U-18 பிரிவில் தங்கம் வென்று சாம்பியன் ஆன பிரக்யானந்தா!
10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற பெருமையை பெற்ற சென்னைச் சிறுவன் பிரக்யானந்தா இப்போ 14 வயதில் செய்திருக்கும் சாதனையைப் பாருங்க!
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வதுண்டு அது அப்படியே பொருந்திப் போவது சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரக்யானந்தாவிற்கு என்று சொல்லலாம். மூன்றரை வயதில் தனது சகோதரி செஸ் விளையாடுவதை பார்த்து ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட பிரக்யானந்தா 10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றதோடு, 14 வயதில் அண்டர் 18 பிரிவில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி முதன்முதலாக இந்தியாவில் நடைபெற்றது. சுமார் 450 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டிகள் மும்பையில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் பிரக்யானந்தா 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றார். பிரகா’விற்கு (பெற்றோர் செல்லமாக அழைக்கும் பெயர்) வெற்றி கிடைக்குமா என்று அனைவரும் டென்ஷனாக பார்த்துக் கொண்டிருக்க 14 வயது பிரகாவோ எந்த பதற்றமும் இன்றி நிதானமாக யோசித்து விளையாடி வெற்றியை தனதாக்கி இருக்கிறார்.
செஸ் ஆட்டத்தில் தொடக்கம் முதலே வெற்றிகளை குவித்த பிரகா 11 சுற்றில் 7ல் வெற்றியும் 4 சுற்றை சமனும் செய்திருக்கிறார். 10வது சுற்றில் லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்ட பிரக்யானந்தா, 63வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் மொத்தம் 8.5 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பைப் பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் 8 புள்ளி பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 11 மற்றும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த வாலண்டின் பக்கெல்ஸ்க்கு எதிராக விளையாடி 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இந்த அடிப்படையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார் பிரக்யானந்தா. பிரகா தங்கம் வென்றது போலவே இந்தியாவிற்கு மற்ற பிரிவுகளில் 3 வெள்ளிப்பதக்கம் உள்பட 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
தங்கப்பதக்கம் வாங்கிக் கொள்ள மேடையை நோக்கி வெற்றி நடை போட்ட போது முகத்தில் எந்த கர்வத்தையும் வெளிக்காட்டாமல் புன்முறுவலோடு இந்திய தேசியக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நின்றார் பிரகா. இவர் உலக சாம்பியனாகி இருப்பதற்கு செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“வாழ்த்துக்கள் பெருமையாக இருக்கிறது” என்று தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.
விஸ்வநாதன் ஆனந்த் தன்னை பாராட்டி இருப்பது அடுத்து வரும் தொடர்களில் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் என்று பிரக்யானந்தா புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். செஸ் சர்வதேச புள்ளிகளை அதிகரிப்பதே இப்போதைய நோக்கம் என்றும் தற்போதைய வெற்றி தனக்கு தன்னம்பிக்கை கொடுத்திருப்பதாகவும் பிரகா கூறி இருக்கிறார்.
சென்னை பாடியில் வசித்து வரும் பிரக்யானந்தாவின் குடும்பம் மிகவும் சாதாரணமான நடுத்தர வர்க்கக் குடும்பம். அவருடைய தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர். வங்கியில் பணியாற்றும் ரமேஷ்பாபுவின் ஒற்றை வருமானத்தை வைத்தே குடும்பத்தை நகர்த்த வேண்டும். பிரகாவின் சகோதரி வைஷாலி செஸ் பயிற்சி பெற்று 14 வயதுக்குக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார்.
வைஷாலி செஸ் பயிற்சி பெறுவதைப் பார்த்து மூன்றரை வயதிலேயே தானும் ஆர்வத்துடன் அக்காவோடு சேர்ந்து செஸ் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் பிரகா. ஆனால் இவரின் செஸ் ஆர்வம் ரமேஷ்பாபுவிற்கும் அவருடைய மனைவி நாகலட்சுமிக்கும் முதலில் அச்சத்தைத் தந்திருக்கிறது.
குறைவான வருமானத்தை வைத்து 2 பேருக்கும் செஸ் பயிற்சி அளிக்க முடியுமா என்று யோசித்திருக்கின்றனர். எனினும் பிரக்யானந்தாவின் ஆர்வம் அவர்களை மனம் மாற்ற பிரக்யானந்தாவிற்கு செஸ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர் ரமேஷ்பாபு, நாகலட்சுமி தம்பதி.
"நான் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் நீண்ட பயணங்களை மேற்கொள்ள முடியாது. எனவே பிரக்யானந்தாவை அவருடைய அம்மாதான் செஸ் போட்டிகளுக்கு அழைத்து செல்வார் பிரகாவின் வாழ்விலுள்ள இரு பெண்களுக்கும் அவன் மிகுந்த நன்றிக் கடன் பட்டுள்ளான்," என்கிறார் ரமேஷ் பாபு.
2017ம் ஆண்டு முதல் பிரக்யானந்தாவிற்கு செஸ் போட்டியில் ஏறு முகமாகவே இருந்திருக்கிறது. புவனேஷ்வரில் நடந்த KIIT International Festival of Chessல் செஸ் மாஸ்டருக்கான 2 பட்டங்களைப் பெற்றவர் மூன்றாவது முறையாக, சர்வதேச செஸ் மாஸ்டருக்கான பட்டத்தை தனது 10வது வயதில் பெற்றார். இதன் மூலம் உலகிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா என்ற உலக சாதனையை பெற்றார்.
பிரக்யானந்தா தன்னுடைய முதல் IM பட்டத்தை பிரான்சில் நடந்த கேன்ஸ் ஓபன் போட்டியிலும், இரண்டாவதை ரஷ்யாவில் நடந்த ஏரோபிளாட் ஒபனில் பெற்றார். மூன்றாவதை தற்போது புவனேஷ்வரில் பெற்றுள்ளார். விளையாட்டு வீரர்களின் திறமையை மதிப்பிடும் ELO முறையில், 2400 புள்ளிகளைப் பெற்று சர்வதேச செஸ் மாஸ்டராக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றார் பிரக்ஞானந்தா .
எனக்கோ என் மனைவிக்கோ செஸ் விளையாட்டில் ஏபிசிடி கூட தெரியாது. பிரக்யானந்தா, வைஷாலியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது ஆர்வமும் அவர்களுடைய பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் சாரும் தான். அவர் 24*7 இவர்களின் சந்தேகங்களுக்கு விடை தருவார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது பிரக்யானந்தா செஸ் போர்டில் விளையாடுவார். எஞ்சிய நேரத்தில் மற்றவர்களின் விளையாட்டுகளை கவனித்து நுணுக்கங்களை கற்றுக்கொள்வார். மனம் செஸ் போர்டு பக்கம் கவனம் செலுத்தவில்லை என்றால் வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடுவார் என்று மகனின் அன்றாடப் பணிகளை பெருமையோடு பட்டியலிடுகிறார் ரமேஷ்பாபு.