குழாய்களை இலவசமாக பழுதுபார்த்து நீர்கசிவை தடுக்கும் 84 வயது முதியவர்!
ஆபித் சுர்தி 2007-ம் ஆண்டு டிராப் டெட் ஃபவுண்டேஷன் துவங்கினார். இவர் தன்னுடைய குழுவுடன் இணைந்து 2,000 வீடுகளைச் சென்றடைந்து அங்குள்ள குழாய்களின் பழுதை நீக்கியுள்ளார்.
பொதுவாக ஒரு குழாயில் தண்ணீர் கசிந்துகொண்டே இருந்தால் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. இனி இதை நாம் புறக்கணிக்கமுடியாது. ஒவ்வொரு துளி நீரும் முக்கியம். இவ்வாறு சொட்டும் ஒவ்வொரு துளிகளும் சேர்ந்து ஒரு ஆண்டிற்கு சுமார் 1300 லிட்டர் தண்ணீர் வீணாக்கப்படுகிறது என்று கணக்கிடப்படுகிறது.
தண்ணீர் பற்றாக்குறை அதிகம் காணப்படும் உலகில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவேண்டும். 84 வயது ஆபித் சுர்தி இந்த சிக்கலுக்குத் தீர்வுகாண முற்படுகிறார்.
மும்பையைச் சேர்ந்த ‘டிராப் டெட் அறக்கட்டளை’ 'Drop Dead நிறுவனரான ஆபித் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ள குழாய்களின் தண்ணீர் கசிவை பழுதுபார்த்து வருகிறார். ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்கவேண்டும் என்பதே இந்த அறக்கட்டளையின் பெயராக வைக்கப்பட்டது.
ஒரு பிளம்பர், இந்த அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த பெண் தன்னார்வலர் ஒருவர் ஆகியோர் ஆபித் உடன் செல்வார்கள். 2007-ம் ஆண்டு இந்த முயற்சி துவங்கப்பட்டதில் இருந்து ஆபித் மற்றும் அவரது குழு 2,000 வீடுகளைச் சென்றடைந்து 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளனர்.
ஆபித் என்டிடிவி உடன் உரையாடுகையில்,
“ஒவ்வொரு வாரமும் ஒரு குடியிருப்பை இலக்காகக் கொள்வோம். அதன் செயலாளரை சந்தித்து எங்களது நோக்கத்தை விவரிப்போம். அதன் பிறகு அறிவிப்புப் பலகையில் போஸ்டர்கள் ஒட்டுவோம். சனிக்கிழமை அன்று எங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகிப்போம். இறுதியாக ஞாயிற்றுக்கிழமை அன்று மேல் மாடியில் இருந்து துவங்கி ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி குழாய்களில் உள்ள பழுதுகளை நீக்குவோம்,” என்றார்.
ஆபித் போஸ்டர்களையும் படங்களையும் பயன்படுத்தி தண்ணீரை சேமிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கிறார். முகமது நபி மக்களிடம் தண்ணீரை சேமிக்குமாறு வலியுறுத்தும் விதத்தில் போஸ்டர் ஒன்றை ஆபித் உருவாக்கியுள்ளதாக ‘தி ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னல்’ குறிப்பிடுகிறது.
மற்றொரு போஸ்டரில் விநாயகர் கடவுள்,
“நீங்கள் தண்ணீரை வீணாக்கினால், என்னை எங்கு கரைப்பீர்கள்,” என கேட்கும் விதத்தில் உருவாக்கியிருந்ததாகவும் ’தி ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னல்’ குறிப்பிடுகிறது.
ஆபித் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய ’கோன் பனேகா க்ரோர்பதி’ விளையாட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
எனினும் அவரது பயணம் எளிதாக இருந்துவிடவில்லை. ஆரம்பத்தில் மக்கள் பெரிதாக ஆதரவளிக்கவில்லை. அதிக நேரம் செலவிட்ட பின்னரே அவர்கள் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். குழாய்களை இலவசமாக பழுதுநீக்கித் தருவதால் அவரே முழுவதுமாக செலவு செய்யவேண்டியிருந்தது. இதற்கு ஒரு மாதத்திற்கு 5,000 ரூபாய் வரை செலவானது.
”பிளம்பருக்கு 200 ரூபாயும் ஒரு வாஷர் வாங்க 2 ரூபாயும் செலவாகும் என்றே நான் நினைத்தேன். ஆனால் இதைத் தொடர்ந்து செய்யும்போது இதற்கு அதிக முதலீடு தேவைப்பட்டது. அதுமட்டுமல்லாது என்னுடைய பயணத்திற்கும் என் குழுவினருக்கு உணவிற்கும் செலவிடவேண்டியிருந்தது. ஒரு வாரத்திற்கான செலவு 1,000 ரூபாய் என கணிக்கப்பட்டது. அதாவது ஒரு மாதத்திற்கு 4,000 முதல் 5,000 வரை ஆகும் என மதிப்பிடப்பட்டது,” என்று என்டிடிவி உடன் ஆபித் பகிர்ந்துகொண்டார்.
ஆபித் பிரபல எழுத்தாளர் என்பதால் இந்தி இலக்கியத்தில் பங்களித்ததற்காக உத்திரப்பிரதேசத்தின் இந்தி சன்ஸ்தான் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தது. இந்தத் தொகையை அவர் தனது முயற்சிக்குப் பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு கிடைத்த பரிசுத் தொகை மொத்தமும் இந்த முயற்சிக்காகவே பயன்படுத்தப்பட்டது.
”டிராப் டெட் அறக்கட்டளையைத் தொடர்ந்து நடத்த எனக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் கடவுள் எனக்கு உதவினார். நடிகர் அமிதாப் பச்சன் எனக்கு 11 லட்ச ரூபாய் வழங்கினார். மஹாராஷ்டிர அரசாங்கம் பரிசுத்தொகையாக 50,000 ரூபாய் வழங்கி உதவியது. ஒரு பிளம்பர் என்னுடன் இணைந்துகொண்டு இலவசமாக சேவையளித்தார்,” ஆபித் தெரிவித்தாக என்டிடிவி குறிப்பிடுகிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA