சமூக ஊடகங்களில் லைவில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் கேரள அரசியல்வாதிகள்!
ஃபேஸ்புக்கில் நேரலையில் வருவதால் நெட்டிசன்கள் நேரடியாகவே அரசியல் தலைவர்களிடம் கேள்விகளை எழுப்புகின்றனர்!
அஸ்ஸாம், மேற்குவங்கம், தமிழகம், புதுவை, கேரளம் என ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் மெல்ல சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கடந்த காலங்களில், வாக்கு சீட்டுகளில், கட்சியின் சின்னங்களை சீல் வைத்து வாக்குகளை பதிவு செய்யும் முறை போய், வாக்கு பதிவு இயந்திரங்களில் பொத்தான்களை பதிவு செய்யும் முறையும் நடைமுறைக்கு வந்துவிட்டன. வாக்கு பதிவு இயந்திரங்களில் பொத்தான்களை அழுத்தி வாக்குகளை பதிவு செய்யும் முறையும் நடைமுறைக்கு வந்துவிட்டன.
ஆனால், கடந்த 2014 ஆம் தேர்தலில் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி சமூக வலைத்தளங்களில் தனது பிரச்சாரத்தை படுவேகமாக கொண்டு சென்றதன் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றார்.
நடைப்பெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ள நிலையில், கேரளா அரசியல்கட்சி தலைவர்கள் தங்கள் பிரச்சார உத்திகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் எனலாம்.
பொதுவாக, சமூக வலைத்தளங்களின் வருகைக்கு முன், அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய அந்தந்த கட்சிகளின் வலுவை பொறுத்து தூர்தர்ஷன் உள்ளிட்ட சில சேனல்களில் நேரத்தை ஒதுக்கும் நடைமுறையை கடந்த காலங்களில் தேர்தல் ஆணையம் செய்து வந்தது. குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்கள் 15 நிமிடங்கள், 30 நிமிடங்கள் என தொலைக்காட்சிகளில் தோன்றி தங்கள் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதை பற்றி எடுத்து கூறுவார்கள். ஆனால் தொலைக்காட்சிகளில் அதை பார்க்கும் வாக்காளர்களால் அவர்களிடம், தங்களின் சந்தேகங்களை கேள்வி மூலம் எழுப்புவது இயலாத ஒன்றாக இருந்து வந்தது.
ஆளும் மற்றும் எதிர்கட்சிகளை இணைக்கும் ஊடகங்கள்
ஆனால் மலையாள தொலைகாட்சி சேனல்கள் இந்த நிலையை மாற்றி, வாக்காளர்களும் கேள்வி கேட்கும் நிலையிலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கின. குறிப்பாக, அங்கு முக்கிய அணிகளான இடது சாரி அணியான எல்டிஎஃப், காங்கிரஸ் அணியான யுடிஎஃப் இவர்கள் இடையில் தான் முக்கிய போட்டி. இந்த இரு அணிகளின் பிரதிநிதிகளையும், கூடவே பிஜேபியின் பிரதிநிதி ஒருவர் என மூவரை அழைத்து, வாக்காளர் முன்னிலையில் ஒரு பொதுவான இடத்தில் விவாதங்களை நடத்தி அவற்றை ஒளிபரப்பத் துவங்கினர்.
இந்த முறையினால், தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகள் எத்தகைய புரிதல்களுடன் உள்ளன என்பதை நேரடியாகவே வாக்காளார்களால் அறிந்து கொள்ள முடிகிறது
ஆனால், இத்தகைய முறை, ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்களே கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்க வகை செய்கிறது. இதனை மாற்றி புதிய உத்தியை நடைமுறைபடுத்தியுள்ளனர் கேரள அரசியல்வாதிகள்.
லைவில் உம்மன்சாண்டி
கடந்த மார்ச் 21 அன்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவில் வந்தார். இரவு 9 மணியளவில் நேரலையாக வந்த அவரிடம், 7000 க்கும் அதிகமானோர் கேள்விகளை கமென்டாக பதிவு செய்தனர். முப்பது நிமிடம் நீடித்த அந்த நேரலையில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் காணத் துவங்கினர். தொடர்ந்து அவரது அந்த நிகழ்ச்சி சுமார் 5000 பேரால் ஷேர் செய்யப்பட்டது.
ஒரு முதலமைச்சர் என்ற நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக கேரள வளர்ச்சிக்கு தான் செய்துள்ளவற்றை பட்டியலிட்டார் உம்மன்சாண்டி. தொடர்ந்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வந்த வீடியோவை 1 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரி அணியின் நேரலை நிகழ்ச்சி
முதல்வர் உம்மன்சாண்டியின் நேரலையை தொடர்ந்து, இடதுசாரி அணியினரும் நேரலையில் சமூகவலைதத்தளவாசிகளை சந்திக்கத் துவங்கினர். மார்ச் 24 அன்று மதியம் 2.30 மணியளவில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பினராயி விஜயன் நேரலையில் வந்தார். தொகுப்பாளர் ஒருவர் உதவியுடன் எல்டிஎப் கேரளம் (LDF Keralam) என்ற பக்கத்தில் தோன்றிய அவர், இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்படும் என்பதை தெளிவாக எடுத்து கூறினார்.
இடையிடையே, வீடியோவின் கீழே, கமென்டாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில்களை கொடுக்கத் துவங்கினார்.
இதுபோன்றே, இடது ஜனநாயக முன்னணியின் மற்றொரு தலைவரான டாக்டர் தாமஸ் ஐசக்கும் நேரலையில் வரத் துவங்கினார். அதே மார்ச் 24 அன்று இரவு 9 மணியளவில் துவங்கிய தாமஸ் ஐசக்கின் நேரலை நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நீடித்தது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பொருளாதாரத்திற்கான முனைவர் பட்டம் பெற்ற இவர், ஏற்கனவே கடந்த இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர். ஒரு பொருளாதார வல்லுநர் என்ற முறையில் இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், நேரலை நேரத்தில் கேரளாவிற்கான பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் எப்படி இருக்கும் என அதிக கேள்விகள் எழுப்பப்பட்டன.
நேரலை முடிந்த பின் தனது ஃபேஸ்புக்கில் பதிவில்,
“ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இந்த நிகழ்ச்சி சென்றடைந்ததாக ஃபேஸ்புக் கணக்குகள் கூறுகின்றன. இது ஒரு முதல் முயற்சி என்பதால் இதனை குறித்து பல விவரங்கள் புதிதாக படிக்க உதவியது. இது போன்று இனியும் தொடர் நேரலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளேன். நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் 3 முதல் 4 நிமிடங்கள் வரை ஒதுக்கி பதில் தர திட்டமிட்டுள்ளேன். ஏப்ரல் 1 ஆம் தேதி மீண்டும் நேரலையில் வருகிறேன். “
என தாமஸ் ஐசக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதனை முயன்றால் என்ன?
கேரளாவை போன்ற அரசியல் சூழல்கள் தமிழகத்தில் இருப்பதில்லை. அதுபோன்றே பொதுமக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கங்களும் மிக குறைவாகவே தமிழகத்தில் உள்ளன. அதிக பட்சம், தங்களது ஃபேஸ்புக் பக்கங்களில் கருத்துக்களை பதிவிடுவது மட்டுமே, தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. பொதுமக்களையும், அரசியல் தலைவர்களையும் இணைக்கும் பாலமாக, ஃபேஸ்புக் இருக்கும் போது, இத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், தங்கள் கொள்கைகளையும், திட்டங்களையும் அரசியல் கட்சித் தலைவர்கள் லைவாக பொதுமக்களிடம் கொண்டு சென்றுவிட முடியும். இதனையும் தமிழகத்தில் முயன்று பார்க்கலாமே.!
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரை:
நெட்டிசன்களை வசப்படுத்தும் முனைப்பில் தமிழக கட்சிகளும் தலைவர்களும்!