இந்து- முஸ்லிம் இணைந்து கொண்டாடும் திருவிழாக்கள் - மத நல்லிணக்கத்துக்கு முன்னோடியாக விளங்கும் தமிழகம்!
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்றும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து பல்வேறு கோயில் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர் என்பது இன்னும் தாங்கள் சாதி, மதங்களைக் கடந்து அன்புடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகிறோம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்தியா போன்ற பல சாதி, சமய, பண்பாடு, கலாசாரம் நிறைந்த மக்கள் வாழும் நாடுகளில் சாதி, மத மோதல்களுக்கு பஞ்சமிருக்காது. இந்தியாவிலும் அதுபோன்ற ஏராளமான பிரச்னைகள் நடைபெற்றுள்ளன.
ஆனால், பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது நாங்கள் அனைவரும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள் என்பது போல ஒற்றுமையை வலியுறுத்தும் மத நல்லிணக்க விழாக்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்து-இஸ்லாமியர் சகோதரத்துவம்
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்றும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து பல்வேறு கோயில் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர் என்பது இவர்கள் தங்களின் சாதி, மதங்களைக் கடந்து அன்புடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகிறோம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதாக உள்ளது.
பொதுவாகவே வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கும், பள்ளிவாசலுக்கும் இந்துக்கள் செல்வதும், இந்துக்களின் கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு செய்வதும் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
தாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ’குண்டம் விழா’ நடைபெறுகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், மலைக் கிராமமான தாளவாடியில் ஊரின் நடுவில் மாரியம்மன் கோவிலும், இஸ்லாமியர்களின் தர்க்காவும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது.
மாரியம்மன் கோவிலின் குண்டம், தர்க்காவின் வாசல் பகுதியில் உள்ளது. தர்க்காவின் வலது பக்கத்தில் வேணுகோபால சுவாமி கோவிலும் உள்ளது. ரம்ஜான் தொழுகையின்போது இந்து மக்கள் அங்கு சென்று இஸ்லாமியர்களோடு கைகோர்த்து நிற்கின்றனர். மாரியம்மன் கோவில் குண்டம் விழாவின்போது இஸ்லாமியர்கள், இந்து மக்களோடு இணைந்து வந்து கொண்டாடுவதே இக்கோயிலின் சிறப்பாகும்.
இஸ்லாமியர் பங்கேற்கும் பங்குனி உத்திரம்
இதேபோல, நாமக்கல் அருகேயுள்ள ராசிபுரம் குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர விழாவில் இந்துக்களோடு இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு சந்தனம் பூசிக் கொள்ளும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கைத்தறி நெசவுத் தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலுக்குத் தேவையான அச்சு கட்டி கொடுக்கும் வேலையை இஸ்லாமியர்கள் செய்து வந்துள்ளனர்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் எனும் கொள்ளை நோயால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் புளிய மரத்தடியில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்காக ’பாத்தியா’ ஓதி பொட்டுக்கடலை மட்டும் நாட்டுச் சர்க்கரை அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நோய் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இன்று வரை பங்குனி உத்திரத்தன்று இஸ்லாமியர்கள் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் இருந்து வெள்ளைக் கொடி ஏந்தி, வாத்தியங்கள் முழங்க சென்று கடைகளின் சுவர்களில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
விழா தொடங்குவதற்கு முன்பு குருசாமிபாளையம் ஊர் மக்கள் தேங்காய் பழத் தட்டுடன் பள்ளிவாசலுக்குச் சென்று திருவிழாவுக்கு அழைப்பு விடுப்பார்கள். அதேபோல, திருவிழாவின்போது, இரு மத முக்கியஸ்தர்கள் ஓருவருக்கொருவர் மாலை போட்டு மரியாதை செய்யும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
அல்லாசாமி பூக்குழித் திருவிழா
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வஞ்சினிபட்டியில் 10 நாள் திருவிழாவாக அல்லாசாமி பூக்குழித் திருவிழா நடைபெற்று வருகிறது. சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இத்திருவிழாவில் ஊர் முழுவதும் எவ்வித பேதமுமின்றி இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி விருந்து வைத்து கொண்டாடுவர். விழாவில் பூக்குழி தினத்தன்று உள்ளூர் மக்கள் மட்டுமன்றி பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களும் மல்லிகைப் பூ, சர்க்கரை வைத்து அல்லாவிடம் பாந்தியா ஓதி, பின் சுவாமிக்கு பூக்குழி வளர்க்கப்படும்.
பூக்குழிக்கு பின் அங்குள்ள சாம்பலை பிரசாதமாக அள்ளி, இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் பூசி விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஓரே இடத்தில் இஸ்லாமியர்களின் தொழுகையும், சுவாமிக்கு பூஜையும், பூக்குழி திருவிழாவும் நடைபெறும் இந்நிகழ்ச்சி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறை சாற்றும் ஓர் முக்கிய விழாவாக பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் ஆடி 16-இல் மேத்தா பிள்ளை கந்தூரி விழா
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகேயுள்ள தெற்கு விஐயநாராயணத்தில் பெரும்பகுதியாக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் உள்ள மேத்த பிள்ளை அப்பா கந்தூரி திருவிழாவினை இப்பகுதி இந்து மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 16ஆம் தேதி நடத்துகின்றனர்.
இஸ்லாமியர்களே இல்லாத இந்த ஊரில் சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் நடத்தும் இந்த கந்தூரி விழாவுக்கு கேரளம் மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் வந்து பங்கேற்கின்றனர். இங்கு வரும் இஸ்லாமிய சகோதரர்களை இந்துக்கள் விருந்தினர்களாக வரவேற்று, விருந்தளித்து உபசரிக்கின்றனர். இன்றும் கூட இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மேத்தா, மேத்தா பாண்டியன் என பெயர் வைப்பது இந்து முஸ்லீம் நல்லிணக்கத்துக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.
திருவழுதீஸ்வரர் தேரோட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான திருவழுதீஸ்வரர் கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வில் இந்துக்களுடன் இணைந்து அப்பகுதி இஸ்லாமியர்களும் தேரிழுத்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இங்குள்ள இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் உறவு சொல்லி அழைக்கும் பழக்கம் பொதுவாக இப்பகுதியில் காலங்காலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுவாக இந்துக்களின் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஏதேனும் ஓர் வகையில் இஸ்லாமியர்கள் தங்களது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்துவது வழக்கம்.
இதையடுத்து, செப்டம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஏர்வாடி, திருவழுதீஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்றது. இதில், மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆயிரக்கணக்கானோர் ஆராவாரத்தோடு தேரிழுக்க, எவ்வித மத வேறுபாடுகள் இல்லாமல் இஸ்லாமிய சகோதரர்களும் இணைந்து தேரிழுக்க 40 ஆண்டுகளாக நின்றிருந்த தேர், ஆடி அசைந்து ரத வீதிகளில் வலம் வந்தது.
பொதுவாகவே தென்மாவட்ட கோயில்களில் தேரோட்டத்தின் போது தேரின் வடத்தை முதலில் தொட்டு இழுப்பது இஸ்லாமியர்கள் என்று கூறப்பட்டு வந்தது இந்நிகழ்வின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் எங்கும் ஆங்காங்கே நடைபெறும் இதுபோன்ற இந்து முஸ்லீம் மத நல்லிணக்க விழாக்கள் நமது சகோதரத்துவத்தை மெய்ப்பித்து, மதங்களால் வேறுபட்டாலும் மனதளவில் மனிதத்தில் நாம் அனைவரும் ஒன்றே என்பதை நீருபித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகுக்கே நமது மத நல்லிணக்கத்தை குன்றின் மேலிட்ட விளக்காக காட்டி, தமிழகம் முன்னோடியாக விளக்குகிறது என்றால் மிகையல்ல.