5 வயதில் சிக்ஸ் பேக்; அதிவேக ஓட்டம்: ஒலிம்பிக்கில் வெல்லத் துடிக்கும் பூஜா!
ஓடி பிடித்து விளையாடும் வயதில் தங்கப்பதக்கங்களை வெல்லும் பூஜா!
பூஜாவின் வாழ்க்கை அவ்வளவு ஒன்றும் செழிப்பானதில்லை. அவருடைய பெற்றோர் இருவரும் விவசாயிகள். அவர்களால் பூஜாவின் உணவு மற்றும் பயிற்சியின் அதிக செலவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தெருக்களில் நண்பர்களுடன் ஓடி பிடித்து விளையாடும் வயதில் ஒன்பதே வயதான பூஜா பிஷ்னாய் தங்கப்பதக்கங்களை வெல்வதிலும், உலக சாதனைகளை படைப்பதிலும் மும்முரமாக இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த அவர், சில பெரியவர்களுக்குக் கூட இல்லாத ஒழுக்கத்தையும் உறுதியையும் கொண்டிருக்கிறார்.
ஓட்டப்பந்தய வீரரான பூஜா அண்மையில் நடந்த 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் 3 கி.மீ தூரத்தை வெறும் 12.50 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தார். ஒன்பது வயதில் சிக்ஸ் பேக் வைத்த ஆசியாவின் முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பூஜா.
பயிற்சியாளரும், தாய்மாமாவுமான சர்வன் புடியா, பூஜா 2024ல் நடைபெறவிருக்கும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வருகிறார். அவர் நிச்சயம் நம் நாட்டிற்கு தங்கம் வெல்வார் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர் சர்வான், ஒரு தடகள வீரர். ஜோத்பூர் இந்திய விளையாட்டு ஆணையத்துடன் தொடர்புடையவர். காலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தனது விளையாட்டை கைவிட வேண்டியிருந்தது. பூஜாவின் திறமையை அவரது 3 வயதில் கண்டறிந்து பிரமித்து போனார் சர்வான். அவருக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க ஆரம்பித்தார்.
பூஜாவின் வெற்றிப்பயணத்தில் அவருடன் இருப்பவர் சர்வான் தான். பூஜா 3 வயதிருக்கும் போது, அவரைவிட அதிக வயதுடையவர்களுடன் ஓட்டப்பந்தயம் வைத்து வெற்றி கொள்ள முயற்சித்தார். பின்பு, அவருக்கு முழுமையான பயிற்சி அளித்து, ஒருமாதம் கழித்து பூஜா அவரை விட வயதான சிறுவர்களை எளிதாக வென்று காட்டி, சிறுவர்களைத் தோற்கடித்தார்.
அப்போதிருந்து நன்கு பயிற்சி பெற்று வரும் பூஜாவுக்கு 5 வயதில் சிக்ஸ் பேக் வர ஆரம்பித்தது. குழந்தைகளிடம் ஆபூர்வமாகவே உருவாகும் இந்த சிக்ஸ் பேக்கை தனது 5வயது வயதிலேயே பெற்றார் பூஜா.
பூஜா தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடுவார். காலை 7 அல்லது 8 மணி வரை பயிற்சியில் ஈடுபடுவார். பின்னர் பள்ளிக்குச் செல்வது, பிற்பகலில் சற்று ஓய்வு. தொடர்ந்து மாலையிலிருந்து இரவு 10மணிக்கு தூங்கச் செல்வதற்கு முன்பு வரை பயிற்சியில் ஈடுபடுவார்.
வெறும் பயிற்சி மட்டுமல்லாமல் கடுமையான டயட்டையும் அவர் தொடர்ந்து கடைபிடிக்கிறார். பழ வகைகள், உலர் பழங்கள்(Dry Fruits) புரதங்கள் உள்ளடக்கிய உணவு ஆகியவற்றை நாள்தோறும் தவறாமல் எடுத்துக்கொள்வார். மற்றவர்களைப்போல சாதாரண வாழ்க்கை இல்லை அவருடையது.
2017 ஆம் ஆண்டில், தனது ஆறு வயதில், பூஜா ஒரு ஜோத்பூர் மராத்தானில் கலந்துகொண்டு 48 நிமிடங்களில் 10 கி.மீ தூரத்தை கடந்தார். மேலும் அவரது ஈர்க்கக்கூடிய சிக்ஸ் பேக் மூலம் பிரபலமடைந்தார். ஆனால், பூஜாவின் வாழ்க்கை அவ்வளவு ஒன்றும் செழிப்பானதில்லை. அவருடைய பெற்றோர் இருவரும் விவசாயிகள்.
அவர்களால் பூஜாவின் உணவு மற்றும் பயிற்சியின் அதிக செலவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன்காரணமாக நண்பர் ஒருவரின் கடையில் வணிக மேலாளராக பணிபுரியும் பயிற்சியாளர் சர்வன், பூஜாவின் உணவுத் தேவைகளையும் பயிற்சியையும் கவனித்துக்கொள்வதில் அவருக்கு உதவினார்.
ஜனவரி 2019-லிருந்து அவரது நிலை சற்று மாறத்தொடங்கியது. விராட் கோலி அறக்கட்டளை அவரது பயிற்சி வீடியோக்களையும் அவரது ஆரம்ப சாதனைகளையும் பார்த்தபின் அவருக்கு ஆதரவை வழங்கியது.
அதே ஆண்டில், டெல்லியில் நடந்த ஸ்போர்டிகோ போட்டியில் உலகச் சாதனைப் படைத்தார் பூஜா. 3,000 மீட்டர், 1,500 மீட்டர், மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தைய பிரிவுகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.
இன்று, அவர் தனது மாமா மற்றும் சகோதரருடன் ஜோத்பூரில் விராட் கோலி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டுள்ள ஒரு அபார்ட் மெண்ட் ஒன்றில் வசிக்கிறார்.
ஓலிம்பிக்கில் நாட்டுக்காக தங்கம் வெல்ல வாழ்த்துகள் பூஜா!