உலகின் நம்பர் 1 மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து முன்னிலை வகிக்க காரணங்கள் என்ன?

நெகிழ்வான பணிக் கொள்கை, சுகாதாரம், இலவச கல்வி, கூடுதல் சலுகைகள் மூலம் குடிமக்கள் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வைத்துள்ள பின்லாந்து, மக்களைப் பரவசத்தில் ஆழ்ததுவதில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

உலகின் நம்பர் 1 மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து முன்னிலை வகிக்க காரணங்கள் என்ன?

Friday March 31, 2023,

3 min Read

தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த உள்நாட்டு தனிநபர் உற்பத்தித் திறன் மற்றும் வருவாய், சமூக ஆதரவு, ஆயுள் நீட்டிப்பு, சுதந்திரம், பெருந்தன்மை, மிக முக்கியமாக மிக மிகக் குறைவான ஊழல் ஆகிய அளவுகோல்களின்படி பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் இரு நாட்டு மகிழ்ச்சித் தரநிலையும் சரிந்துள்ளன. ரஷ்யா 72-வது இடத்திலும் உக்ரைன் 92-வது இடத்திலும் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் நீட்டித்து தக்கவைப்பு வளர்ச்சித் தீர்வுகள் நெட்வொர்க் இந்த மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பின்லாந்தில் ஊழல் குறைவு என்பதோடு குற்றங்களும் குறைவு. இதனால் மக்கள் தங்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.

finland

பின்லாந்து தொடர்ந்து முதலிடம் வகிப்பது எப்படி?

முதலில் பின்லாந்தில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர்களே இருப்பதால் வறுமை விகிதம் மிகவும் குறைவு. மேலும், மனித வாழ்க்கையின் பொருண்மையியல் பிரதானங்களான உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை ஆகியவற்றில் நிறைவு பெற்றுள்ளது பின்லாந்து. செல்வந்தர்கள் பொதுவாக தங்கள் பணத்தைக் காட்டத் தயங்கும் நாடு இது. சமுதாயத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும், வீடற்ற நிலை முற்றிலுமாக அகற்றப்படும் நிலைதான் பின்லாந்தை முன்னுக்குத் தள்ளுகிறது.

finland

கல்வி முறையை எடுத்துக்கொண்டால், ஐரோப்பாவிலேயே பின்லாந்தில்தான் மிகவும் சமத்துவமான நிலை நிலவுகிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளது. மேலும், இதுவே இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.

மகிழ்ச்சி என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

மகிழ்ச்சியை அளவிட முடியுமா? எந்த அளவுகோல்களின்படி மகிழ்ச்சியின் தரநிலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன? ஒவ்வொருவரும் மகிழ்ச்சி என்பதை வேறு வேறு விதமாகப் புரிந்து கொள்கின்றனர். பொதுவாக வாழ்க்கையில் நம் தேவைகள் பூர்த்தி அடைந்து விட்டால் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்று பொருள் என்று ஒரு விளக்கம் உள்ளது.

நார்டிக் நாடுகள் அவற்றின் குறைந்த குற்ற எண்ணிக்கைகள், இலவச கல்வி மற்றும் நிச்சயமாக மருத்துவப் பராமரிப்பு காரணமாக மகிழ்ச்சி அறிக்கையில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளன.

மேலும், பல விஷயங்களை நாம் தொடர்ந்து சொல்ல முடியும். அறிவியலின் படி, நமக்கும் நம் அன்புக்குரியவர்களுக்கும் அதிக ஓய்வு நேரம் என்பது நம்மை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, டென்மார்க்கில் ஒரு முழுநேர வேலை வாரம் 37 மணி நேரங்களைக் கொண்டுள்ளது. பின்லாந்தில் உள்ள ஊழியர்கள் தங்கள் வேலை வாரத்தை சுமார் மூன்று மணி நேரம் குறைக்க உரிமை உண்டு.

புள்ளிவிவரங்களின்படி, சராசரி அமெரிக்கர் வாரத்திற்கு 44 மணி நேரம் வேலை செய்கிறார்; இது ஒரு நாளைக்கு 8.8 மணி நேரம்.

உலகின் பத்து மகிழ்ச்சியான நாடுகள்:

பின்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, நார்வே, நியூஸிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் உலகின் டாப் 10 மகிழ்ச்சியான நாடுகளான உள்ளன.

finland

இந்த நார்டிக் நாடுகள் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் என்ன?

தங்கள் அரசாங்கங்களிடமிருந்து அவர்கள் பெறும் உறுதுணை காரணமாக இந்த நாடுகள் தொடர்ந்து மகிழ்ச்சிக் குறியீட்டில் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளில் இலவச சுகாதாரம், இலவச கல்வி ஆகியவை சிறந்து விளங்குகின்றன. மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளன. மகிழ்ச்சியின் இன்றியமையாத காரணிகளில் ஒன்றான வேலை - சொந்த வாழ்க்கைக்கு இடையிலான சமநிலைக்கு வரும்போது, இந்த நாடுகளில் மக்களின் மன அழுத்த நிலை குறைவாக உள்ளது.

மகிழ்ச்சியான நாடுகள் போல் மிகவும் சோகமான, மகிழ்ச்சியற்ற நாடுகளும் உள்ளன. இதில், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா, போட்ஸ்வானா, லெசோதோ, மலாவி, ஹைட்டி, டான்சானியா, ஏமன், பருண்டி ஆகிய நாடுகள் அடங்கும்.

இதற்கான காரணங்கள் வராலற்று ரீதியானதுதும் கருத்தியல் சார்ந்ததும் ஆகும். ஆப்கானிஸ்தானில் குறைந்த ஆயுட்காலம் மற்றும் குறைந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை அதன் மோசமான நிலைக்கு முக்கியக் காரணங்கள்.

finland

மேலே சொன்ன எல்லாவற்றிலிருந்தும், பின்லாந்து ஏன் மிகவும் மகிழ்ச்சியான நாடு என்பது தெளிவாகிறது. நெகிழ்வான பணிக் கொள்கை, சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மற்றும் கூடுதல் சலுகைகள் மூலம் குடிமக்கள் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் உள்ளனர். உலகை மேலும் பரவசத்தில் ஆழ்த்த மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமாக பின்லாந்து திகழ்கிறது.

உலகின் பெரும்பான்மையான மக்கள் விரும்பும் மகிழ்ச்சியை பின்லாந்து மக்கள் கொண்டுள்ளனர். இந்த நாடு உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சுமுகமான அரசியல் சூழ்நிலை, சுமுகமான எளிய வாழ்க்கை, கல்வி, சுகாதாரம் போன்ற வாழ்வியல் அம்சக் குறியீடுகள், கூச்சல் குழப்பமற்ற கலாச்சார பின்னணி, சிக்கலற்ற வரலாற்றுப் பின்னணி ஆகியவையும் மகிழ்ச்சி நாடுகளின் முக்கியக் காரணிகளாகும்.


Edited by Induja Raghunathan