‘8 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து Covishield தயாராக உள்ளது’ - சீரம் இன்ஸ்டிடியூட் அதார் பூனாவாலா
இரண்டு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செயல்படுத்தப்பட இருக்கும் விதம் தொடர்பாக ஒரு பார்வை.
நட்டின் முதன்மை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான, இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல், மத்திய மருந்துகள் தர நிர்ணய கட்டுப்பாடு அமைப்பு (Central Drugs Standard Control Organisation CDSCO) தனது சிறப்புக் குழுவின் (SEC), பரிந்துரையை ஏற்று, கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அனுமதி அளிகப்பட்டுள்ளன.
அரசுத் திட்டம்
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ‘கோவிஷீல்ட்’ (Covishield) தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் AstraZeneca இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் இந்திய வடிவமாகும்.
தற்போது இந்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுள்ள இந்த தடுப்பூசி மருந்து 80 மில்லியன் (8 கோடி) அளவுக்கு கையிருப்பில் வைத்துள்ளதாக, Serum Institute of India-ன் சிஇஒ அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடுப்பூசியான ‘கோவாக்சின்’ (Covaxin) ஐதராபாத்தின் பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆய்வு கழகத்துடன் (ICMR), இணைந்து உருவாக்கியது. இதுவும் சில நாட்களில் கிடைக்கத்துவங்கும்.
செயல்முறை
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில், Pfizer-BioNTech மற்றும் Moderna தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரத்துவங்கிவிட்டன. இந்தியாவில் இந்த செயல்முறை சில வாரங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வார காலத்தில் நாடு தழுவிய தடுப்பூசி போடுவது துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் தடுப்பூசி
இந்தியாவில் தடுப்பூசி அளிப்பது, முதலில் தன்னார்வச் செயலாக அமையும். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலையில் இருந்தும், சுகாதாரப் பணியாளர்கள் முதல் கட்டமாக தடுப்பூசி பெறுவார்கள் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 2 கோடி முன்னிலை ஊழியர்கள் இதில் அடங்குவர். இந்த பணியாளர்களுக்கு தடுப்பூசி இலவசமாக அளிகப்படும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியிருந்தார்.
முதல் கட்டத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி பேர் தடுப்பூசி பெற முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவக் கோளாறுகள் கொண்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களும் இதில் அடங்குவர்.
முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த கட்ட செயல்பாடு பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. முதல் கட்ட தடுப்பூசியின் போதே, மற்ற பிரிவினருக்குமான தடுப்பூசி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி கிடைப்பது முக்கிய விஷயமாக இருக்கும் எனத்தெரிகிறது. சீரரம் இன்ஸ்டிடியூட், தடுப்பூசி தயாரிப்பை மேம்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில், இந்தியாவில் மற்ற சில தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசியின் விலைப் பற்றி பேசிய அதார் பூனாவாலா,
“அரசு எங்களிடம் இருந்து ரூ.200-க்கு Covishield மருந்துகளை வாங்கி மக்களுக்கு இலவசமாக செலுத்த உள்ளனர், அதே போல் தனியார் மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோருக்கு ரூ.1000 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
தடுப்பூசி போடும் திட்டத்திற்கான தயாரிப்புப் பணிகள் பல வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இரண்டு சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஜனவரி இரண்டாம் தேதி, அனைத்து மாநிலங்களிலும் 125 மாவட்டங்களில் ஒத்திகை நடைபெற்றது.
தடுப்பூசி அளிக்க, 96,000 தடுப்பூசி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், 719 மாவட்டங்களில், 57,000 பேருக்கும் பயிற்சி அளிகப்பட்டுள்ளது. 75 லட்சம் பயனாளிகள், Co-WIN platform-ல் பதிவு செய்து கொண்டுள்ளனர். இது தடுப்பூசி இருப்பு பற்றிய தகவல் அளிக்கிறது.
தடுப்பூசி பெற 50 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தேர்வு செய்ய அரசு, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வாக்காளர் பட்டியலை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி இரண்டு முறை அளிக்கப்படும். முதன்முறை போடப்பட்டு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறை அளிக்கப்படும். இரண்டாவது டோஸ் போட்டவுடன் ஆண்டிபாடி செயல்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரே தடுப்பூசி மருந்தை இரண்டு முறையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ள முடியாது.
செய்தி: இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில்-சைபர்சிம்மன்