‘கொரோனாவுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் தொடங்கும்’ - பிரதமர் மோடி
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்க இருக்கிறது, என பிரதமர் தேசிய அணு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தேசிய அணு மாநாட்டை தொடங்கி வைத்தார்; தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
நேற்று மத்திய அரசு, இந்தியாவில் தயாரித்த ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் Covaxin தடுப்பூசியையும் மற்றும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைகழகம் துணையுடன் சீரம் நிறுவனம் உருவாக்கிய Covishield கொரோனா தடுப்பூசியையும் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் அனுமதி கொடுத்தது. இதனை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, முதலில் 'மேட் இன் இந்தியா' கொரோனா தடுப்பூசி உருவாகk காரணமாக இருந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதன்பின் பேசியவர்,
"உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கானப் பங்களிப்பை அளித்த இந்திய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகத் தேவையை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், உலக அளவில் அதை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைய வேண்டும்.
எண்ணிக்கை எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோன்று மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரமும் முக்கியம். தற்சார்பு இந்தியா திட்டத்தை உயர்த்தும் அளவுக்கு நம் பொருட்களின் தரம் இருக்க வேண்டும்,” என்றார் மோடி.
ஒரு நாடு அறிவியலில் அதிக கவனம் செலுத்துகிறது, அதன் தொழில்நுட்பம் மேலும் வலுப்பெறுகிறது என்பதை கடந்த காலம் நமக்குக் கற்பிக்கிறது. இந்த தொழில்நுட்பம் புதிய தொழில்களுக்கு உதவுகிறது மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த சுழற்சி நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது.
நாங்கள் இந்திய தயாரிப்புகளால் உலகை நிரப்ப விரும்பவில்லை, ஆனால் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இந்தியத் தயாரிப்புகளின் ஒவ்வொரு வாடிக்கையாளரின் இதயங்களையும் நாம் வெல்ல வேண்டும், என்றார்.
”நம் நாட்டில் உள்ள சேவைகளின் தரம் மற்றும் பொது மற்றும் தனியார் துறை தயாரிப்புகள் உலகில் இந்தியாவின் வலிமையை தீர்மானிக்கும்," என்று பேசினார்.
தகவல்: பிடிஐ