மக்களவைக்குச் செல்லும் இளம் வயது பழங்குடி இன பெண் எம்.பி!
பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சந்திராணி முர்மு ஒடிசாவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி. கியோன்ஜர் தொகுதியில் சந்திராணி இருமுறை எம்பியாக பதவி வகித்த ஆனந்த நாயக் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
மன உறுதியும் திடமான நம்பிக்கையும் இருப்பவர்களுக்கு வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே. அவர்களது கனவுகளை நனவாக்கிக்கொள்ள இந்த எண்ணிக்கை எப்போதும் தடையாக இருப்பதில்லை.
பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 25 வயது சந்திராணி முர்மு மக்களவையின் இளம் உறுப்பினராக வரலாறு படைத்துள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஒடிசாவின் கியோன்ஜர் தொகுதியில் சந்திராணி இருமுறை எம்பியாக பதவி வகித்த ஆனந்த நாயக் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு 66,203 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
இவரது அரசியல் பிரவேசம் திட்டமிட்ட ஒன்றல்ல. பி.டெக் மெக்கானிக்கல் பொறியியல் படித்த இவர் அரசு பணியிலோ அல்லது தனியார் நிறுவனத்தில் பொறியியில் பிரிவிலோ பணிபுரியவே திட்டமிட்டிருந்தார். இவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட சமூக பணியில் ஈடுபட்டிருந்த இவரது மாமா ஹர்மோகன் சிங் ஊக்குவித்துள்ளார். அதிர்ஷ்ட்டவசமாக பிஜூ ஜனதா தளம் கட்சி அரசியிலில் ஈடுபட தகுதியான பெண் வேட்பாளரை தேடி வந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சந்திராணியை ஊக்குவித்துள்ளார். இது குறித்து அவர் ’நியூஸ் 18’ உடன் பகிர்ந்துகொள்கையில்,
”அன்றைய தினம் நான் முதலமைச்சர் முன்பு நின்று கொண்டிருந்தேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என்னை கடினமாக உழைக்கும்படி கேட்டுக்கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஏப்ரல் 2-ம் தேதி எனக்கு டிக்கெட் கிடைத்தது. மே மாதம் 23-ம் தேதி மக்களின் ஆதரவுடன் பாஜகவின் ஆனந்த நாயக் அவர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்,” என்றார்.
எனினும் சந்திராணி பல்வேறு தடங்கல்களைச் சந்தித்துள்ளார். முதலில் அவரது அப்பாவின் பெயரில் திருத்தம் இருப்பதாக பாஜக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. பின்னர் சந்திராணியின் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்துடன் தவறான வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்டது. எனினும் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்களை கைது செய்தது.
”எனக்கெதிரான அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எந்த ஒரு பெண்ணிற்கும் இத்தகைய அவமானம் ஏற்படக்கூடாது,” என ’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடன் தெரிவித்தார்.
எனினும் மக்களுக்கு சேவையளிக்கவேண்டும் என்கிற சந்திராணியின் முயற்சிகளுக்கு இத்தகைய சம்பவங்கள் தடையாக இருக்கவில்லை. தற்போது தேர்தலில் வெற்றியடைந்த பிறகு தனது தொகுதிக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வகுத்துள்ளார்.
ஸ்டீல் ப்ளாண்ட் நிறுவுவது, பொது போக்குவரத்தை வலுப்படுத்த ரயில்வே லைன்களை அமைப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சக்தியளிக்க அவர்கள் கல்வியை அணுக உதவுவது போன்றவை இத்திட்டங்களில் அடங்கும். சந்திராணி ’ஷீ தி பீப்பிள்’ உடன் உரையாடுகையில்,
“இங்குள்ள இளைஞர்களுக்கு அரசியல் அல்லது அவர்கள் தேர்வு செய்யும் ஏதேனும் ஒரு துறையில் வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.
கியோன்ஜர் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் ’நியூஸ் 18’ உடன் பகிர்ந்துகொள்ளும்போது,
“கியோன்ஜர் தொகுதி குறித்த மக்களின் கண்ணோட்டத்தை நான் அறிவேன். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு குறுகிய அவகாசமே கிடைத்ததால் கியோன்ஜர் பகுதியை பார்வையிட எனக்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை. இந்தத் தொகுதி குறித்து முழுமையாக தெர்ந்துகொள்ள அங்குள்ள மக்களுடன் நேரம் செலவிடவே முன்னுரிமை அளிக்க உள்ளேன்,” என்றார்.
இதற்கு முன்பு ஜனநாயக ஜனதா கட்சியின் தஷ்யந்த் சௌதாலா நாடாளுமன்றத்தின் இளம் உறுப்பினராக இருந்தார். சந்திராணி இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார். 16-வது மக்களவைத் தேர்தலில் தஷ்யந்த் ஹரியானாவின் ஹிசர் தொகுதி சார்பாக போட்டியிட்டார்.
கட்டுரை : THINK CHANGE INDIA