மீண்டும் மத நம்பிக்கை சர்ச்சையில் சிக்கிய Zomato: டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பரபரப்பு!
பன்றி மற்றும் மாட்டிறைச்சியை டெலிவரி செய்ய முடியாது எனக் கூறி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் ஜோமேட்டோ டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் மீண்டும் மத நம்பிக்கை சர்ச்சையில் சிக்கியுள்ளது zomato.
சமீபகாலமாக மத நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் தொடர்பான பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது ஜோமேட்டோ நிறுவனம்.
கடந்த மாத இறுதியில் மத்திய பிரதேசத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு இந்து அல்லாத ஊழியர் ஒருவர் மூலம் உணவை வழங்கியதாக ஜோமேட்டோ மீது புகார் கூறினார். தான் ஆர்டர் செய்த உணவையும் திருப்பி அனுப்பிய அந்நபர், இது தொடர்பாக சமூகவலைதளத்திலும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவிற்கு பதிலடி தரும் விதமாக, வாடிக்கையாளரின் அந்தப் பதிவை பகிர்ந்த ஜோமேட்டோ நிறுவனம், "உணவுக்கு மதம் கிடையாது; உணவே ஒரு மதம்," என பதிலடி கொடுத்தது. ஜோமேட்டாவின் இந்தப் பதிவு நெட்டிசன்களிடையே பாராட்டுகளைப் பெற்றது.
இது தொடர்பாக அப்போது ஜோமேட்டோ நிறுவனர் திபீந்தர் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
"இந்தியாவின் மதிப்பீடு மீதும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகள் (உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள்) ஆகியோரின் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது போன்ற பிரச்சினைகளில் எங்களுக்குக் கிடைக்கும் லாபத்தை இழப்பதில் எங்களுக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை," எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சினை அடங்குவதற்கு முன்னதாகவே மீண்டும் மதம் சார்ந்த அடுத்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறது ஜோமேட்டோ.
இம்முறை பன்றி மற்றும் மாட்டிறைச்சியை டெலிவரி செய்ய முடியாது எனக் கூறி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் ஜோமேட்டோ டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
"சிலர் மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சி உணவுகளையும் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், இது, கொண்டு செல்பவரின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறது," எனக் கூறி இந்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜோமேட்டோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில்,
"இந்த பணியின் இயல்பு குறித்து எங்கள் ஊழியர்களுக்கு சந்தேகமில்லாமல் ஏற்கனவே விளக்கி உள்ளோம். எங்கள் ஊழியர்களுக்கும் இது குறித்து தெரியும். ஹவுராவில் ஒரு சிறு குழுதான் இப்படி கவலை எழுப்பி உள்ளார்கள். நாங்கள் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோ,ம்" எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும், இந்த விவகாரத்தால் மீண்டும் ஜோமேட்டோ நிறுவனம் இணையத்தில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.