புற்றுநோய் இருப்பதை கண்டறியும் புதுமை ஆப் - விருது வென்றுள்ள மாணவர்கள்!
17 வயது மாணவர்களான சித்தார்த் ஜெயின், ஆசிம் கான் இருவரும் அந்தரங்க பகுதியில் புற்றுநோய் இருப்பதை ஆரம்பநிலையிலேயே கண்டறிய உதவும் RIDGE என்கிற மொபைல் செயலியைக் கண்டுபிடித்து அமெரிக்காவின் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் கிராண்ட் அவார்ட் வென்றுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த 17 வயது மாணவர்களான சித்தார்த் ஜெயின், ஆசிம் கான் இருவரும் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் கிராண்ட் அவார்ட் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் ஜம்னாபாய் நார்சி சர்வதேச பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கிறார்கள்.
இவர்கள் அந்தரங்க உறுப்பில் ஏற்படக்கூடிய புற்றுநோயைக் கண்டறியும் RIDGE என்கிற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர். தொலைதூரத்தில் இருந்து மருத்துவர்கள் நோயைக் கண்டறிய இது உதவுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் உலகளாவிய புத்தாக்கக் கண்காட்சியின் World ISEF Regeneration 2021 Bio Medical Category பிரிவில் Remote Identification and Detection of Genital Skin Cancer (RIDGE) கிராண்ட் அவார்ட் நான்காம் இடத்தை வென்றுள்ளது.
கண்டுபிடிப்பின் பின்னணி
பொதுவாக புதுமையான கண்டுபிடிப்புகள் ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படும். அப்படிப்பட்ட சம்பவம் சித்தார்த்தின் வாழ்க்கையில் நடந்தது.
”என் தாத்தாவிற்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் அவர் படுத்த படுக்கையானார். இரண்டு மாதங்கள் ஆனது. படுக்கை புண் வர ஆரம்பித்தது. இறுதியாக இந்த புண்கள் புற்றுநோயாக மாறியது,” என்று சோஷியல்ஸ்டோர் நேர்காணலில் சித்தார்த் தெரிவித்தார்.
கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக மருத்துவமனை செல்லமுடியவில்லை. சித்தார்த்தும் அவரது அம்மாவும் ஆன்லைன் மூலமாகவே மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். பயாப்சி சோதனை செய்யக்கூட மருத்துவமனை அழைத்து செல்லமுடியவில்லை. சித்தார்த்தின் தாத்தா உயிரிழந்துவிட்டார்.
“அவருக்கு எந்த வகையான புற்றுநோய் இருந்தது? எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது? இந்தக் கேள்விகளுக்கு எங்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை,” என்கிறார் சித்தார்த்.
இந்த சம்பவம் புதுமையான கண்டுபிடிப்பிற்கு ஒரு உந்துதலாக இருந்துள்ளது. சித்தார்த், ஆசிம் இருவரும் இணைந்து அந்தரங்க உறுப்பில் ஏற்படக்குடிய புற்றுநோயை ஆரம்ப நிலையையிலேயே கண்டறிய உதவவேண்டும் என்று தீர்மானித்து இந்த பிராஜெக்டைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்யத் தொடங்கினார்கள், ஊரடங்கு காரணமாக அவரவர் இருப்பிடத்தில் இருந்துகொண்டே இணையம் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். மருத்துவர்களுடன் உரையாடி பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளனர்.
நோய் கண்டறியும் RIDGE
சித்தார்த் தனது தாத்தாவிற்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது என விரும்பினார். ஆரம்பநிலையிலேயே நோயைக் கண்டறிந்தால் பலனளிக்கும் என நம்பினார்.
சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு தொலை தூரத்தில் இருந்தே மருத்துவர்கள் ஆலோசனை வழங்க உதவவேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.
“பலர் தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளில் புண்ணோ கட்டியோ இருந்தால் அதை மருத்துவரிடம் காட்டி ஆலோசனைப் பெறத் தயங்குகிறார்கள். இதனால் சரியான நேரத்தில் நோய் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியாமல் போகிறது. எனவே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடிவெடுத்தோம்,” என்கிறார் ஆசிம்.
அவர் மேலும் கூறும்போது,
“ஒருவர் தன்னைத் தானே ஸ்கேன் செய்துகொண்டு இமேஜை மருத்துவரிடம் காட்ட உதவும் வகையில் RIDGE உருவாக்கினோம்,” என்கிறார்.
சவாலான பணி
தொலைதூரத்தில் இருந்து இமேஜ்களை ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பத்திற்கு ஆரம்பத்தில் இமேஜ் பிராசசிங், இயந்திரக் கற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்த திட்டமிட்டனர். ஆனால் தரவுகளின் அளவு அதிகமாக இருந்துள்ளது. இந்த சமயத்தில் வழிகாட்டல் தேவைப்பட்டதாக சித்தார்த் குறிப்பிடுகிறார்.
அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பொறியியல், கலை மற்றும் கணிதம் (STEAM) பிரிவில் பயிற்சியளிக்கும் மும்பையைச் சேர்ந்த On My Own Technology (OMOTEC) மையத்தின் ஆலோசகர்களின் வழிகாட்டலைப் பெற்றனர்.
“பிராசஸ் குறித்து அவர்களிடம் தெரிந்துகொண்டதும் முற்றிலும் நாங்கள் உருவாக்கிய தீர்வாக இருக்கவேண்டும் என்பதற்காக நாங்களே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டோம்,” என்கிறார் சித்தார்த்.
RIDGE உருவாக்க மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றினோம். இதற்கு OMOTEC உதவியது. போட்டிக்கு தயாராகவும் இந்த மையம் உதவியுள்ளது. இவர்கள் பெண்களுக்கு ஏற்படும் வுல்வா மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
OMOTEC முதன்மை ஆலோசகர் மற்றும் நிறுவனர் ரீது ஜெயின் கூறும்போது,
”சித்தார்த், ஆசிம் இருவரும் அவர்களிடம் உள்ள திறன்களை முழுமையாக ஒருங்கிணைத்து இந்தத் தீர்வை உருவாக்கியிருக்கிறார்கள். உடலில் இருக்கும் கட்டி வீரியம் மிக்கது (malignant), வீரியமாவதற்கு முந்தைய நிலை (pre-malignant), வீரியமில்லாதது (benign) என துல்லியமாக வகைப்படுத்தும் விதத்தில் இமேஜ் இருப்பதை உறுதிசெய்யக் கடினமாக உழைத்துள்ளனர். இவர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது,” என்கிறார்.
பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட புற்றுநோய் குறித்த தரவுகளைக் கண்டறிவது சவாலாக இருந்தது என்கிறார் ஆசிம்.
வருங்காலத் திட்டங்கள்
வயது, பாலினம், இடம் உள்ளிட்ட நோயாளியின் தனிப்பட்ட தகவல்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக சித்தார்த் தெரிவிக்கிறார்.
”பிறப்புறுப்பு புற்றுநோய் தொடர்பாக வெகு சில தகவல்களே கிடைக்கின்றன. சமீபத்தில் கிளினிக்கல் தகவல்களை உள்ளடக்கிய டேட்டாசெட் எங்களுக்குக் கிடைத்துள்ளது. எங்கள் முடிவுகளை மேலும் துல்லியமாக மாற்றுவதற்கு இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். எங்களுக்குச் சொந்தமான இயந்திரக் கற்றல் மாதிரியை உருவாக்கிக்கொள்ள எங்கள் ஆலோசகர்கள் வழிகாட்டியுள்ளனர்,” என்கிறார்.
கொரோனா சூழல் காரணமாக இவர்களால் இந்தத் தீர்வை நேரடியாக களத்தில் கொண்டு சென்று பரிசோதனை செய்ய முடியவில்லை.
”நாங்கள் எங்களுக்கான பொறுப்புகளை இன்னமும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. இந்த பிராஜெக்டின் துல்லியத்தன்மையை அதிகரிக்க பேராசிரியர்களுடன் இணைந்து நான் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன். ஆசிம் வணிகப் பள்ளிக்கு செல்ல விரும்புவதால் வணிக அம்சங்களில் அவர் கவனம் செலுத்துவார்,” என்கிறார் சித்தார்த்.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா