: ப்ரோக்கோலி, காலிபிளவர் மற்றும் பிரஸ்ஸல்ஸ் போன்றவற்றில் கல்லீரலில் உள்ள நச்சுகளை நடுநிலையாக்க உதவும் பொருட்கள் உள்ளன.
- பெர்ரி பழங்கள்: பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் கல்லீரலை சேதமடையாமல் பாதுகாக்கும்.
- கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் சியா விதைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது, இது கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
வழக்கமான உடற்பயிற்சி
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வது கட்டாயம் ஆகும். வழக்கமான உடற்பயிற்சியானது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இது கல்லீரல் சரியாக செயல்பட உதவுகிறது. கொழுப்பு, கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் வேகமான நடைபயிற்சி, ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்
அதிகப்படியான மது குடிக்கும்போது அது கல்லீரல் பாதிப்பு மற்றும் ஈரல் அழற்சிக்கு வழிவகுக்கும். நீங்கள் மது குடிப்பவராக இருந்தால் அதை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முறை மிகக் குறைந்த அளவும், ஆண்களாக இருந்து இரண்டு முறை மிகக் குறைந்த அளவும் எடுத்துக் கொள்ளலாம். இடைவெளி இல்லாமல் குடிக்கும்போது அது உங்கள் கல்லீரலை வெகுவாக பாதிக்கும்.
நச்சுகளின் வெளிப்பாட்டைத் தவிர்த்தல்
ரசாயனம் மற்றும் மாசு போன்ற நச்சுகள் கல்லீரலை பாதிக்கும். எனவே, அவற்றை குறைக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்:
• இயற்கையான துப்புரவுப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
• ரசாயனம் நிறைந்த இடங்களில் பணிபுரியும்போது பாதுகாப்பான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
• புகை பிடித்தல் மற்றும் புகை பிடிக்கும் இடங்களில் இருப்பதை தவிர்த்தல்.
• சுத்தமான தண்ணீரை குடித்தல்.
தடுப்பூசி போடுங்கள்
ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி போன்ற வைரஸ் தொற்றுகள் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். வைரஸ்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது உங்கள் கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
ஆரோக்கியமான கல்லீரலை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அவசியம் ஆகும். இந்த வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மற்றும் கல்லீரல் பாதிப்பு மற்றும் நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி, மது அருந்துவதில் கட்டுப்பாடு, நச்சுகள் வெளிப்பாட்டை தவிர்த்தல், வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக தடுப்பூசி போடுதல் ஆகியவை மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.
Edited by Induja Raghunathan