ஆன்லைனில் தொழில் தொடங்க 10 சிறந்த யோசனைகள்!
இன்றைய இணைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்தி ஆன்லைனில் தொழில் தொடங்கும் யோசனைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தொழில் தொடங்க விரும்புவோர்களுக்கு இணையத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே ஆஃப்லைனில் விற்பனை செய்து வரும் நிறுவனங்கள்கூட இணையம் வாயிலாக செயல்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகின்றன.
இணையம் இருந்தால் போதும். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெறமுடியும். இதனால் வணிகம் தொடங்க இது சிறந்த டூலாக விளங்குகிறது. ஆன்லைனில் வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.
உங்களுக்கு உதவக்கூடிய 10 சிறந்த ஆன்லைன் தொழில்முனைவு யோசனைகள் இங்கே:
சாட்பாட் (Chatbot)
கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தக உலகில் 'சாட்பாட்' சிறப்பு கவனம் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் சாட் செய்வது நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றே. எனவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட்பாட் வணிகத்தில் நீங்கள் செயல்பட்டால் சிறப்பிக்கலாம்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க விரும்பும் வணிகங்கள் உங்களுடன் இணைந்து கொள்வார்கள். நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரித்து சிறப்பாக சந்தைப்படுத்த சாட்பாட் அறிமுகப்படுத்துவது சந்தையில் புதிய போக்காக மாறி வருகிறது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் புதுமையை புகுத்தினால் வளர்ச்சியடையலாம்.
மொழி பயிற்றுவிப்பாளர்
புதிய மொழியைக் கற்பதில் பலருக்கு ஆர்வம் இருக்கும். இதற்கு பயிற்றுவிப்பாளரின் உதவியைப் பெறுவதே சிறந்தது. எனவே நீங்கள் பல மொழிகளில் வல்லுநராக இருந்தால் ஆன்லைன் வகுப்பு தொடங்கலாம். இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். வகுப்புகளுக்கு முறையாகத் திட்டமிட்டு ஒரு மணி நேரத்திற்கான கட்டணத்தை நிர்ணயித்து ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கலாம்.
எஸ்இஓ எனப்படும் சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் (SEO)
இது டிஜிட்டல் யுகம். இணையத்தில் தேடும்போது தேடுபொறியில் முன்னணி பட்டியலில் வரிசைப்படுத்தப்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். எனவே நீங்க எஸ்இஓ நிபுணராக இருப்பின் உடனே களமிறங்குங்கள். இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் இந்த வாய்ப்பு நிச்சயம் வருவாய் ஈட்ட உகந்ததாக இருக்கும்.
வணிகங்களுக்கு நீங்கள் எஸ்இஓ சேவை வழங்கலாம். உள்ளடக்கம் உருவாக்குவதும் லிங்க் உருவாக்குவது, ஆன் பேஜ் ஆப்டிமைசேஷன், ஆஃப் பேஜ் ஆப்டிமைசேஷன் போன்ற சேவைகளுக்கு வெவ்வேறு பேக்கேஜ் உருவாக்கி சேவை வழங்கத் தொடங்கலாம்.
வீடியோ உருவாக்கலாம்
டிஜிட்டல்மயமாக செயல்படும் இன்றைய உலகில் வணிகங்கள் தாங்கள் இலக்காகக் கொண்டு செயல்படும் வாடிக்கையாளர்களுடன் ஏதோ ஒரு வகையில் சிறப்பாக இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இதற்கு வீடியோ மார்க்கெட்டிங் சிறந்தது. யூட்யூப் உலகின் மூன்றாவது மிகப்பெரிய சமூக தளமாக விளங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க வீடியோ சிறந்த வழி என்பது தெளிவாகிறது. வீடியோ எடிட்டிங் மென்பொருள் மற்றும் டூல் பற்றிய நிபுணத்துவம் உங்களிடம் இருந்தால் ஃப்ரீலான்ஸ் முறையில் பணிபுரியலாம். அல்லது ஆன்லைன் டிஐஒய் பயிற்சியளிக்கலாம்.
மொபைல் செயலி உருவாக்கலாம் (App developer)
நீங்கள் கோடிங் செய்வதில் தேர்ந்தவரா? இதில் அற்புதமான திறன் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த வாய்ப்பு உங்களுக்கானது. நீங்கள் மொபைல் செயலி உருவாக்கும் நிறுவனம் தொடங்கலாம். தயாரிப்பு அல்லது சேவை வழங்கும் எந்த ஒரு வணிகமும் இன்று ஆப் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
எத்தனையோ நிறுவனங்கள் தங்கள் விற்பனையை ஊக்குவிக்க மொபைல் ஆப் உருவாக்குவதில் அதிக முதலீடு செய்து வருகின்றன. இதனால் மொபைல் செயலி உருவாக்குபவர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மெய்நிகர் உதவியாளர் (virtual reality)
இது மிகவும் சுவாரஸ்யமான ஆன்லைன் வணிகமாகும். தொலைதூரத்தில் இருந்து வாடிக்கையாளர் சேவை வழங்கும் ஏஜெண்ட் போன்று வீட்டிலிருந்தே நீங்கள் செயல்படலாம். டேட்டா எண்ட்ரி பணிகள், ஆய்வுப் பணி உள்ளிட்டவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.
தொழில் தொடங்க விரும்புவோரைப் பொறுத்தவரை சிறு தொழிலாக இருப்பினும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு முழுநேர ஊழியர்களை நியமிக்க பலர் விரும்புவதில்லை. எனவே மெய்நிகர் உதவியாளர் நிறுவனம் சார்பாக வாடிக்கையாளர்களுடன் தொலைபேசியிலும் ஸ்கைப்பிலும் இணைந்திருந்து பணியாற்றலாம்.
சாத்தியக்கூறுகள் நிறைந்த வணிக வாய்ப்புகள் உருவாக்கும் சேவை (Lead Generation Service)
ஒவ்வொரு வணிகமும் இன்று விற்பனையை அதிகரிப்பதற்கான அத்தனை வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது. எனவே வணிக வாய்ப்புகளை உருவாக்கும் சேவைக்கு சந்தையில் தேவை உள்ளது. இதில் முதலீடு செய்ய பல வணிகங்கள் தயாராக உள்ளனர். இது சற்றே கடினமான பணி. அதிக நேரம் செலவிட்டு பணியாற்றவேண்டிய அவசியம் இருக்கும்.
இருப்பினும் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். நீங்கள் மார்க்கெட்டிங் மற்றும் சந்தை ஆய்வில் சிறந்தவராக இருந்தால் இந்த வணிக யோசனையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தங்குமிடங்களை வாடகைக்கு விடும் சேவை (Vacation rental)
பலர் அபார்ட்மெண்ட் போன்ற இடங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றனர். இது ஹோட்டலுக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. இந்த சேவைக்கான தேவை என்றும் அழியாத ஒன்று. இந்தப் பகுதியில் கடினமாக உழைத்து நேரம் செலவிட்டால் நல்ல லாபம் ஈட்டலாம். மொத்த வாடகை தொகையில் 40 சதவீதம் வரை லாபம் ஈட்டமுடியும். ஆன்லைனில் தொடர்ந்து இணைந்திருந்து விளம்பரப்படுத்தும் திறனை வெளிப்படுத்தினால் வெற்றி காணலாம்.
கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யலாம்
பேக்கிங், ஜுவல்லரி தயாரிப்பு போன்றவற்றில் சிறந்தவராக இருப்பின் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் திறனை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காணலாம். ஒவ்வொரு வணிகமும் கைகளால் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்குமான சந்தைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆன்லைனில் உங்களது திறனை வெளிப்படுத்தி வருவாய் ஈட்டலாம்.
பொருட்களை நேரடியாக தயாரிப்பாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் சேவை (Drop-Shipping)
இன்றைய மின்வணிக உலகில் இந்தச் சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இதில் எந்த பொருளையும் வாங்கி சேமிக்கவேண்டிய அவசியமில்லை. எனவே எளிய முறையில் மின் வணிக தொழிலைத் தொடங்கலாம். இந்த முறையில் விற்பனையாளர் பொருட்களை சேமித்து வைக்கவேண்டிய அவசியமில்லை.
வாடிக்கையாளரின் ஆர்டரை மொத்த விற்பனையாளரிடம் மாற்றிவிட வேண்டும். மொத்த விற்பனையாளர் வாடிக்கையாளர்களிடம் பொருட்களைக் கொண்டு சேர்ப்பார். இன்றைய காலகட்டத்திற்கு உகந்த வணிகம் இது.
நிறைவுக் கருத்து
தொழில்நுட்ப வளர்ச்சியானது எத்தனையோ ஆன்லைன் வணிகங்களை லாபகரமாக நடத்த வழிவகுத்துள்ளது. இந்த வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் செயல்பட்டு அதிக லாபம் ஈட்டக்கூடிய வணிகங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். இவற்றில் உங்களுக்கு ஏற்ற தொழிலைத் தேர்வு செய்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: அன்ஷுல் சர்மா | தமிழில்: ஸ்ரீவித்யா