சிட்டுக்குருவிகள் அழிய செல்ஃபோன் டவர்கள் காரணமா? - அறிக 10 தகவல்கள் | World Sparrow Day
மார்ச் 20 - உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படும் வேளையில், சிட்டுக்குருவிகள் குறித்த நம்பகமான 10 தகவல்களை அறிவோம் வாருங்கள்.
சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கிலும், இந்தச் சின்னப் பறவைகளைக் காக்கும் நோக்கிலும் இன்று (மார்ச் 20) ‘உலக சிட்டுக்குருவி தினம்’ (World Sparrow Day) கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகள் குறித்து நாம் இதுவரை படித்த - கேட்ட தகவல்களில் உறுதி செய்யப்படாதவற்றையும் சுட்டிக்காட்டி, நாம் அறிய வேண்டிய 10 தகவல்களைப் பார்ப்போம்.
* உண்மையில், ‘உலக சிட்டுக்குருவி தினம்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளோ அல்லது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளோ அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரைச் சேர்ந்த பறவை ஆர்வலர் முகமது திலாவர் என்பவரின் ‘நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி’ என்ற அமைப்பின் முன்னெடுப்பில் 2010-ல் ‘உலக சிட்டுக்குருவி தினம்’ உருவாக்கப்பட்டு, பிற்காலத்தில் உலக அளவில் பிரபலம் அடைந்தது.
* பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது உண்மைதான். ஆனால், இந்தப் பறைவியன் அழிவின் விளிம்பில் இல்லை என்பதே உண்மை. இந்தியப் பறவைகளின் பாதுகாப்பு நிலையை மதிப்பிடும் ‘State of India’s birds’ என்கிற அறிக்கையை பல ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு, அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கின. அந்த அறிக்கையில், ‘இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சில நகரங்களில் குறைந்து காணப்பட்டாலும், நாடு தழுவிய அளவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சீராக இருக்கிறது.
* செல்ஃபோன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்ய எந்த ஓர் அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்கிறது ‘State of India’s birds’. செல்ஃபோன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்ற வாதமும் அறிவியல்பூர்வ உண்மை இல்லை. சிட்டுக்குருவிகள் மீதான மக்களின் அக்கறையைக் கூட்டும் நோக்கில், முகமது திலாவர் போன்றவர்களால் பரப்பப்பட்ட உறுதிசெய்யப்படாத தகவல்தான் ‘செல்ஃபோன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன’ என்பது.
* 2021 தரவுகளின்படியே உலகம் முழுவதும் 150 கோடிக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தக் கூடும் என்றே நம்பப்படுகிறது. இந்தியாவிலும் பொதுமக்களின் பங்களிப்பு காரணமாக சிட்டுக்குருவிகளின் எண்க்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
* எண்ணிக்கை குறைய காரணங்கள்? - நகரமயமாதல்தான் முக்கியக் காரணம். சிட்டுக்குருவிகள் வசிக்க ஏற்ற கூரை, ஓட்டு, காரை வீடுகள் எண்ணிக்கை குறைந்து கான்கிரீட் வீடுகளே அதிகம் இருப்பதால் சிட்டுக்குருவிகள் கூடுகள் கட்டவும், முட்டையிட்டு குஞ்சுப் பொறித்து இனப்பெருக்கம் செய்யவும், வசிக்கவும் ஏற்ற சூழல் இப்போது அதிகம் இல்லை.
* ஏன் அவசியம்? - மனிதர்களுக்கு பல்வேறு நோய்களுக்கு காரணமான கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம். கொசு முட்டை, புழு, கொசுக்களையும் சிட்டுக்குருவிகள் உணவாக உட்கொள்கின்றன. குறிப்பாக, விதைகளை பரப்புவது மற்றும் உணவுச் சங்கிலியிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
* இயற்கை ஆர்வலர்களின் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் இப்போது கான்கிரீட் வீடுகளிலும் சிட்டுக்குருவிகள் வசிக்கும் வகையில் மண்பானைகளில் ஓட்டையிட்டும், அட்டைப் பெட்டிகள் வைத்தும் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கேற்ற சூழலை பொதுமக்களே ஏற்படுத்துகின்றனர். இந்தப் போக்கு நல்ல பலன்களைத் தந்து வருகிறது.
* சிட்டுக்குருவிகளைக் காப்பதிலும் வளர்ப்பதிலும் ஆர்வம் மிகுந்த பொதுமக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் துளையிட்ட மண் பானைகள், அட்டைப் பெட்டிகளை வைத்து, அவற்றுக்கு உணவாக கம்பு, திணை, குடிக்க தண்ணீர் ஆகியவற்றை வைத்து வருகின்றன. இதுவும் நன்மை பயக்கும் அம்சமாக உள்ளது.
* சிட்டுக்குருவிகளின் ஒலியைக் கேட்பதால் மக்களின் மன அழுத்தம் குறைவதுடன், இயற்கையுடன் இணைந்து வாழும் மகிழ்ச்சியும் கிடைப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கின்றன. இவ்வாறாக, சிட்டுக்குருவிகளை வளர்த்துப் பாதுகாக்கும் நமக்கும் நன்மைகள் பல என்பது கவனிக்கத்தக்கது.
* சீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட் முன்முயற்சி: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்மற்றும் சுந்தரம் - கிளேட்டன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு செயல்பாட்டுப் பிரிவான ‘ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் ட்ரஸ்ட்’ மூலம் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தனது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சிட்டுக்குருவிகள் அதிகம் கூடுக்கட்டும் கிராமங்களைக் கண்டறிந்து, அங்கு சிட்டுக்குருவிகள் வசிக்கும் வகையிலான கூடு கட்டும் பெட்டிகளை ஆயிரக்கணக்கில் எஸ்.எஸ்.டி விநியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு வெளியே ஜன்னலுக்கு மேற்பகுதியிலோ அல்லது அருகில் இருக்கும் உயரமான மேற்கூரைப் பகுதிகளிலோ போதுமான தீவனத்துடன் இந்தப் பெட்டிகள் வைக்கப்படும். இதுவரையில், ஏறக்குறைய 100 கிராமங்களுக்கு இந்தக் கூடு கட்டும் பெட்டிகளை விநியோகம் செய்துள்ளதாம். இதற்கு நல்ல பலன் கிட்டியுள்ளதாம். வர்த்தக நிறுவனங்கள் இதுபோல் முன்னெடுப்புகளைச் செய்வதும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Edited by Induja Raghunathan