புற்றுநோயை கண்டறியும் முறையை எளிதாக்கும் 5 இந்திய ஸ்டார்ட் அப்கள்!
- 2018-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் 22.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் 11.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது.
- 2018-ம் ஆண்டில் மட்டுமே 4.8 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
- பத்து சதவீத இந்தியர்களுக்கு 75 வயதை எட்டுவதற்கு முன்பே புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.
தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த புள்ளி விவரம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மருத்துவர்-நோயாளி விகிதமாகட்டும் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக வசதிகளாகட்டும் இந்தப் பிரச்சனையைக் கையாளப் போதுமான திறன் இந்தியாவில் இல்லை என்பது நிலையை மேலும் கவலைக்குள்ளாக்குகிறது.
உலகளவிலும்கூட சிகிச்சை அவசரமாகத் தேவைப்படும் நோயாளிகளை புதிய சிகிச்சை முறைகள் சென்றடைவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
மனிதர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் போன்றே புற்றுநோய் ஆராய்ச்சியிலும் புதிய வழிமுறைகளைப் பின்பற்றவேண்டிய அவசியம் உள்ளது. இந்தத் துறையில் வெவ்வேறு பிரிவுகளில் செயல்படும் ஐந்து ஸ்டார்ட் அப் குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Sascan : வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் கேமரா
”ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 80,000 பேருக்கு புதிதாக வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாததால் இதில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடுகிறது,” என்று டாக்டர் சுபாஷ் நாராயணன் சுட்டிக்காட்டினார்.
Sascan-ன் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா வாயில் உள்ள புற்றுநோய் செல்களை ஸ்கிரீன் செய்யவும் கண்டறியவும் உதவுகிறது. இது துளையிடவேண்டிய அவசியமில்லாத நிகழ்நேர தீர்வாகும். ஒளியின் வெவ்வேறு அலைநீளத்துடன் வாயின் உட்பகுதியை இந்தக் கேமிரா படம்பிடிக்கும்.
”திசுக்கள் அசாதாரணமாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க ப்ராசஸ் செய்யப்பட்ட படங்கள் நிகழ்நேர அடிப்படையில் ஆய்வு செய்யப்படும்,” என டாக்டர் நாராயணன் விவரித்தார்.
பின்னர் புற்றுநோயின் நிலையை கணிப்பதற்காக அசாதாரண நிலையை ஆய்வு செய்ய இது இயந்திரக்கற்றல் சார்ந்த அல்காரிதமைப் பயன்படுத்துகிறது. மேலும் பரிசோதனை செய்யும் வல்லுநர்கள் பயாப்சி பரிசோதனைக்கு உகந்த திசுப்பகுதியைக் கண்டறியவும் இந்த சாதனம் வழிகாட்டுகிறது. புற்றுநோய் இருப்பது முறையாகக் கண்டறியப்படாமல் போகும் நிலையைக் குறைத்து ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் நோய்தாக்கத்தை முன்கூட்டியே கணிக்கமுடியும் என்கிறார் டாக்டர் நாராயணன்.
பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த கையடக்க சாதனத்தை ஆரம்ப சுகாதார நிலையங்களோ அல்லது ஸ்கிரீனிங் முகாம்களை நடத்தி வரும் லாப நோக்கமற்ற நிறுவனங்களோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
”இந்த சாதனம் கிராமங்களில் மின்சாரம் இல்லாத சூழலிலும்கூட இயங்கும்,” என்று குறிப்பிட்டு வாய் புற்றுநோய் அதிகம் பாதிக்கக்கூடிய கிராமப்புறங்களுக்கு உகந்த தீர்வு இது என்பதை சுட்டிக்காட்டினார் டாக்டர் நாராயணன்.
Sascan தனது அல்காரிதமை மேலும் நவீனமாக்கத் தேவையான அதிகளவிலான தரவுகளை சேகரிக்க பல்வேறு பகுதிகளில் க்ளினிக்கல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்கிறது. மற்ற வகை புற்றுநோய்களுக்கான ஸ்கிரீனிங் செய்யவும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
Exocan : ரத்தம், சிறுநீர், உமிழ்நீர் போன்றவற்றைப் பயன்படுத்தி புற்றுநோய் கண்டறியப்படுகிறது
ஆய்வு முடிவுகள் எப்போதும் இறுதியானதாகவும் தீர்மானமானதாகவும் இருப்பதில்லை என்பதே புற்றுநோயைக் கண்டறிவதில் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். எனவே துல்லியமாக கண்டறியப்பட்டு சிகிச்சை துவங்கப்படுவதற்கு முன்பு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆலோசனையும் தேவைப்படுகிறது என்றார் டாக்டர் அமன் ஷர்மா. விரைவாகப் பரவக்கூடிய புற்றுநோயைப் பொறுத்தவரை சிகிச்சை இரண்டு வார காலம் தாமதமானாலும் விலையுயர்ந்ததாக மாறிவிடும்.
எக்ஸோசம் கொண்டு இந்த சவாலுக்குத் தீர்வுகாண முற்பட்டார் அமன். இது பயாப்சி அல்லது ஸ்கேனிங் இன்றி புற்றுநோய் மூலக்கூறு ஆய்விற்கு உதவக்கூடியதாகும். Exocan-ன் தொழில்நுட்பம் சார்ந்த சோதனை நோயாளியின் ரத்தம், உமிழ்நீர் அல்லது சிறுநீரை ஆய்வு செய்து நோயைத் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. வழக்கமான முறைகளைக் காட்டிலும் துல்லியமான இந்த ஆய்வுமுறைக்கான செலவும் குறைவு.
இரண்டே நாட்களில் முடிவுகள் கிடைத்துவிடும். தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் இந்த ஆய்வு மதிப்பீடு விரைவில் பெரியளவிலான செயல்படுத்தப்படும். நோய் கண்டறியும் திறன் மற்றும் வேகத்தைப் பொறுத்தவரை வழக்கமான சோதனைகளைக் காட்டிலும் இதன் திறன் சிறப்பாக இருக்கும் என்கிறார் அமன்.
தற்போது Exocon ஒரு நாளைக்கு 500 நோயாளிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு உட்படுத்துகிறது. புற்றுநோய் கண்டறிவதற்கு துளையிடவேண்டிய அவசியம் இல்லாத அதேசமயம் திரவத்தைக் கொண்டு செய்யப்படும் பயாப்சி முறையில் எக்சோசம்ஸ் பயன்பாடு புதிதாக இருப்பினும் அதிக வளர்ச்சியடைந்து வருகிறது. உலகளவில் ஐந்திற்கும் குறைவான நிறுவனங்களே இதில் செயல்படுகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் செயல்படும் Exosome Diagnostics 250 மில்லியன் டாலருக்கு Bio-Techne Corporation நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது.
Exocan அரசு மானியத்தையும் அதன் தொழிநுட்பத்தின் ஒரு பகுதியை ஆர்&டி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கப்படும் வருவாயையும் சார்ந்துள்ளது. அதன் ஆய்வுமுறையை பெரியளவில் அறிமுகப்படுத்தி அடுத்தகட்டத்தை நோக்கி வளார்ச்சியடைய முதலீட்டை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
”மருத்துவர்கள், முதலீட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே புற்றுநோய் மேலாண்மையில் உள்ள பயோடெக் சார்ந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இல்லையெனில் புற்றுநோய் கண்டறிதலில் நாம் காலங்கடந்த தீர்வுகளை மட்டுமே பயன்படுத்தி வருவோம்,” என்றார் அமன்.
Exocan-ன் ஆய்விற்கு பெரியளவிலான அமைப்பு ஏதும் தேவைப்படாது. சிக்கலான கருவிமயமாக்கலோ அல்லது மருத்துவ நிபுணரோ தேவையில்லை. எனவே இதை தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் சிறிய ஆய்வகங்களிலும் எளிதாகப் பயன்படுத்தலாம். இது புற்றுநோய் கண்டறியும் முறையை எளிதாக்கி விலை மலிவாக்குகிறது.
Theranosis Life Sciences
Theranosis ரத்த ஓட்டத்தில் இருக்கும் உயிருள்ள புற்றுநோய் செல்களைக் கண்டறியும் லிக்விட் பயாப்சி வகை சார்ந்து செயல்படுகிறது. இதன் புதுமையான தொழில்நுட்பம் ரத்த ஓட்டத்தில் இருக்கும் ட்யூமர் செல்களை (CTCs) படம்பிடிக்கிறது.
“CTC-க்கள் ரத்த ஓட்டம் வழியாகப் பரவி செகண்டரி புற்றுநோயாக வளரக்கூடிய உயிருள்ள புற்றுநோய் செல்களாகும். எனவே இறந்த புற்றுநோய் செல்களில் இருந்து பெறப்படும் டிஎன்ஏ-க்களைக் காட்டிலும் CTC-க்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என டாக்டர் கண்ணன் விவரித்தார்.
இந்த சிப் புதுமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு உண்மையான ரத்த ஓட்டத்தைப் போன்றே காட்டக்கூடியதாகும். ”சாதாரண ரத்த செல்களில் இருந்து மாறுபட்ட அசாதாரண செல்கள் எளிதாகக் வேறுபடுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தமுடியும். அதிவிரைவு மைக்ரோஸ்கோப் கேமிரா மூலம் படம்பிடிக்கப்பட்ட தரவுகள் பின்னர் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அல்காரிதம் கொண்டு ஆய்வு செய்யப்படும்,” என்றார் டாக்டர் கண்ணன்.
Theranosis ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட மரபுசார் வடிவத்தை ஆய்வுசெய்து அவர்களுக்கான மருந்துகளை ஊக்குவிக்கிறது.
“நாங்கள் பலவகையான கட்டிகள் காரணமாக ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகாண முதன்மை கட்டி மற்றும் CTC செல்கள் என் இரண்டின் மூலக்கூறு துணை வகைகளையும் கண்டறிந்து இந்தியாவில் புற்றுநோய் பிரிவில் துல்லியமான மருந்துகளில் முன்னோடியாக உள்ளோம்,” என்றார்.
குறிப்பிட்ட சிகிச்சை மற்றும் இம்யூனோதெரபிக்கு தகுந்த நோயாளிகளை மருத்துவர்கள் கண்டறிய இது உதவுகிறது. இம்யூனோதெரபி புற்றுநோய்கான சிகிச்சை முறையில் புதிதாகும். சமீபத்தில் இதற்கான மருந்துகளை US FDA அங்கீகரித்துள்ளது. இது இந்தியாவிலும் கிடைக்கிறது.
Theranosis நிறுவனத்திற்குள்ளாகவே அதன் முன்வடிவத்தைக் கொண்டு சோதனை ஆய்வுகளை நிறைவு செய்துள்ளது. பெரியளவிலான மருத்துவமுறை சரிபார்த்தலுக்கு திட்டமிட்டுள்ளது. இன்னும் ஓராண்டு காலத்தில் முக்கிய புற்றுநோய் மருத்துவமனைகளில் இதன் தீர்வுகளைக் கொண்டு சேர்ப்பதே இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.
தனிநபர் சிகிச்சைக்கான சோதனைக்கு 7,500 ரூபாய் ஆகும் என டாக்டர் கண்ணன் மதிப்பிடுகிறார். முறையான ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இந்த சோதனையை இலவசமாக மேற்கொள்ளமுடியும்.
Onward Health : புற்றுநோய் கட்டியாக இருக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறிய இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம்
இந்தியாவில் புற்றுநோய்` கண்டறிதலில் நிபுணத்துவம் பெற்ற 500 நோய்க்குறியியல் வல்லுநர்கள் மட்டுமே இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. புற்றுநோய் ஸ்கீரினிங் திட்டங்கள் பல இருப்பினும் ஸ்கேன் மற்றும் சோதனைகளுக்கு முறையாக விளக்கமளிக்கும் நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் Onward Health கம்ப்யூட்டர் விஷன் சார்ந்த டூல் ஒன்றை உருவாக்கியுள்ளது. நோய்க்குறியியல் வல்லுநர்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்கி அவர்கள் தினமும் பலருக்கு நோய் இருப்பதைக் கண்டறிய உதவுகிறது. இதனால் நோய் இருப்பதைக் கணிக்கவும் சிகிச்சைக்கான தீர்மானங்கள் எடுக்கவும் முடியும்.
ஆய்வகங்கள் தற்போதுள்ள வளங்களைக் கொண்டே தாங்கள் கையாண்டு வரும் மாதிரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உதவும் டூலை Onward Assist உருவாக்கி வருகிறது.
”குறிப்பிட்ட பயோமார்க்கர்களுக்காக நாங்கள் உருவாக்கி வரும் டூல்களில் ஒன்று ஆழமான நுண்ணறிவையும் மருத்துவ தகவல்களையும் வழங்கும். இது புற்றுநோய் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிறப்பாக உதவும் வகையிலான சிகிச்சை முறையை தேர்வு செய்ய உதவும்,” என்று தினேஷ் விவரித்தார்.
அத்துடன் ரேடியோலஜிக்கான இவர்களது இயந்திர கற்றல் டூல் மேமோகிராம் ஸ்கேன் செய்ய உதவுவதுடன் சந்தேகத்திற்குரிய கேல்சிஃபிகேஷன் மற்றும் கட்டிகளைக் கண்டறியவும் உதவுகிறது. இது தீமை விளைவிக்காத கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பதை ஆரம்ப நிலையிலேயே கணிக்கக்கூடியதாகும்.
இதைப் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்று கிராமப்புறங்களிலும் முழுவதுமாக நகர்புறம் அல்லாத பகுதிகளிலும் எளிதாகப் பயன்படுத்தலாம். இந்நிறுவனம் புற்றுநோய் இருப்பதைக் கணிக்க உதவும் டூல்களை மேம்படுத்தி மருத்துவ ரீதியான தீர்மானங்களில் மதிப்பைக் கூட்ட இந்தியாவில் உள்ள முன்னணி புற்றுநோய் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறது.
”இவ்வாறு ஒருங்கிணைவதன் மூலம் மருத்துவ நிபுணத்துவத்தையும் தரவுகளையும் அணுகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கிறது. இது எங்களது மாதிரிகளை உறுதிபடுத்திக் கொள்ளவும் துல்லியமாகக் கணிக்க உதவும் கூடுதல் அம்சங்களை இணைக்கவும் உதவுகிறது,” என்றார் தினேஷ்.
நிறமை : துளையிடவேண்டிய அவசியமின்றி விரைவாக மார்பக புற்றுநோயைக் கண்டறியலாம்
40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய மேமோகிராம் சிறந்தது. ஆனால் இளம் பெண்களை இந்த நோய் அதிகம் தாக்குவதால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான ஒரு புதிய அணுகுமுறை அவசியாகிறது.
மார்பகப் புற்றுநோய் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியப்பட்டால் 99 சதவீதம் பேரைக் காப்பாற்றமுடியும் என்று குறிப்பிடுகிறார் நிதி. இருப்பினும் நோய் இருப்பது சரியான நேரத்தில் கண்டறியப்படாத காரணத்தினாலேயே உயிரிப்போர் எண்ணிக்கை இந்தியாவில் 50 சதவீதமாக உள்ளது. பெண்கள் மார்பக பரிசோதனைக்கு தயங்குவதும் அதை முடிந்தவரை தள்ளிப்போடுவதும்கூட இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
நிறமையின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வான Thermalytix உயர்தெளிவு தெர்மல் சென்சிங் கருவியைப் பயன்படுத்துகிறது. இது மார்பகப் பகுதியை கேமரா போன்றே ஸ்கேன் செய்யும். இந்த சோதனை பெண்களைத் தொடாமலேயே மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட தெர்மல் ஸ்கேன் ஆய்வு செய்யப்படுகிறது.
வழக்கமான மருத்துவ ரீதியான சோதனைகளில் கண்டறியப்படுவதைக் காட்டிலும் ஐந்து மடங்கு சிறிய கட்டிகளையும் இது கண்டறியும். வழக்கமான முறைகளைக் காட்டிலும் இது விலை மலிவானது. பெரிய சாதனங்கள் ஏதும் தேவையில்லை. இதனால் சிறு நகரங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆங்கில கட்டுரையாளர் : சுமா ராமச்சந்திரன் | தமிழில் : ஸ்ரீவித்யா