புனே மாரத்தானில் வென்று சகோதரியின் திருமணத்தை நடத்திய 19 வயது தடகள வீராங்கனை!
தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற பூனம் சோனூன் புனே மாரத்தானில் பங்கேற்று வென்ற 1.25 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசை தனது சகோதரியின் திருமணத்திற்கு கொடுத்துள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலான தடகள வீரர்கள் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. இவர்கள் வெற்றி பெற பல்வேறு சிக்கல்களை சந்திக்கவேண்டிய நிலை இருக்கும்.
2018-ம் ஆண்டு தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் இந்தியா சார்பாக பங்கேற்று தங்கம் வென்ற பூனம் இந்த முறை புனே மராத்தான் போட்டியில் பங்கேற்று 1.25 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வென்றுள்ளதாக ’ஸ்டோரிபிக்’ தெரிவிக்கிறது.
இத்தகைய கதைகள் பலவற்றை நாம் கடந்து வந்திருப்பினும் புனேவைச் சேர்ந்த இந்த 19 வயது தடகள வீரர் ஒருபடி மேலே சென்று இந்தப் போட்டியில் பங்கேற்று ஏழ்மை நிலையில் இருக்கும் தனது குடும்பத்திற்கு உதவியுள்ளார்.
சமீபத்தில் மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சக்வான் கிராமத்தைச் சேர்ந்த பூனம் சோனூன் தனது சகோதரியின் திருமணத்திற்காக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவரது அப்பா ஒரு விவசாயத் தொழிலாளி. தனது மூத்த மகளின் திருமணத்தை நடத்திவைக்க பணம் இல்லாமல் அவதிப்பட்டார். எனவே பூனம் தனது சகோதரியின் திருமணத்தை நடத்திவைக்குக் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பூனம் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தடகளப்போட்டியில் பங்கேற்பது கடினமான செயலாகவே இருந்துள்ளது. பள்ளியில் இவர் தடகள விளையாட்டில் இருக்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இதுவே குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் நடத்திய நிறுவனத்தில் பயிற்சிக்காக தேர்வாக உதவியது என ’என்டிடிவி இண்டியா’ தெரிவிக்கிறது.
துரதிர்ஷ்ட்டவசமாக பூனமின் அப்பாவால் ஒரு கட்டத்திற்கு மேல் பயிற்சிக்கு செலவிட முடியவில்லை. எனினும் விஜேந்தர் சிங் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் வாயிலாக நிதி உயர்த்திய பிறகு மேற்கொண்டு பயிற்சியைத் தொடரவும் போட்டிகளில் பங்கேற்கவும் ஊக்குவித்துள்ளார்.
பூனம் பணத்தைத் திரட்டியபோதிலும் அவர் தெற்காசிய விளையாட்டுகளுக்கு தேர்வாகியிருப்பதால் அவரால் தனது சகோதரியின் திருமண நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை.
பூனமின் பயணம் தொடர்கிறது. தனது குடும்பத்திற்காக ஒரு வீட்டைக் கட்ட இதே போன்ற பல்வேறு மாரத்தான்களில் பங்கேற்க விரும்புகிறார்.
கட்டுரை : THINK CHANGE INDIA