Zomato ஐபிஓ: ரூ.2.13 லட்சம் கோடி அளவிற்கு குவிந்த விண்ணப்பங்கள்!
ஐபிஓ விற்பனையில் புதிய சாதனை!
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வின் ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு, சில தினங்கள் முன் செபி ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து ஜொமாட்டோ நிறுவனம் ஐபிஓ பங்கின் விலை ஒன்றுக்கு 72-76 ரூபாய் என நிர்ணயித்திருந்தது. இந்த நிர்ணயத்தால் ஐபிஓ மூலம் ரூ.9,375 கோடி நிதி திரட்ட முடியும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை முதலீடு செய்ய விற்பனை தொடங்கப்பட்டது.
இந்தநிலையில், எதிர்பார்க்கப்பட்டதைவிட, Zomato ஐபிஓ விற்பனைக்கு அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது. முன்னதாக, ரூ.9,375 கோடி நிதி திரட்ட எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
ஐபிஓ விற்பனையில் ரூ.2.13 லட்சம் கோடி அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன. இது சமீபத்தில் விற்கப்பட்ட ஐபிஓ விற்பனையில் மிகப்பெரிய அளவாகும். ஐபிஓ வரலாற்றில், இது மூன்றாவது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு இதுபோன்ற வரவேற்பு கிடைத்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ 2018ம் ஆண்டு வெளியானது. அப்போது ரூ.11,563 கோடி அளவுக்கு நிதி திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், 8.44 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இப்போதுவரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. தொடர்ந்து இந்த விற்பனை முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதற்கடுத்தபடியாக, கோல் இந்தியா நிறுவனம் இதேபோல் ஒரு சாதனையை நிகழ்த்தியது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ 2010ம் ஆண்டு வெளியானது. அப்போது ரூ.15,199 கோடிக்கு நிதி திரட்ட திட்டமிடப்பட்ட நிலையில், 2.32 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன.
இதையடுத்து தற்போது ஜொமாட்டோ நிறுவனம் இதேபோன்று ஒரு சாதனையை படைத்தது. முன்னதாக, ஜொமாட்டோ நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ரூ.41 கோடிக்கு பங்குகளை ஒதுக்கியது. ஆனால், 31 கோடி ரூபாய் அளவுக்கே பங்குகளை வாங்க அந்நிறுன பணியாளர்கள் முன்வந்தனர்.
அதேநேரம், சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கில் 7.45 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாட்டு மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் முறையே, 32.9 மடங்கு மற்றும் 51.7 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், வரும் ஜூலை 27-ம் தேதி இந்த பங்குகள் பட்டியலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.