ஐபிஓ மூலம் ரூ.16,600 கோடி திரட்ட திட்டம்: பேடிஎம் பங்குதாரர்கள் ஒப்புதல்!
நிறுவனர் அந்தஸ்தை இழக்கும் விஜய் சேகர் ஷர்மா!
ஐபிஓ மூலம் 16,600 கோடி ரூபாய் திரட்ட இந்தியாவின் ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள பேடிஎம், ரூ.16,600 கோடி பொதுப் பங்கு வழங்கல் (ஐபிஓ) திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல பங்குதாரர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, ரூ.12,000 கோடி புதிய பங்குகளாகவும், சுமார் 4600 கோடி ரூபாய்க்கு ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருகிராமை தளமாக கொண்ட இந்த நிறுவனம், இந்த வார இறுதியில் அதன் வரைவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பேடிஎம் நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஐபிஓ விற்பனைக்கான அனுமதி கிடைக்கவே, இந்த வாரத்த்துக்குள் ஐபிஓ விற்பனைக்கு அனுமதி வேண்டி செபியிடம் விண்ணப்பிக்க உள்ளது அந்த நிறுவனம். பின்னர் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நவம்பரில் ஐபிஓ வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஐபிஓ விற்பனை தொடங்கினால் பேடிஎம் நிறுவனர் என்ற அந்தஸ்தை இந்த நிறுவனத்தைத் தொடங்கிய விஜய் சேகர் சர்மா இழக்க நேரிடும். ஏனென்றால் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விதிமுறைப்படி,
ஒரு நிறுவனத்தின் ஐபிஓ வெளியான பிறகு அந்த நிறுவனத்தின் நிறுவனர் வசம் 20 சதவீத பங்குகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பேடிஎம் விஷயத்தில் ஐபிஓவுக்கு பிறகு விஜய் சேகர் சர்மா வசம் 14.61 சதவித பங்குகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் நிறுவனர் என்ற அந்தஸ்த்தை அவர் இழப்பார். என்றாலும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் சேகர் சர்மா தொடர்ந்து செயல்படுவார்.
இதற்கிடையே, பேடிஎம் ஐபிஓக்கு விண்ணப்பிக்க இருக்கும் நிலையில் அதன் உறுப்பினர்கள் வாரியத்தை தீவிரமாக மாற்றியமைத்து வருகிறது. குழுவில் உள்ள அனைத்து சீன நாட்டினருக்கும் பதிலாக அமெரிக்க மற்றும் இந்திய குடிமக்கள் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டு வருகின்றனர்.
அலிபே-யின் ஜிங் சியாண்டோங், ஆண்ட் பைனான்சலின் குமிங் செங், மற்றும் அலிபாபாவின் மைக்கேல் யுயென் ஜென் யாவ் மற்றும் டிங் ஹாங் கென்னி ஹோ ஆகியோர் பேடிஎம் இயக்குநர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டனர். இதேபோல் கடந்த வாரம் பேடிஎம் தலைவரும் அதன் நிதிச் சேவை பிரிவின் தலைவருமான அமித் நய்யர் ராஜினாமா செய்தார். மேலும், தலைமை மனிதவள அதிகாரி (சி.எச்.ஆர்.ஓ) ரோஹித் தாகூரும் அந்த நிறுவனத்தில் வெளியேறினார்.
இந்நிலையில், ஜோமோட்டோவுக்கு பிறகு பொதுச் சந்தைகளுக்குச் செல்லும் இரண்டாவது ஸ்டார்ட்அப் நிறுவனமாக பேடிஎம் மாறியுள்ளது. ஜோமோட்டோவின் ஐபிஓ இன்று தொடங்கி 16ம் தேதி முடிவடைகிறது. என்றாலும், அதன் பங்குகள் ஏற்கனவே கட்டுப்பாடற்ற சந்தைகளில் பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: அபராஜிதா | தமிழில்: மலையரசு