மின்சாரப் பயன்பாடின்றி தண்ணீரை சுத்திகரிக்கும் மலிவு விலை இயந்திரம் உருவாக்கிய இளைஞர்!
ஜிதேந்திர சௌத்ரி ’சுத்தம்’ என பெயரிடப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். 7,000 ரூபாய் விலை கொண்ட இந்த இயந்திரம் நாள் ஒன்றிற்கு 500 லிட்டர் தண்ணீர் வரை சுத்தப்படுத்தி குடிப்பதற்கும் சமைப்பதற்கும் தவிர இதர பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.
தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வே இல்லாத நிலை காணப்படுகிறது. ஏரிகள் வற்றிக் கொண்டிருக்கின்றன; நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது; மழைப்பொழிவு குறைந்து வருகிறது; இந்த காரணங்களால் விரைவிலேயே நீருக்காக போர் மூளும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் நிலையான ‘டே ஜீரோ’ நாள் முதலில் கேப் டவுனில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு மாநில அரசாங்கங்கள், நிறுவனங்கள், தனிநபர்கள் என பலரும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்குப் புதுமையான தீர்வுகளை முன்வைக்கின்றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த 25 வயது ஜிதேந்திரா சௌத்ரி அத்தகைய தீர்வை உருவாக்கியுள்ளார். இவர் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மின்சார பயன்பாடின்றி மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துகிறது. ’ஷுத்தம்’ (Shuddham) என்றழைக்கப்படும் இந்த இயந்திரம் தினமும் 500 லிட்டர் தண்ணீர் வரை சுத்தப்படுத்தக்கூடியதாகும். இதன் விலை 7,000 ரூபாய்.
நமது அன்றாட நீர் பயன்பாட்டை ஆராய்ந்து பார்த்தோமானால் மொத்த அளவில் வெறும் 20 சதவீத தண்ணீர் மட்டுமே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 80 சதவீத தண்ணீர் சுத்தப்படுத்துவது, குளிப்பது, கழிவறை போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஜிதேந்திரா சுத்திகரிப்பு இயந்திரம் குறித்து Efforts for Good உடனான உரையாடலில் கூறும்போது,
“’சுத்தம்’ இயந்திரம் நாள் ஒன்றிற்கு 500 லிட்டர் தண்ணீர் வரை சுத்தப்படுத்தி குடிப்பதற்கும் சமைப்பதற்கும் தவிர இதர பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது. இந்த இயந்திரம் மிகக்குறைந்த விலையாக 7,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதற்கான ஆண்டு பராமரிப்பு செலவு வெறும் 540 ரூபாய் மட்டுமே,” என்றார்.
இந்த இயந்திரம் தொடர் சுத்தப்படுத்தும் செயல்முறைகள் மூலம் கழிவறையில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் கீழ்நிலையில் உள்ள பாகம் வழியாக வெளியேறும்
தண்ணீர் சுத்திகரிப்பு முறை குறித்து Ketto உடன் அவர் உரையாடுகையில்,
“குறுமண்கள் (granules) சலிக்கப்படும் முறையைத் தொடர்ந்து கார்பன் பிரித்தெடுக்கப்பட்டு தண்ணீர் சில நிமிடங்களில் சுத்தப்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தில் அடைப்பு ஏற்படாத வகையில் இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தில் அடைப்பு இல்லாததையும் அழுக்கு குறுமண்கள் சுத்தமான தண்ணீரில் கலக்காமல் இருப்பதையும் இது உறுதிசெய்கிறது,” என்றார்.
2017-ம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் முடித்த ஜிதேந்திரா மஹாகல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக பணியாற்றியுள்ளார். பின்னர் உஜ்ஜயினில் உள்ள எம்ஐடி க்ரூப் ஆஃப் இன்ஸ்டிட்டியூஷன்ஸில் ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றியுனார். இவரது சுத்திகரிப்பு இயந்திரம் தற்போது எம்ஐடி கல்லூரி விடுதியில் நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினமும் சுமார் 500 லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு இயந்திரம் 90,000 லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்த பிறகு இதிலுள்ள குறுமண் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படும்.
ஜிதேந்திராவிற்கு மத்தியப்பிரதேச மாநிலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் இளம் விஞ்ஞானி விருது வழங்கி கௌரவித்துள்ளது. இவர் தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் இதுவரை நான்கு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வறட்சி பாதிக்கப்பட்ட கிராமங்களையும் சென்றடையும் வகையில் சுத்திகரிப்பு இயந்திரத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை உருவாக்கும் பணியில் ஜிதேந்திரா தற்போது ஈடுபட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA