இந்தியாவில் யூடியூப் கிரியேட்டர்கள் வருவாய் 100% வளர்ச்சி!
கடந்த மூன்று ஆண்டுகளில் யூடியூப் கிரிடேட்டர்கள்,, கலைஞர்கள் மற்றும் மீடியா நிறுவனங்களுக்கு 30 பில்லியன் டாலருக்கு மேல் வருவாயாக வழங்கியிருக்கிறது.
இந்தியாவில் யூட்யூப் கிரியேட்டர்கள் வருவாய் 100 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், சூப்பர்சாட், சூப்பர்ஸ்டிக்கர்ஸ், சேனல் சந்தா ஆகிய அம்சங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன என்று யூடியூப் தெரிவித்துள்ளது.
யூடியூப் ஷார்ட்ஸ் நிதி எனும் பெயரில் 100 மில்லியன் டாலர் நிதியை அறிமுகம் செய்துள்ள யூடியூப், கிரியேட்டர்கள் வருவாய் ஈட்டி தங்கள் வர்த்தகத்தை யூடியூப்பில் உருவாக்கிக் கொள்ள இது புதிய வழியாக அமைகிறது என்றும் தெரிவித்துள்ளது.
டிக்டாக் போன்ற சேவைகளை எதிர்கொள்ளும் வகையில் குறும் வீடியோக்களுக்கான ஷார்ட்ஸ் சேவையை கடந்த ஆண்டு யூடியூப் அறிமுகம் செய்தது. இதன் முன்னோட்ட வடிவம் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆனது.
இந்நிலையில், வளர்ந்து வரும் இந்திய கிரியேட்டர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் படைப்பூக்கத்தை வர்த்தகமாக உருவாக்கிக் கொள்ள யூடியூப் உதவி வருவதாக இது தொடர்பான வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேடையில் இருந்து வரும் வருவாயில் பெரும்பகுதியை கிரியேட்டர்களுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்யும் யூடியூப் பார்ட்னர் திட்டம் தவிர, வர்த்தக விற்பனை, சந்தா கட்டணம், சூப்பர் சாட், சூப்பர் ஸ்டிக்கர் உள்ளிட்ட விளம்பரம் அல்லாத வழிகளையும் யூடியூப் உருவாக்கியிருப்பதாக இந்த வலைப்பதிவு தெரிவிக்கிறது.
இந்த வருவாய் வழிகள் காரணமாக, 2020 பிப்ரவரி முதல் மே மாத காலத்தில் இந்தியாவில் கிரியேட்டர்கள் வருவாய் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் யூடியூப் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில், கடந்த மூன்று ஆண்டுகளில் யூடியூப் உருவாக்குனர்களுக்கு, கலைஞர்களுக்கு மற்றும் மீடியா நிறுவனங்களுக்கு 30 பில்லியன் டாலருக்கு மேல் வழங்கியிருக்கிறது. மேலும், 2021 இரண்டாம் காலாண்டில் இதுவரை எந்த காலாண்டிலும் இல்லாத அளவு அதிகத் தொகையை வழங்கியிருக்கிறது.
யூடியூப் அண்மை திட்டமான ஷார்ட்ஸ் நிதியின் கீழ், மாதந்தோறும் தகுதிவாய்ந்த கிரியேட்டர்கள் பயன்பெற வழி செய்கிறது.
"யூடியூப்பில் ஷார்ட்ஸ் மூலம் வருவாய் வழியை உண்டாக்குவதற்கான துவக்கம் இது. தகுதி அம்சங்களை பூர்த்தி செய்யும் எந்த கிரியேட்டரும் இதில் பங்கேற்கலாம். இந்தியாவில் இதன் தாக்கம் குறித்து ஊக்கம் கொள்கிறோம்,” என்றும் யூடியூப் தெரிவித்துள்ளது.
பார்வைகள் மற்றும் தாக்கத்தின் அடிப்படையில் கிரியேட்டர்கள் இதன் மூலம் 100 டாலர் முதல் 10,000 டாலர் வரை வருவாய் ஈட்டலாம்.
செய்தி- பிடிஐ | தமிழில்: சைபர் சிம்மன்