GST: 66 பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைத்துள்ள மத்திய அரசு!
சரக்கு மற்றும் சேவை வரி திட்டமிட்டபடி ஜூலை 1, 2017 அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடைசி வணிகரையும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்சிகளை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் நடத்தும். ஜி.எஸ்.டி-யின் கட்டமைவு குறித்து விரைவில் வெளியிடப்படும். மீதமுள்ள வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி முனையம் முறை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2017 சரக்கு மற்றும் சேவை வரியை சுமுகமாக அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜிஎஸ்டி-ன் வரி விகிதத்தை எதிர்த்து குரலெழுப்பி வந்த தொழில் துறைகளில், இன்சுலின், நறுமணப்பொருட்கள், பள்ளிப் பைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றுக்கான வரிவிகிதம் பயனாளிகளின் நலனுக்காக சற்று குறைக்கப்பட்டது.
மத்திய அரசிடம் மறுபரிசீலனைக்கு வந்த 133 பொருட்களில் சுமார் 66 பொருட்களுக்கான வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில பொருட்களுக்கான வரிவிகிதம் பற்றி வரும் ஞாயிறு நடைப்பெறும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் குழுவில் விவாதிக்கப்படுகிறது.
நறுமணப் பொருட்கள் துறை மற்றும் டயாபெடிக்ஸ், பள்ளிப் பைகள், நோட்டு புத்தகங்கள், ஓவிய புத்தகங்கள் ஆகியவற்றின் விரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
* கட்லெரி என்றழைக்கப்படும் வெட்டுக்கருவிகளின் வரி விகிதம் 18 இல் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* ப்ரிண்டெர் 28-ல் இருந்து 18 % ஆக குறைந்துள்ளது.
* ட்ராக்டர் கூறுகள், முன்னாள் நிர்ணயிக்கப்பட்ட 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை அடுத்து இது செய்யப்பட்டது.
ஊறுகாய், முந்திரி மற்றும் 100 ரூபாய் குறைவான சினிமா டிக்கெட் வரிகளும் குறைக்கப்பட்டது. வரிவிகிதம் குறைக்கப்பட்ட பட்டியலை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறினார். ஏற்கனவே உள்ள வரிவிகிதத்தில் சம நிலையை உறுதிபடுத்தவும், மாறுபடும் பொருளாதார சூழல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இந்த வரிவிகித குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அகில இந்திய அகர்பத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் (AIAMA) ஜிஎஸ்டி குறித்து விமர்சித்தது. தினமும் பூஜைக்கு பயன்படுத்தும் பொருளான ஊதுவத்தியை 0% - 12% வரம்பிற்குள் இருந்து 5% வரம்புக்குள் கொண்டுவந்தால் மகிழ்ச்சி என்றும், ஏற்கனவே மாநில அளவில் இதற்கு விற்பனை வரி போடப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தனர். (AIAMA) துணை தலைவர் அர்ஜுன் ரங்கா கூறுகையில்,
“எங்கள் கோரிக்கையை ஏற்று வரியை குறைத்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி. எங்களுடனான சந்திப்பில் எங்கள் துறை பற்றி ஆழமாக விவாதித்து, அதன் காரணங்களை புரிந்து கொண்ட பின் வரிவிகிதத்தை குறைத்தனர். நாங்கள் மத்திய, மாநில அரசு மற்றும் அமைச்சர்களிடம் எங்களின் கோரிக்கையை வைத்திருந்தோம், எங்கள் துறையை அவர்கள் முக்கியமாக கருதியதற்கு மகிழ்ச்சி” என்றார்.
* முந்திரி மீதான வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் ஊறுகாய், சட்னி, கெட்செப் மற்றும் உடனடி உணவு மிக்சுகள் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* இதைத்தவிர பள்ளிப் பைகள்; 28-ல் இருந்து18%, நோட்டு புத்தகங்கள்; 18-ல் இருந்து12%, ஓவிய புத்தகங்கள் 12-ல் இருந்து 0 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* கேளிக்கை வரிகளான சினிமா டிக்கெட்டுகள் இரண்டு பிரிவுகளாக ஜிஎஸ்டி கணக்கில் எடுத்துக்கொள்ளும். 100 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட்டிற்கு 18%, மற்ற டிக்கெட்டுகளுக்கு 28% ஆக வரிவிகிதம் இருக்கும்.
* வைரம், லெதர், துணிமணிகள், நகைகள் மற்றும் ப்ரிண்டிங், வீட்டில் இருந்து செய்யப்படும் வேலைகளுக்கு வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுதும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப் படுகிறது. பூஜ்யம் வரி என்ற சில பொருட்கள் தவிர மற்ற அனைத்தும் நான்கு வரி விகித அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது. அது: 5,12,18 மற்றும் 28 சதவீதமாகும்.
24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் (State Goods and Services Tax (SGST) Act) நிறைவேற்றப்பட்டு வரும் ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வரும். ஒருசில மாநிலங்கள் இதை இன்னமும் சட்டமாக நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், ஹை ஸ்பீட் டீசல் மற்றும் விமான எரிப்பொருள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கான வரிகள் மட்டும் மாநில அளவில் நிர்ணயிக்கப்படும்.