'இறக்கையில்லா ஃபேன்கள்' - காற்று மாசை திறம்பட எதிர்கொள்ள உதவும் நவீன மின்விசிறி ப்ராண்ட்!
கரண் பன்சல் மற்றும் தான்யா கோயல் தம்பதியால் 2021ல் துவக்கப்பட்ட கார்பன் என்விரோடெக், இறக்கை இல்லா மின்விசிறி, காற்று சுத்திகரிப்பு மற்றும் விளக்கு ஆகிய பல பயன் சாதனத்தை வழங்குகிறது.
உள்ளரங்க காற்று மாசு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் தங்கள் இல்லங்களில் காற்றின் தரத்தை அதிகரிக்கும் தேவையை உணர்ந்து வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு அறிக்கை மற்றும் இதர ஆய்வுகள் சுத்திகரிப்பு சாதனங்கள், சமையல் உள்ளிட்ட இல்ல செயல்பாடுகள் காரணமாக வெளிப்புற காற்று மாசை விட, உள்ளரங்க காற்று மாசு ஐந்து மடங்கு மோசமாக இருக்கலாம் என தெரிவிக்கின்றன.
இந்த பின்னணியில், ஜெய்பூரைச் சேர்ந்த 'கார்பன் என்விரோடெக்' (KARBAN Envirotech) காற்று சுத்தகரிப்பு, வெளிச்சம் மற்றும் ஐஓடி கட்டுப்பாடு அம்சங்கள் கொண்ட இறக்கை இல்லா மின்விசிறி மூலம் உள்ளரங்க காற்று மாசு நிர்வாகத்தை மாற்றி அமைத்து வருகிறது.
"காற்று மாசு என்பது உலகலாவிய பிரச்சனை என்றாலும், நம்முடைய வாழ்விடம் எனும் போது, உள்ளரங்க மாசு கவனம் பெறுவதில்லை. இதை மாற்ற விரும்பினேன்,” என்று கார்பன் இணை நிறுவனர் கரண் பன்சல் யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.
கரண் பன்சல் மற்றும் தான்யா கோயல் தம்பதியால் 2021ல் துவக்கப்பட்ட கார்பன் என்விரோடெக், ஐஓடி சார்ந்த காலநிலை மாற்ற கட்டுப்பாடு தீர்வுகளை நவீன இல்லங்களுக்கு அளிக்கும் நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பு ஸ்டார்ட் அப்பாக விளங்குகிறது.
கம்ப்யுடனேஷல் பிளுயிட் டைனமிக்ஸ் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் அம்சங்களை கொண்டு நிறுவனம் காற்று சுழற்சியை மேம்படுத்து, உள்ளரங்க காற்று தரத்தை மேம்படுத்த விரும்புகிறது. நிறுவனர்கள் தங்கள் சுயநிதியாக ரூ.15 லட்சம் கொண்டு நிறுவிய இந்த ஸ்டார்ட் அப் தற்போது 30 ஊழியர்கள் கொண்டுள்ளது.
ஏரோஸ்பேசில் இருந்து…
பன்சலுக்கு பள்ளி காலத்தில் இருந்து மெக்கானிகல் மற்றும் ஏரோடைனமிக்ஸ் ஆகிய துறைகளில் ஆர்வம் இருந்தது. ஐஐடி கவுகாத்தியில் இருந்து மெக்கானிகல் பட்டம் பெற்ற பிறகு, ஏரோஸ்பேஸ் பொறியியலில் பர்டியூ பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றார்.
அதன் பிறகு, கன்வர்ஜண்ட் சயின்ஸ் எனும் சி.எப்.டி, மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து, புதிய கம்பிரசர் மற்றும் ராக்கெட் உதிர்பாகங்கள் உருவாக்கும் சிக்கலான திட்டங்களில் பங்களித்தார்.
அமெரிக்காவில் இருந்த நாட்களில், சிஎப்டி தொடர்பான தனது நிபுணத்துவத்தை இந்தியாவின் காற்று மாசு பிரச்சனைகள் மற்றும் எரிசக்தி செயல்திறன் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம், என நினைத்தார். இந்திய இல்லங்களில் காற்று மாசு முக்கியப் பிரச்சனை என்பதை உணர்ந்திருந்தார்.
"ஏரோடைனமிக்ஸ் மற்றும் திரவ இயக்கத்தில் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், இந்தியா திரும்பிய பின், நுகர்வோர் சாதனங்கள் சந்தையில் குறிப்பாக காலநிலை மாற்ற கட்டுப்பாடு தீர்வுகளில் பெரும் இடைவெளி இருப்பதை உணர்ந்தேன்,” என்கிறார் பன்சல்.
எனது தொழில்நுட்ப ஈடுபாடு மற்றும் பொறியியல் பின்னணியை கொண்டு உள்ளரங்க காற்று தரத்தை மேம்படுத்துவதோடு, இந்தியாவின் காற்று மாசு பிரச்சனையை எதிர்கொள்ளும் திறன் கொண்ட சாதனங்களை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தேன்,’ என்று மேலும் சொல்கிறார்.
காற்று சுத்திகரிப்பு மற்றும் குளிர்வித்தலை அளிக்கும் இறக்கை இல்லா மின்விசிறியை முதலில் உருவாக்க நினைத்தார். எனினும், முதல் முன்னோட்ட வடிவை ஊர்வாக்கிய போது. ஒற்றை செயல்பாடு கொண்ட சாதனம், நவீன இல்லங்களில் மாறுபட்ட தேவைகளுக்கு போதுமானது அல்ல என தெரிந்து கொண்டார்.
"வழக்கமான வீட்டு உபயோக சாதனங்கள் அதிக இடத்தை எடுத்துக்கொண்டு ஒரு பயனை மட்டும் அளிக்கின்றன. ஒரு வடிவமைப்பில் பலவித பயன் அளிக்கும் சாதனத்தை உருவாக்க விரும்பினோம். இது செலவையும் குறைக்கும்,” என்கிறார்.
வடிவமைப்பு நோக்கில் பல்வேறு முன்னோட்ட வடிவங்களை உருவாக்கினர்.
“20–30 முயற்சிகளுக்கு பிறகு சரியான வடிவமைப்பு கிடைத்தது. முதல் மாதிரிகள் கையால் தயாரிக்கப்பட்டு, மூலப்பொருட்கள் பெறுவதிலில் பலவித பிரச்சனைகள் இருந்தன, என்கிறார் பன்சல். தற்போதைய மாதிரி, பட்ஜெட் காரணங்களுக்கான மரத்தை மேல் பகுதியை கொண்டுள்ளது.
"உள்ளூரில் தருவிக்கும் போது குறிப்பாக கைவினை நோக்கிலான பயன்பாட்டிற்கு தருவிக்கும் போது மரம் சிறந்த தேர்வு மற்றும் துவக்கத்தில் அதிக இயந்திரங்கள் தேவை இல்லை,” என்கிறார்.
எனினும், எதிர்கால மாதிரிகளில் வெகுமக்கள் உற்பத்திக்கு பிளாஸ்டிக் மாதிரிக்கு மாற திட்டமிட்டுள்ளது.
"சுயநிதி ஸ்டார்ட் அப் என்ற முறையில், தரத்தை பாதிக்காத வகையில் மற்றும் சந்தையில் சாதனத்தை கொண்டு வர ஏற்ற தேர்வு எங்களுக்கு தேவைப்பட்டது. மரம் இதற்கு ஏற்றதாக அமைந்தது,” என்கிறார் பன்சல்.
பல நோக்கு சாதனம்
ஏர்ஜோன் மற்றும் ஏர்ஜோன் லைட் ஆகிய இரண்டும் சாதனங்களை கார்பன் வழங்குகிறது. இவை மூன்று வித வண்ணங்களில் வருகின்றன. ஏர்ஜோன் பெரிய பரப்பிற்கானது. ஏர்ஜோன் லைட் சிறிய இடங்களுக்கு ஏற்றது.
ஐஐஎம் அகமாதாபாத்தின் ரூ.10 லட்சம் முதலீட்டில், முதல் மாதிரி ஏர்ஜோன் 2022 நவம்பரில் அறிமுகமானது. பின் `ஏர்ஜோன் லைட்` அறிமுகம் ஆனது.
நுகர்வோர் நேரடி மாதிரியில் செயல்படும் நிறுவனம் முதல் 9 மாதங்களில் ஆயிரம் சாதனங்கள் விற்று, தனது இணையதளம் மற்றும் அமேசான் வாயிலாக ஒரு கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கோவை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், ஜெய்பூர் நகரங்களில் 10 டீலர்கள் பெற்றுள்ளது.
“மேம்பட்ட செயல்திறனுக்காக திரவ இயக்க அல்கோரிதம் மற்றும் ஐஓடி ஒருங்கிணைப்பு சாதனத்தில் உள்ளது. மேற்கூரையில் பொருத்தப்படும் ஏர்ஜோன் மின்விசிறிகள், காற்று சுழற்சி மற்றும் சுத்திகரிப்பு தன்மையோடு எரிசக்தி செயல்திறன் மற்றும், காலநிலை மாற்ற கட்டுப்பாடு தீர்வு கொண்டுள்ளது. இறக்கை இல்லாத வடிவமைப்பு அமைதியான செயல்பாட்டுடன் காற்று தரத்தையும் மேம்படுத்துகிறது,” என்கிறார் பன்சல்.
இதன் பாரெவர் பியூர் நுட்பம் குறைந்த எரிசக்தியில் தொடர்ச்சியாக தூய காற்றை அளிக்கிறது. குளிர்வித்தல் மற்றும் சுத்திகரிப்பிற்கு 30 வாட் மட்டுமே தேவைப்படுகிறது.
இதன் உற்பத்தி ஆலை ஜெய்பூரில் அமைந்துள்ளது. தினமும் 120 சாதனம் உற்பத்தி திறன் கொண்டது. ஒரு சாதனம் தயாரிக்க 40 மணி நேரம் தேவை.
எதிர்கால திட்டம்
இந்திய வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தை 2030ல் 7,197.6 மில்லியன் வருவாயை கொண்டிருக்கும் மற்றும் ஆண்டு அடிப்படையில் 11 சதவீத வளர்ச்சி காணும் என்று ஹரிசான் கிராண்ட் வியூ ரிசர்ச் தெரிவிக்கிறது.
இந்த பரப்பில் வளர்ச்சி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கார்பன் நிறுவனம் இதுவரை, ஆல் இன் கேபிடல், டைட்டன் கேபிடல், ரைன்மீட்டர், அர்பன் கம்பெனி உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.9.3 கோடி திரட்டியுள்ளது.
2025 நிதியாண்டில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் இல்லங்களை சென்றடை இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இரண்டு புதிய மாதிரிகளை அறிமுகம் செய்ய உள்ளது. அனுபவ மையங்களை அமைப்பது உள்ளிட்ட டீலர்கள் விரிவாக்கத்தையும் திட்டமிட்டுள்ளது.
“நுகர்வோர் சாதனத்தை நேரடியாக உணரும் வாய்ப்பை அளிக்க விரும்புகிறோம். அனுபவ மையங்கள் இதை நிகழ்நேரத்தில் உணர வைக்கும்,“ என்கிறார் பன்சல்.
இந்தியாவை கடந்து அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா ஆகிய நாடுகளில் தடம் பதிக்கவும் நிறுவனம் விரும்புகிறது.
“வளர்ச்சி வாய்ப்பு அதிகம் உள்ளது. எங்கள் சாதனங்கள் சர்வதேச தேவையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய சந்தைகளில் இவற்றை அறிமுகம் செய்ய உற்சாகமாக இருக்கிறோம்,” என்கிறார் பன்சல்.
(இந்தியாவின் பிரகாசமான 30 முன்னணி ஸ்டார்ட் அப்களை பட்டியலிடும் யுவர்ஸ்டோரி டெக் 30 பட்டியலில் இடம்பெறும் நிறுவனமாக கார்பன் என்விரோடெக் திகழ்கிறது)
ஆங்கிலத்தில்: பூஜா மாலிக், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan