Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

எல்லாம் தரும் வரம் ’யோகா’

எல்லாம் தரும் வரம் ’யோகா’

Thursday June 21, 2018 , 4 min Read

இந்தியாவின் மிக அரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது யோகா. யோகாவால் எண்ணிலடங்கா உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது இப்போது பலருக்கும் தெரிந்துள்ளது. இந்தியா மட்டும் இல்லாமால் வெளிநாடுகளில் கூட தற்போது யோகா கலையை மிகவும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். 

உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும் யோகா கலை, அதோடு நின்று விடாமல் மன அழுத்தத்தை நீக்கி மன அமைதியை கொடுக்கிறது. போதிய தூக்கத்தைத் தருவதோடு சுவாச சம்பந்தமான பிரச்சனைகளையும் நீக்குகிறது.

யோகா என்பது உடலை, மனதை, உள்ளத்தை ஒருங்கிணைத்து, தன் கட்டுப்பாட்டில் வைத்து, அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்கிறது. அத்துடன் சமுதாயத்தோடு ஒற்றுமையாக, அமைதியாக வாழச் செய்து, உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அன்பளிக்கிறது.

image
image


காலம், மனிதர்களுக்கு ஆண்டாண்டு காலமாய் வழங்கிவரும் ஆரோக்கிய சுரபிதான் ‘யோகா’. உள்ளே போகப்போக அதன் தூரம் இன்னும் நீள்கிறது; எல்லை விரிகிறது; அனுபவம் புதிதாகிறது. 

ஒரு நாளை உற்சாகமாக ஆரோக்கியமாக தொடங்கிவிட்டால், தொடரும் எண்ணங்களும், செயல்களும் அதன் தாக்கத்துக்கு உள்ளாகும். இதன்மூலம் வாழ்வில் ஆழமான மாற்றங்கள் நிகழும்.

இயந்திரமாய்த் தொடங்கிய நாள், மனிதத்தன்மைகளை விட்டு தூரமாகப் போகும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அன்றைய நாளின் எண்ணங்களும், உணர்வுகளும் தூங்கும்போதும் தொடரும். எனவே, ஒரு நாளின் இறுதியில், சேர்ந்த சோர்வுகளை, மன அழுக்குகளை, உடல் உபாதைகளை நீக்கவும் யோகா உதவுகிறது. அதோடு, நல்ல தூக்கத்தையும் தருகிறது.

சரியான தூக்கம் இல்லாமல் இன்று பலர் உடல், மனநோய்களுக்கு ஆளாகி துன்பப்படுவது இயல்பாகி விட்டது. அதனால், மாலை நேர யோகப் பயிற்சியும் இன்றைய வாழ்க்கைக்கு முக்கியம். எந்த நிலையிலும் மனிதர்களின் வலியையும் பிரச்சினைகளையும் குறைத்து, அவர்களை ஆரோக்கியமானவர்களாக, நம்பிக்கை மிகுந்தவர்களாக மாற்றுகிறது யோகா.

யோகாவில் உடலுக்கு, மூச்சுக்கு, மனதுக்கு, வாழ்க்கை ஒழுக்கத்துக்கு, ஞானத்துக்கு என்று நிறைய பயிற்சிகள் விரவிக் கிடக்கின்றன. உடலை அசைக்காமல் பெரும் ஆனந்தத்தை அதிகாலையில் பெற முடியும். மூச்சின் சரியான பயிற்சியால் முழு மனமும் கைக்குள் இருக்கும். ஆசனங்களால் முழு உடலும் தயாராகி எதற்கும் ‘முடியும் முடியும்’ என்று சொல்லும்.

மனதில் வேலை செய்யக்கூடிய ஒரு பயிற்சி முறைதான் யோகா. ஒருவருக்கு மனம் சரியாக இருந்து விட்டால், எதையும் சரிசெய்து கொள்ளலாம். அது சரியில்லை என்றால், எது இருந்தும் பயனில்லை. யோகப் பயணத்தில் மன அமைதி ஏற்படும்போதே, எண்ணக் கூட்டங்களின் துரத்தல்கள் குறையும், சுயத்தையும் சுற்றத்தையும் சரியாகப் பார்க்கத் தொடங்கலாம். எங்கும் பரவிக் கிடக்கும் கோபத் தணல் சற்றே குறையத் தொடங்கும்.

யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும். யோகாவின் சக்தியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இதை அனுபவித்தால் தான் அதன் நன்மைகளை உணர முடியும்.

இரத்த அழுத்தத்தை சீராக்குதல், மன அழுத்தத்தை குறைத்தல், கொழுப்புத் தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது. உடல் எடையை குறைப்பதுடன், இந்த யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது. இவை அனைத்தையும் விட யோகா மன அமைதியை முழுமையாக கொடுக்கின்றது. இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம்.
image
image


யோகா நாடித் துடிப்பை சீராக வைக்கிறது. சீரான மூச்சுக்கு உதவுகிறது. கூடும் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.எப்போதும் புத்துணர்ச்சி அளிக்கிறது. உடல், மனது உறுதியாகி எதையும் தாங்கும், நோய்களை அண்ட விடாத எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் என்ற கவலையை போக்கி, வயதாவதை தள்ளிப் போடுகிறது. உடலில், ரத்தத்தில் தேவையற்ற, கெட்ட கொழுப்பை அண்ட விடாமல் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தொடர்ச்சியான யோகாசனப் பயிற்சிகளின் காரணமாக உடலில் முறுக்கு தன்மை (Stiffness) அறவே நீக்கப்பட்டு, நல்ல வளைந்து கொடுக்கும் தன்மை (Flexibility) அதிகரிக்கிறது. முக்கியமாக முதுகு எலும்புகளின் தண்டுவடம், அனைத்து எலும்புகளின் இணையும் இடங்கள், தசைகள் நீட்டிச் சுருங்கி, வலுவடைந்து, உடலில் எந்தவிதமான வலிகள், வேதனைகள் இல்லாமல் வாழ உதவுகிறது.

பிராணாயாமத்தின் காரணமாக நுரையீரல் பலப்பட்டு அதிக ஆக்சிஜன் பெறப்பட்டு மூச்சு சீராக, சிறப்பாக, அதிக பலத்தோடு செயல்படுகிறது. இதயம் பலமடைந்து, உடலின் அனைத்து நரம்பு மண்டலங்களை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்கிறது.

யோகா தரும் நன்மைகள் :

கர்ப்ப காலம் : கர்ப்பத்தின் போது சிறந்த உடலமைப்பை பெற யோகா செய்ய வேண்டும். யோகா செய்வதை வழக்கமாக்கி கொண்டால், சோர்வைப் போக்கி, டென்ஷனை தவிர்த்து, திசுக்களை தளர்வடைய செய்து, இரத்தத்தை பெருக்கி, செரிமான தன்மையை அதிகப்படுத்தி, நரம்புகளை சீராக்க முடியும். மேலும் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் இரத்த சோகை, முதுகு வலி, கால் வலி, செரிமானம் கெடுதல் போன்றவை சீரடையும். யோகா செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

மன அமைதி : யோகா சுவாகக் கோளாறை சரிசெய்து, மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகின்றது. அதிலும் அன்றாடம் சிக்கலுக்குக் உள்ளாக்கப்படும் மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கின்றது. யோசிக்கும் திறனுக்கும், உருவாக்கும் திறனுக்கும் உள்ள சமநிலையை உருவாக்கும் தன்மை யோகாவிற்கு உள்ளது.

உடலுக்கு ஊக்கம்: நோயற்ற உடலே ஆரோக்கியமானது என்று இல்லை, மூளைக்கும் உணர்வுக்கும் சமநிலை இல்லாத நிலையும் ஆரோக்கியமற்றதே. யோகா செய்வதால் முழுமையான உடல் அமைப்பையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். மேலும் நோயற்ற வாழ்வை மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் கொண்டாட முடியும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்: யோகாவின் பல வித அமைப்புகள், சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும்.

தொப்பைக்கு பைபை : தொப்பையற்ற வயிற்றை பெறலாம் என்று அறியும் முன்னர், எந்த பயிற்சியாலும் இந்த தன்மையை எளிதில் பெற முடியாது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். நவுக்காசனா (Naukasana), உஷ்த்ராசனா (Ushtrasana), க்ரஞ்சஸ் (crunches) போன்ற யோகாசனங்களை தினமும் செய்தால், தொப்பையற்ற வயிற்றை பெறலாம். இதனுடன் சீரான உணவு முறையையும் பின்பற்ற வேண்டும்.

இதயம் : யோகாவின் முலம் இதய நோய்களை கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகின்றது.

வலி நிவாரணி: யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளி இருந்து விடுபடலாம். உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களும், டிரைவர்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் முதுகு தண்டுகளில் பிடிப்புகளை போக்க முடியும்.

சீரான சுவாசம் : மூச்சு பயிற்சியால் சீரான சுவாசத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களை சீர்படுத்தி சீரான சுவாசதத்தைப் பெறலாம். அதிலும் ஆழமான மூச்சு பயிற்சி உடல் வலிமையை கூட்டி மன அழுத்தத்தை போக்குகின்றது.

image
image


சமநிலை : வயதான காலத்தில் உடல் தளர்வடைந்து கீழே விழ நேரிடும். அதற்கு யோகா மிக அவசியம். கீழே விழுதல், முதுகு வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் யோகா நிவாரணம் அளிக்கின்றது. இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக செயல்படுகின்றது.

மன அழுத்தத்தை போக்கும்: கடினமான வேலையை செய்தவுடன் யோகா செய்தால், மன அழுத்தத்தை போக்கி கொள்ள முடியும். யோகா மட்டும் இல்லை மற்ற உடற்பயிற்சிகளாலும் மன அழுத்தத்தை போக்க முடியும். யோகாவை சீரான முறையில், தொடர்ச்சியாக செய்து வருபவர்கள் சந்தோஷமாகவும் மன நிம்மதியுடனும் இருக்கிறார்கள் எனும் யோகா ஆசிரியர் ஏயம், அதற்கு முக்கிய காரணம் அவர்கள் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பது தான் என்கிறார். 

சர்வதேச யோகா தினமான இன்று முதல் உடலை ஆரோகியமாகவும், மன அமைதியுடன் வைத்திருக்கவும் நாமும் யோகா பயிற்சியை தொடங்கலாமே...

கட்டுரையாளர்: ஜெசிக்கா