மாற்றுத்திறனாளி ஊழியருக்கு Zomato நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
Zomato நிறுவனத்திற்கு டெலிவரி பாயாக வேலை செய்யும் ராமு சாஹு எனும் மாற்றுத்திறனாளிக்கு ஒரு மறக்க முடியாத ஆச்சரிய பரிசை அளித்திருக்கிறது அந்நிறுவனம்.
தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கும் இந்த உலகில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், மனிதருக்கு சக மனிதர் மீது கருணை இருப்பதில்லை எனும் ரீதியில் தான் நாம் வாசிக்கும் செய்திகளில் பெரும்பான்மை இருக்கும். இந்த புலம்பல்களை எல்லாம் கடந்து ஒன்றிரண்டு கதைகள், மீண்டும் நமக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கும்! அப்படியான ஒரு கதை தான் ராமு சாஹூவினுடையது.
சில நாட்களுக்கு முன்னர், ஒரு மாற்றுத்திறனாளியான Zomato டெலிவரி நபர் கையால் இயக்கும் மூன்று சக்கர வாகனத்தில் உணவை டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஹனி கோயல் என்பவரால் எடுக்கப்பட்டிருந்த இந்த வீடியோவில், ஜோமாட்டோ டெலிவரி நபர் வேகமாக செல்லும் காட்சி மட்டுமே இருந்தது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்த கோயல், “வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைக்கும் அத்தனை பேருக்கும் இந்த மனிதன் பெரிய ஊக்கமாக இருப்பான், இவரை பிரபலமாக்குங்கள்...” என்றும் எழுதியிருந்தார்.
இணையம் அதன் வேலையை செய்யத் தொடங்க, வீடியோ உடனடியான ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது. மக்கள் வீடியோவில் இருப்பவரின் உறுதியையும், விடாமுயற்சியையும் கண்டு வியந்தனர்.
இதைப் பார்த்த ஜோமாட்டோ, “இதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தடைகளை எல்லாம் கடந்து - எங்கள் பயனர்களுக்கு எல்லாம் அருமையான உணவை கொண்டு சேர்ப்பது எங்கள் டெலிவரி பார்ட்னர்கள் தான் என்பதால், அவர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்,” என அப்போது பதிலும் சொல்லியிருந்தது.
சமீபத்தில், Zomato நிறுவனத்தை தொடங்கிய தீப்பிந்தர் கோயல்,
“நிறுவனம் அளித்த மின்சார மூன்று சக்கர வண்டியை ராமு சாஹு ஏற்றுக் கொண்டார்” என ட்வீட் போட்டிருந்தார். அப்போது தான் அவரின் பெயர் முதன்முறையாக இணைய உலகிற்கு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூடவே, ராமு சாஹு அந்த வண்டியை ஓட்டிப் பார்க்கும் வீடியோவும் பகிரப்பட்டிருந்தது.
இந்த பிரம்மாண்டம் ஒன்றை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறது என்றால், எத்தனை தடைகள் வந்தாலும், அதை கடந்து அந்த பொருள் உங்களுக்கு வந்து சேரும் என்று ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அது ராமுவின் கதையில் உண்மையாகியிருக்கிறது. கொஞ்சம் நம்பிக்கையோடும், கடின உழைப்போடும், மன உறுதியோடும் காத்திருந்தால் இந்த பிரம்மாண்டம் அதன் வேலையை செய்யும்.
நன்றி : news18.com