குக்கிராமத்தில் இருந்து உலக யோகா போட்டி வரை: துபாய் செல்ல நிதி திரட்டும் இளம் சாதனையாளர் காமாட்சி!
ராமனாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி, துபாயில் நடக்கவிருக்கும் உலக யோகா போட்டியில் கலந்துக் கொள்ள தீவிரமாக பயிற்சிப்பெற்று வருகிறார். ஆனால் போட்டியில் பங்கு பெற காமாட்சிக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கவில்லை, இதனால் Edudharma கூட்டுநிதி மூலமாக நிதி திரட்டி வருகிறார்.
“வரும் 10 ஆம் தேதிக்குள் முழு பணம் கிடைத்தால் மட்டுமே போட்டிக்கு தேவையான மற்ற முக்கிய முறைகளை செய்ய முடியும்,” என நம்முடன் பேசுகிறார் காமாட்சி.
பொசுகுடிப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் சித்திரைச்சாமி மற்றும் கூத்தாயி தம்பதிகளின் மகளான காமாட்சியின் குடும்பம் ஓட்டு வீட்டில் வசிக்கின்றது. தற்போது சென்னையில் உள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலையில் எம்.எஸ்சி. யோகா முதலாம் ஆண்டு படித்து வருகிறார் அவர். தாஸ்மி பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்புக்கு இணைந்த போதே யோகாவிற்கு அறிமுகமானார் இவர். அதற்கு முன்பு பள்ளி முடிக்கும் வரை யோகா பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் காமாட்சிக்கு இல்லை. ஆனால் மூன்று ஆண்டு இளங்கலை படிப்பை முடிப்பதர்க்குள், யோகா மீது அதிக ஆர்வம் பெற்று, தீவிரமாக யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
“சர்வாங்காசனம், விருசாஷஹாசனம் உள்ளிட்ட 500-க்கும் மேலான ஆசனங்களை நேர்த்தியாக செய்வதில் வல்லவரான காமாட்சி, கல்லூரி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை குவித்துள்ளார்.”
மூன்றே ஆண்டு பயற்சிபெற்று தாய்லாந்தில் நடை பெற்ற முதல் பசிபிக் ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் கலந்துக்கொண்டு வெள்ளி பதக்கத்தை வென்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்தார்.
பின்னர் தென்னிந்திய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார், அதோடு மாநில அளவில் நடைபெற்ற 30-க்கும் மேலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
இத்தனை பதக்கங்களை வென்ற இருபது வயதான காமாட்சி தற்போது உலகளவில் நடக்கவிருக்கும் யோகா போட்டியில் கலந்து கொள்ள தீவிரமாக இருக்கிறார். டிசம்பர் 29-30, 2017 துபாயில் நடக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ள 65,000 ரூபாய் வரை காமாட்சிக்கு தேவைப் படுகிறது. ஸ்பான்சர்ஷிப் கிடைக்காத காரணத்தினால் நிதி திரட்டி வருகின்றனர். இது பற்றி பேசிய காமாட்சியின் தந்தை சித்திரைச்சாமி,
“கஷ்டப்பட்டு தான் காமாட்சியை கல்லூரியில் படிக்கவைக்கிறோம். இப்போது துபாய் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ஆனால் அதற்கு செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை,” என்கிறார்.
எங்கள் ஊர் அமைச்சரிடம் மனு கொடுத்து உள்ளோம், அவரை சந்திக்க உள்ளேன். நல்லது நடக்கும் என எதிர்ப் பார்கிறேன்,” என்கிறார் நம்பிக்கையுடன்.
இந்தியாவில் இருந்து உலகளவில் நடக்கும் போட்டிக்கு செல்லும் முதல் போட்டியாளர் இவர். நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்த காமட்சிக்கு, நாட்டுக்கு பெருமை சேர்க்க ஓர் வாய்ப்பளிப்போம்.
நீங்கள் காமாட்சிக்கு உதவ நினைத்தால் நிதியுதவி செய்ய: Edudharma