2021ல் யூடியூப் மூலம் 405 கோடி ரூபாய் சம்பாதித்த இளைஞர்; இவர் தான் ‘மிஸ்டர் பீஸ்ட்’
யூ-டியூப்பில் அதிகம் சம்பாதித்த 10 நபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ஜிம்மி டொனால்ட்சன் என்கிற 23 வயது அமெரிக்க யூடியூபர் 2021ஆம் ஆண்டில் 54 மில்லியன் சம்பாதித்து முதலிடம் பிடித்துள்ளார்.
யூடியூப்பில் அதிகம் சம்பாதித்த 10 நபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில், ஜிம்மி டொனால்ட்சன் என்கிற 23 வயது அமெரிக்க யூடியூபர் 2021ஆம் ஆண்டில் 54 மில்லியன் சம்பாதித்து முதலிடம் பிடித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொழுதுப்போக்கு தளங்களும், திரையரங்குகளும் பலத்த அடிவாங்கின. ஆனால், வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு சோசியல் மீடியாக்கள் நல்ல பொழுதுபோக்கு தளமாக மாறியது. குறிப்பாக 2021ம் ஆண்டில் யூடியூப் மக்களிடையே நல்ல வளர்ச்சியை கண்டது.
2021ஆம் ஆண்டில் உலகம் முழுக்க யூடியூப் தளத்தை 2.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தியதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் 100 கோடி மணி நேரத்துக்கான வீடியோக்களை மக்கள் கண்டு களித்துள்ளதாக யூ-டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் பொழுது போக்காக மட்டும் இல்லாமல், அதனை பதிவேற்றுவோருக்கு நல்ல வருவாய் தரக்கூடியதாகவும் உள்ளது. அதனால் தான் கொரோனா லாக்டவுன் காலத்தில் பல்வேறு திறமைகளைக் கொண்ட யூடியூபர்களைக் காண முடிந்தது.
அப்படி யூடியூப் மூலம் அசத்தல் வீடியோக்களை வெளியிட்டு கோடிகளில் சம்பாதித்த யூ-டியூபர்களின் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்மி டொனால்ட்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
யார் இந்த ஜிம்மி டொனால்ட்சன்?
அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ‘மிஸ்டர் பீஸ்ட்’ என்ற யூடியூப் சேனலை தொடங்கிய போது அது இப்படியொரு அசுர வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
2017ம் ஆண்டு ஜிம்மி டொனால்ட்சன் தனது 13 வயதில் தொடங்கிய ‘மிஸ்டர் பீஸ்ட்’ யூடியூப் சேனல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஸ்டன்ட் காட்சிகள், பார்வையாளர்களை மிரள வைக்கும் பிராங்க் வீடியோக்கள் மூலமாக மக்களை கவர்ந்த ‘மிஸ்டர் பீஸ்ட்’ யூடியூப் சேனலில் 88 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதுவரை யூடியூப் சேனலின் ஒட்டுமொத்த பார்வை நேரம் (வியூஸ்) 1000 கோடியைக் கடந்துள்ளது.
அதனால் தற்போது மிஸ்டர் பீஸ்ட்; கேமிங், பீஸ்ட் ரியாக்ட்ஸ், மிஸ்டர் பீஸ்ட் ஷார்ட்ஸ், மிர்பிரோ, மிஸ்டர் பீஸ்ட் 2 மற்றும் பீஸ்ட் பரோன்ராபி என பல சேனல்களை ஜிம்மி டொனால்ட்சன் நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் ஜிம்மி மட்டுமே வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது வீடியோ எடிட்டர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் என மொத்தம் 30 பேருக்கு சம்பளம் கொடுத்து பணி அமர்த்தும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
ஜிம்மி வெளியிடும் ஸ்டன்ட் வீடியோக்கள் எல்லாம் ஏதோ குழந்தை தனமான வீடியோக்கள் அல்ல, சவப்பெட்டிக்குள் உயிருடன் மண்ணில் புதைந்து 50 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வருவது போன்ற மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி, யூடியூப் மூலமாக கோடிகளில் சம்பாதிக்கும் வருமானத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழாமல், டிரஸ்ட்களுக்கு நிதி உதவி அளிப்பது, ஏழை மக்களுக்கு உதவுவது, சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு போன்ற விஷயங்களுக்கு செலவிட்டு வருகிறார்.
2021ல் அதிகம் சம்பாதித்த யூடியூப்பர்:
பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் 2021ம் ஆண்டில் யூடியூப் மூலம் அதிகம் சம்பாதித்த யூ-டியூப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிக வியூஸ்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல பிராண்டுகளுடனான கூட்டாண்மை, ஸ்பான்சர் ஷிப்கள், வணிக ரீதியிலான வியாபாரங்கள் போன்றவை மூலம் யாரால் பணம் சம்பாதிக்க முடிந்திருக்கிறதோ அவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இந்த அம்சங்களை எல்லாம் ஈடு செய்து, ஜிம்மி டொனால்ட்சனின் மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனல் முதலிடம் பிடித்துள்ளது.
2021ம் ஆண்டு 54 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 405 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த ரயன் காஜியைப் பின்னுக்குத் தள்ளி ஜிம்மி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
தரவு பகுப்பாய்வு இணைய தளமான Social Blade இன் படி, மிஸ்டர் பீஸ்ட் சேனல் யூடியூபில் 8வது அதிக சந்தாதார்களைக் கொண்ட சேனலாகவும், அமெரிக்காவில் 3வது பெரிய சேனலாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: ஃபோர்ப்ஸ் | தொகுப்பு: கனிமொழி