Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பயாலஜி பாடத்தை பயமில்லாதலஜியா கற்றுத் தரும் இளம் பொறியாளர்கள்!

செல்கள், டிஎன்ஏ, ரத்த ஓட்டம், இதய துடிப்பு என பயாலஜி பாடத்தில் தியரிகளாக படித்து போர் அடிப்பதாகக் கருதும் மாணவர்களுக்கு விளையாட்டாய் அறிவியல் கற்றுத் தருகிறார்கள் சென்னையைச் சேர்ந்த இளம் ஜெனிடிகல் பொறியாளர்கள்.

பயாலஜி பாடத்தை பயமில்லாதலஜியா கற்றுத் தரும் இளம் பொறியாளர்கள்!

Monday December 02, 2019 , 3 min Read

உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் வாழ்க்கைச்சுழற்சியையும் தியரிகளாகவும், வரைபடங்களாகவும் கற்றுத்தரும் கல்வி முறையாக பயாலஜி பாடப்பிரிவு இருக்கிறது. பயாலஜி என்றாலே பயம் என பல அடி தூரம் பறந்தோடும் குழந்தைகளையும் ஜாலியாக சயின்ஸை புரிந்து கொள்ள உதவுகிறது சென்னையைச் சேர்ந்த இளம் மரபணு பொறியாளர்களின் புதிய ஸ்டார்ட் அப்.


செயல்வழிக் கல்வியே மாணவர்களுக்கு அதிக புரிதலை ஏற்படுத்தும் என்பதால் அதனைச் சார்ந்த செயலிகள், மேம்பட்ட கற்றல் வழிமுறைகள் தினந்தோறும் உதயமாகிக் கொண்டிருக்கிறது. பயாலஜி பாடத்திற்கு அப்படியான ஒரு புதிய கற்றல் முறை இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு இந்த பாடத்தை எளிமையாக்கும் முயற்சியில் களமிறங்கினர் மரபணு பொறியியல் முடித்த இளைஞர்கள்.

Cambrionics

கேம்பிரயானிக்ஸ் லைஃப் சயின்ஸ் குழுவினர், சுதர்ஷன் வரதராஜன் (நடுவில் இருப்பவர்)

'கேம்பிரயானிக்ஸ் லைஃப் சயின்ஸ்' (Cambrionics life science) எப்படி உதயமானது என்பது குறித்து அதன் நிறுவனரும், சிஇஓவுமான சுதர்ஷன் வரதராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.


நான் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஜெனிடிகல் என்ஜினியரிங் படித்தேன். நானும் என்னுடைய நண்பர்கள் சாய்கணேஷ், வசந்தகுமார், ராகுல், காட்வின் ஆகியோர் ஆராய்ச்சிப் படிப்புகளில் ஆர்வம் கொண்டிருந்தோம். ஜெனிடிக் மற்றும் லைஃப் சயின்ஸை எளிமையான முறையில் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது படிக்கும் காலத்தில் இருந்தே எங்களுக்கு ஆசை இருந்தது.


கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே மூன்றாமாண்டில் ஒரு நாள் பயிலரங்கம் நடத்தி அதில் மாணவர்களுக்கு லைஃப் சயின்ஸ் பற்றி லைவ் வகுப்பு எடுத்தோம். லைவ் என்றால் தோல் மெலியதாக இருக்கும் உயிரினங்களை வைத்து அதன் உறுப்புகள் செயல்பாடுகளை மைக்ரோஸ்கோப் மூலம் மாணவர்கள் நேரில் பார்த்து புரிந்து கொள்வதாகும்.

பயாலஜி என்றால் சோதனைக் கூடங்களில் மட்டுமே கற்று புரிந்து கொள்ள வேண்டியது என்பதை மாற்ற வேண்டும் என்று நாங்கள் எடுத்த முதல் முயற்சியே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார் சுதர்ஷன்.

கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே ஜெர்மனியில் படிப்பதற்கான ஃபெல்லோஷிப் கிடைத்ததால் நான் அங்கே சென்றுவிட்டேன். என்னைப் போன்றே என்னுடைய நண்பர்களும் வெவ்வேறு நாடுகளில் ஆராய்ச்சி தொடர்பான ஒராண்டு படிப்பை மேற்கொண்டனர். எங்களுடைய பட்டப்படிப்பு முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எங்களின் கனவுத் திட்டமான Cambrionics life science ஸ்டார்ட் அப்பை தொடங்கினோம் என்கிறார் சுதர்ஷன்.

கேம்பிரயானிக்ஸ்

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிலரங்கங்கள் நடத்தி பயாலஜியை பயமில்லாதலஜியாக மாற்றி வருகிறார்கள் இந்த மரபணு பொறியாளர்கள். 2018, ஆகஸ்ட் 27ம் தேதி நாங்கள் முதன் முதலில் எங்கள் ஸ்டார்ட் அப்பின் தொடக்கமாக முதல் பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்தோம். முதல் வகுப்பிற்கே 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.


Zebra fish, dislophia வைத்து அவர்களுக்கு லைவ் டெமோ கொடுத்த போது ஆச்சரியத்தில் அவர்களின் கண்கள் விரிந்து மனதிற்குள் அவை தெளிவாக பதிவதைப் பார்க்க முடிந்தது. மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் ஆர்வத்துடன் பயிலரங்கத்தில் பங்கேற்றனர்.

எங்களுக்கான ஊக்கமே ஒவ்வொரு பயிலரங்கத்தின் முடிவிலும் மாணவர்களின் பெற்றோர் எங்களைத் தேடி வந்து தெரிவிக்கும் கருத்து பின்னூட்டங்களே, நாங்கள் தொடர்ந்து உற்சாகத்தோடு செயல்படுவதற்கான வைட்டமின் டானிக் என்கிறார் சுதர்ஷன்.

மூளையை மட்டுமே மூலதனமாக வைத்து ஸ்டார்ட் அப் தொடங்கியுள்ளனர் இவர்கள். கல்வி சார்ந்த வகுப்புகள் என்பதால் பெரிய அளவில் எந்த முதலீடும் எங்களுக்குத் தேவைப்படவில்லை. கல்லூரி படித்த காலத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டை காலி செய்ததில் கிடைத்த ரூ.30,000 வைத்து முதல் பயிலரங்கத்தை நடத்தினோம். இந்தப் பயிலரங்கில் உயிரினங்கள் பற்றி லைவ் டெமோ மட்டுமல்ல, மாணவர்களே மைக்ரோஸ்கோப்பை எப்படி தயாரிப்பது என்று அவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம்.

பயிலரங்கத்தில் பங்கேற்க ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 -ரூ. 1500 வசூலித்தோம். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து அடுத்த பயிலரங்கத்தை நடத்துவது என்று அடுத்தடுத்த வகுப்புகளை நடத்தி வருகிறோம் என்கிறார் சுதர்ஷன்.

ஐஐடி மாணவர்களுக்கு நாங்கள் எடுத்த ஜெனிடிகல் வகுப்பு பிரலமடைந்த நிலையில் ஐஐடி கோரக்பூரில் ஒரு வகுப்பிற்கு அழைப்பு வந்தது. இதே போன்று அடுத்த மாதத்தில் பஞ்சாபில் ஒரு பயிலரங்கம் நடத்தித் தர அழைப்பு வந்துள்ளது என்று ஓராண்டில் கேம்பிரயானிக்ஸ் வளர்ச்சி கண்டு வரும் விதத்தை விவரிக்கிறார் சுதர்ஷன்.
கேம்பிரயானிக்ஸ்

கேம்பிரயானிக்ஸில் 2 முறைகளில் பயாலஜி கற்றுத் தரப்படுகிறது. Teaching Alternate Biological Sciences (T A B S) மற்றும் Curiosity – Let’s Talk Science.


T A B S-ல் நேரடி உயிரினங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சி அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளை வழங்குகின்றனர். இது நடுநிலைப்பள்ளிக் குழந்தைகளுக்கு விஞ்ஞானம், கற்றல் பற்றி உற்சாகப்படுத்தவும், விஞ்ஞானியாக இருப்பது போன்ற உணர்வையும் வழங்குகிறது. லைவ் டேமோவால் குழந்தைகள் ஆண்டு முழுவதும் கற்றுக்கொண்டதை விட ஒரே நாளில் அதிக அறிவியலைக் கற்றுக் கொள்ள முடியும்.


அதேபோல், கியூரியாசிட்டி - லெட்ஸ் டாக் சயின்ஸ் என்பது இளைஞர்கள் ஒழுங்கமைக்கும் மற்றொரு அற்புதமான நிகழ்வு.

சென்னையில் உள்ள உள்ளூர் கஃபேக்களுக்கு புகழ்பெற்ற விஞ்ஞானிகளைக் கொண்டுவருவதன் மூலம் சமகால அறிவியல் முன்னேற்றங்களை பொதுமக்கள், உயிரியலாளர்கள் மற்றும் இளம் விஞ்ஞான மனங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் கருத்துப் பரிமாற்றங்களை செய்ய உதவுகிறது.

சென்னையில் டே கேர் மையங்களுடன் கைகோர்த்து வார இறுதி நாட்களில் பயிலரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடங்கப்பட்ட ஓராண்டில் சென்னை மட்டுமின்றி கோவை மற்றும் பஞ்சாபிலும் பயிலரங்கங்களை நடத்தி இருக்கின்றனர் இவர்கள். பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு தொடர்ந்து பயிலரங்கங்களை நடத்தப் போவதாகக் கூறும் சுதர்ஷன் அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்துவதே Cambrionics life scienceன் நோக்கம் என்கிறார்.