ரயில் பெட்டிக்கே இனி உணவு டெலிவரி பெறலாம் - 100 ரயில் நிலையங்களில் Zomato டெலிவரி சேவை அறிமுகம்!
ஜொமேட்டோவின் புதிய வசதி, 500 ரெஸ்டாரண்ட்களில் இருந்து தேர்வு செய்து, ரயில் பெட்டியில் நேரடியாக உணவு பெறும் வாய்ப்பை அளிக்கிறது.
Zomato Now இப்போது, 100 ரயில் நிலையங்களுக்கு மேல், ரயில் பெட்டிகளில் நேரடியாக உணவு வழங்குவதாக, இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ தீபேந்தர் கோயல் தெரிவித்துள்ளார். லிங்க்டுஇன் மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
“ரயில்களில் ஏற்கனவே பத்து லட்சம் ஆர்டர்களை நிறைவேற்றியுள்ளோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜொமேட்டோ நிறுவனம், ஐசிஆர்டிசியுடன் இணைந்து ரயில் பெட்டிகளில் ஏப்ரல் மாதம் முதல் உணவு டெலிவரி செய்து வருகிறது.
குறித்த நேரத்தில் டெலிவரி, நிகழ்நேர டிராக்கிங் வசதி, இலவச ரத்து மற்றும் 500 ரெஸ்டாரண்ட்களில் இருந்து தேர்வு செய்து, ரயில் பெட்டியில் நேரடியாக பெறும் வாய்ப்பு ஆகிய அம்சங்களை இந்த வசதி கொண்டுள்ளது.
ஜொமேட்டோ மூலம் உரிய பி.என்.ஆர் (PNR) எண் வாயிலாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம். ரயில் பெட்டியை தேடி வந்து சேவை அளிப்பதற்காக தனியே நிலைய சேவை கட்டணம் (வரிகள் நீங்கலாக) வசூலிக்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரம், பி.ஓ.எஸ் பார்ட்னர்களுடன் ஒருங்கிணைப்பை எளிதாக்கி, வேகமாக்குவதற்காக புதிய பி.ஓ.எஸ் டெவலப்பர் மேடையை அறிமுகம் செய்தது.
வர்த்தக கணக்கு மூலம் சிக்கல் இல்லாமல் பதிவு செய்ய வர்த்தக நிறுவனங்களுக்கான ஜொமேட்டோ (ZFE), சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சம் மூலம், வர்த்தக நிறுவன ஊழியர்கள் அளிக்கும் ஆர்டர்கள் தொகை நிறுவனத்தால் திரும்பி அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நிறுவனங்கள் நேரடியாக வர்த்தகங்களுக்கு பில் செய்யலாம்.
ஆங்கிலத்தில்: அபா வாரியர், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan