நாடகக் கலை மூலம் அறிவியலை விளக்கும் அமைப்பு தொடங்கிய இளைஞர்!
கலை மற்றும் நாடகம் மூலம் ஏரோஸ்பேஸ் அறிவியலை விளக்கும் ’வாயுசாஸ்த்ரா’ எனும் நிறுவனத்தை நிறுவியுள்ளார் பொறியாளர் ஜகதீஷ்.
தொழில்நுட்பம் வளர நாம் படிக்கும் முறை, பாரம்பரியம் என சகலமும் மாறிக்கொண்டே வருகிறது. தொழில்நுட்பத்தை நாடி இங்கு பலர் ஓடிக் கொண்டு இருக்கையில், நம் முன்னோர்கள் பயின்ற இயல் இசை நாடகத்தை கருவாய் கொண்டு அறவியலை சுலபமாக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஜகதீஷ் கண்ணா.
கலை மற்றும் நாடகம் மூலம் ஏரோஸ்பேஸ் அறிவியலை விளக்கும் ’வாயுசாஸ்த்ரா’ 'Vaayusastra' நிறுவனத்தின் நிறுவனர் ஜகதீஷ். ஏரோநாட்டிகல் இன்ஜினியரான இவர் ஒரு நாடக கலைஞரும் கூட, தனக்கு பிடித்த நாடகம் மற்றும் அறிவியலை இணைத்து இந்த நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
தான் எட்டு வருடமாக ஈடுப்பட்டிருக்கும் நாடகக் கலையுடன் தனது படிப்பையும் இணைத்து குழந்தைகளுக்கு ஏற்றவாறு எளிமையாக காற்றியக்கவியல், வானியல் அறிவியலை கற்பிக்க வேண்டும் என விரும்பினார். இந்த முயற்சியின் தொடக்கத்தால் சிறு பட்டறைகளை அமைக்கத் துவங்கி இன்று நிறுவனமாய் வளர்த்துள்ளார்.
“துவக்கத்தில் பட்டறைகளில் காகித பிளேன்களை பயன்படுத்தி ஏரோபிளேன்கள் எப்படி செயல்படுகிறது என விளக்கினேன். இதுவே கதையுடன் அறிவியலை குழந்தைகளுக்கு விளக்கும் யோசனையை தந்தது,” என்கிறார்.
அதன் பின்னர் இந்திய, கிரீக், சீன புராணங்கள் அடிப்படையில் ஏரோநாட்டிக்சை விளக்கினார் ஜகதீஷ். அதாவது ராமாயணம் கதையில் வரும் புஷ்பகாவிமனாத்தை ஏரோபிளேன்களை பாவித்து அதன் செயல் முறையை நாடகம் மூலம் விளக்குவது. இம்முறை குழந்தைகளின் ஆழ் மனதில் மிகச் சுலபமாக பதியும் என்கிறார் ஜகதீஷ். அதே போல் வளிமண்டலத்தை விளக்க நாம் கேட்டு பழகிய ’நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையை’ வைத்து விளக்குகின்றனர் இவர்கள்.
“இதற்காக ஏரோநாட்டிகல் பொறியாளர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களை பணிக்கு அமர்த்தியுள்ளேன். இவர்களையும் இணைத்து ஒவ்வொரு வகுப்பிற்கு ஏற்ற கதையை எழுதி இயக்குவேன்,” என்கிறார்.
பட்டப்படிப்பு படிக்கும் பொழுதே நாடகக் கலையில் ஈடுப்பட்டிருந்ததால் படிப்புக்கு பின் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் இவர். மேலும் சில படங்களுக்கு துணை இயக்குனராக பணியாற்றியதால் தான் எடுக்கும் பட்டறைகளுக்கு ஏற்ற கதைகளை இயக்குவது சற்று சுலபமாக இருக்கிறது என்கிறார்.
திரைத் துறையில் பணியாற்றிய அனுபவத்தால் தனது முதல் பட்டறையை அமைத்து குழந்தைகளை சேர்ப்பது பெரிய சவாலாக இல்லை என்றார். இந்த பட்டறைகள் மூலம் ஐஐடி மெட்ராஸின் கிராமிய தொழில்நுட்ப வணிக அடைகாக்கும் அமைப்பாள் (RTBI) பார்வையில் பட்டார் ஜகதீஷ்.
“தொழில்நுட்ப ஈடுபாடு இல்லாமல் மனிதர்களை நாடி இருப்பதால் இந்த யோசனை விரிவுப்படுத்த முடியாது என தயங்கினர். ஆனால் இந்தியாவில் இன்றும் பல இடங்களில் இணையம் சேவை கூட இல்லாமல் இருக்கிறது...”
எனவே இந்த யோசனை நிச்சயம் விரிவடையும் என நான் நம்பினேன் என்கிறார். ஒரு வருடம் வெற்றிகரமாக பல பட்டறைகளை நடத்திய பின் கிராமிய தொழில்நுட்ப வணிக இன்குபேட்டர் கீழ் அடைக்கலம் பெற்றார். தற்பொழுது எட்டு ஏரோநாட்டிகள் பொறியாளர்கள் மற்றும் 7 நாடகக் கலைஞர்களை கொண்டு இயங்கி வருகிறது வாயுசாஸ்த்ரா.
அதன் பின் பல பள்ளிகளுடன் இணைந்து வாரம் பல வகுப்புகளை பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்தி வருகிறது இக்குழு. மேலும் குழந்தைகளுடன் நெருங்கி பணிபுரியும் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடனும் இந்நிறுவனம் கைக்கோர்த்துள்ளது. இன்னும் பல ஸ்டார்ட்-அப்களுடன் இணைய தயாராக இருப்பதாக அறிவிக்கிறார் ஜகதீஷ்.
“ஏரோநாட்டிகலில் எனக்கு தெரிந்ததை இந்திய கிராமங்களில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் எடுத்துச் செல்வதே எனது நோக்கம். விமானத்தை பார்த்தால் அதிசயமாக பார்க்காமால் அதன் செயல் பாட்டை விளக்க வேண்டும்.”
இதுவே தற்பொழுது தனது பெரும் கனவாக இருக்கிறது என்கிறார். கூடிய விரைவில் அது நிச்சயம் நடைபெறும் என நம்பிக்கையாக முடிக்கிறார் ஜகதீஷ்.