இந்த க்யூ ஓட்டு போட அல்ல... ஹோட்டலில் பார்சல் பெற Zomato டெலிவரி பாய்ஸ் காத்திருக்கும் படம் இது!
1.8 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரே உணவு ஆர்டர், நதியை போட்டில் கடந்து உணவு டெலிவரி... என உணவு டெலிவரியில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ள Zomato வெளியிட்டுள்ள சுவாரசிய தகவல்கள்!
பொதுவாக உணவகங்களுக்குச் சென்றால் கூட்டம் இருக்கும்பட்சத்தில் நாம் காத்திருந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் இன்றைய சூழலில் ஹோட்டலில் கூட்டம் இருந்தால் அது உணவு டெலிவரி ஆட்களின் க்யூவாகவே இருக்கிறது. சமீபத்தில் ஜொமாடோ டெலிவெரி பாய்ஸ்கள் பெரிய க்யூவாக ஓர் ஓட்டலில் நின்று கொண்டிருந்த புகைப்படம் வைரலாகியது. அப்படி எந்த ஓட்டல் அது? எந்த ஊரில் இத்தனை பெரிய க்யூ? என்று தானே யோசிக்கிறீர்கள்...
இது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓர் பிரியாணி கடையின் முன் நின்ற கூட்டம். ஹைதராபாத் பவர்ச்சி உணவகத்தின் பிரியாணி மிகவும் பிரபலம் என்பதால் நாள் ஒன்றுக்கு ஜொமாடோ டெலிவரிக்கு மட்டுமே சுமார் 2000 ஆர்டர்கள் வந்து குவிகிறது. மற்றவர்களை விட இவ்வுணவகத்துடன் இணைந்திருக்கும் ஜொமாடோ டெலிவரி பாய்ஸ்களின் கூட்ட நெரிசல் எக்கச்சக்கம்.
ஸ்மார்ட்ஃபோன் ஒன்று போதும் நீங்கள் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பதற்கு. அப்படி ஸ்மார்ட்ஃபோனால் இன்று பெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்பது ஆன்லைன் ஃபுட் ஆப் நிறுவனங்கள். இதில் முதன்மையான ’ஜொமாடோ’ (Zomato) ஆன்லைன் டெலிவரி, உலகளவில் 10,000 நகரங்களில் 1.4 மில்லியனுக்கும் மேலான உணவகங்களுடன் இணைப்பு வைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 1 லட்ச உணவகங்கள் அடங்கும்.
ஹைதராபாத், சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள 213 நகரங்களில் ஜொமாடோ டெலிவரி வெற்றிகரமாக நடந்துக்கொண்டு வருகிறது. இப்படி பெரும் வளர்ச்சி அடைந்திருக்கும் ஜொமாடோ நிறுவனம் கடந்த ஆண்டின் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில்,
“இந்தியாவில் ஜொமாடோ ஒரே வருடத்தில் 15 நகரங்களிலிருந்து 213 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது. டயர் 2, 3 நகரங்கள் மட்டுமின்றி டயர் 5 நகரங்களும் இன்றும் ஆன்லைன் டெலிவரியை பயன்படுத்துகின்றனர்,” என குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவின் உணவு விருப்பம் மிகவும் விசாலமானது. அதனால் தேவைகளும் ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் சாதரணமாக வண்டியில் சென்று ஓர் முகவரிக்கு டெலிவரி செய்வதோடு நில்லாமல் ஜொமாடோ டெலிவரி நதி வழியும் பயணித்துள்ளது ஹைலைட்.
“குவஹாத்தியில் ஓர் நகரத்திற்கு பிரம்மபுத்திரா நதி வழியே போட்டில் சென்று ஹக்கா நூடுல்சை டெலிவரி செய்துள்ளது. இந்த விநியோகத்தை முடிக்க குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆனது” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையின் படி கோலாப்பூர் உள்ள 70% சதவித மக்கள் உணவு ஆன்லைலின் டெலிவரியை பயன்படுத்தியதில்லை என்றும் ஜொமாடோவே முதன் முதலில் அம்மக்களுக்கு உணவு ஆன்லைன் டெலிவரியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த துணி என்னும் சிறிய கிராமமே அதிகம் கேஷ்லெஸ் ஆன்லைன் பணம் மூலம் உணவை பெற்ற கிராமாகும். அதேபோல் ஆன்லைன் டெலிவரியை அறிமுகப்படுத்திய நாள் அன்றே 1000 ஆர்டர்களை பஞ்சாபில் உள்ள அபோகர் கிராமம் பெற்றுள்ளது. அன்று முதல் இன்று வரை குறைந்தது நாள் ஒன்றுக்கு 2000 ஆர்டகளை அக்கிராமத்தில் இருந்து மட்டுமே வருகிறது.
ஒவ்வொரு நகரத்திற்கும் ஏற்றார் போல் உணவு ஆர்டர்களும் மாறுகிறது, அதிலும் சிறு ஆர்டர்கள் மட்டுமின்றி பெரிய ஆர்டர்களும் இந்த டெலிவரி ஆப்களுக்கு கிடைக்கிறது.
“ஜெய்பூரில் 415 ஃபுட் பாக்ஸ் உணவு விநியோகம் செய்து ₹1,84,760 ரூபாய்க்கு டெலிவரி செய்துள்ளது ஜொமாட்டோ. லக்னோவிலும் ஒரு தனிநபர் ₹16,800 ரூபாய் மதிப்புள்ள உணவை ஆர்டர் செய்துள்ளார்.”
தொழில்நுட்ப வளர்ச்சி பெருநகரங்களுக்கு மட்டும் போய்ச் சேராமல் அனைத்து வித மக்களையும் போய் சேர்வது சிறந்ததே. இந்த ஆன்லைன் உணவக விநியோகம் மக்களுக்கு நல்லதை செய்வதைவிட லட்ச கணக்காணோருக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது.