'இவர்தான் பாலா'- அரசியல்வாதிகளை வம்புக்கு இழுக்கும் கார்ட்டூனிஸ்ட்!
பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா நேர்காணல்
தமிழகத்தின் இன்று பிரபலமான கார்ட்டூனிஸ்ட்டுகளில், பாலா முக்கியமானவர். 22 வயதிலேயே முழு நேர கார்ட்டூனிஸ்டாக மாறியவர். தனது சிறுவயது தொடங்கி, வரவிருக்கும் அடுத்த புத்தகம் வரை மனம் திறக்கிறார். தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ..
நாம்: உங்களின் சிறுவயது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
பாலா: தமிழகம்தான் பூர்வீகம் என்றாலும் மூன்று தலைமுறைகளாக மும்பையில் வசித்த குடும்பம் என்னுடையது. அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. நான் பிறந்து வளர்ந்தது மும்பைதான். இடையில் சில காலம் மட்டும் தாத்தா பாட்டியுடன் இங்கு கிராமத்தில் இருந்து படித்தேன். அப்பாவுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. அதனால் குமுதம், ராணி, தேவி, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், டால்ஸ்டாய் நாவல் என வீடு எப்போதும் புத்தகங்களால் நிறைந்திருக்கும். அதனால் இயல்பிலேயே எங்கள் வீட்டில் எல்லோருக்கும் புத்தகம் படிக்கிற ஆர்வம் வந்து விட்டிருந்தது.
சிறுவயதிலேயே அம்மா எனக்கு ராணி காமிக்ஸ் கதைகள் படித்துக் காட்டுவார்கள். அதன் பிறகு சாப்பிடும் போதும் கையில் புத்தகம் இருந்தே ஆகவேண்டும் என்ற அளவுக்கு தீவிரமானது. இதற்காக பல முறை வீட்டில் `ரவுண்ட்' கட்டியிருக்கிறார்கள். ஆனால் இன்னும் அந்த பழக்கம் மட்டும் நின்ற பாடில்லை. கதை புத்தகங்கள் படிப்பதில் இருந்த ஆர்வம் பாடப்புத்தகங்களில் கொஞ்சம் கூட வர வில்லை. அதனால் பள்ளியில் 'மாப்பிள்ளை பெஞ்ச்'க்கு சொந்தக்காரர்களான `மக்கு ஸ்டூடண்ட்'டாகவேதான் இருந்தேன்.
அம்மா வாங்கிக் கொடுத்த ராணி காமிக்ஸ், அம்புலிமாமா, பூந்தளிர், புத்தகங்கள் எனக்கு நல்ல நண்பர்களாக இருந்தன. அதிலும் ராணி காமிக்ஸில் வரும் மாயாவின் டெவில் எனும் நாய் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் சாகசத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் நிறைய நாய்கள் வளர்த்திருக்கிறேன். அதாவது மாயாவி போல் சாகசம் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதனால்தான் கார்ட்டூனிஸ்ட் ஆகியிருக்கேன்போல.
நாம்: எப்போது முழு நேர கார்ட்டூனிஸ்டாவது என்று முடிவு செய்தீர்கள்?
பாலா: நான் அரசியல் கார்ட்டூனிஸ்ட் ஆனது 22வது வயதில்தான். ஆனால் அதற்கான விதை சிறுவயதில் போடப்பட்டது. அந்த விதையை விதைத்தவர் என் தாத்தா பொன்னையா. நான் கார்ட்டூனிஸ்ட் ஆனதில் காமிக்ஸ்களுக்கும் என் தாத்தாவுக்கும் முக்கியப்பங்குண்டு. அவர் ஒரு சூப்பரான கேரக்டர்.
தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய மருத்துவம் பார்த்த குடும்பம் எங்களுடையது. தாத்தாவும் வைத்தியர்தான். அவரிடம் சிகிச்சைப் பெற வெளியூரிலிருந்து ஆட்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். நாங்கள் இருவரும் வயல்வெளிகளுக்கு செல்லும்போது மருத்துவ மூலிகைகளைப் பற்றி எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
”நாம எங்கேயும் எப்போவும் 'அலக்’கா இருக்கணும்டா” என்று அவர் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார். அந்த 'அலக்’ என்பது ஒரு இந்தி வார்த்தை. தனித்துவம் என்பது அதன் அர்த்தம். மத்த பசங்கக்கூட சேர்ந்து ஓணான் பிடிக்கிறது.. தெருவுல சுத்துறதுனு திரியும்போது அவர் அதைச்சொல்வார். அதாவது மத்த பசங்க மாதிரி இருக்கக்கூடாது. நமக்குனு ஒரு தனித்தன்மை வேண்டும் என்பதுதான் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம். அந்த அலக் என்ற வார்த்தைதான் தனித்துவமான கார்ட்டூனிஸ்ட் பணிக்கு என்னை வரவழைத்திருக்கிறது.
நாம்: சிறுவயதிலேயே இதுதான் பாதை என்று முடிவு செய்துவிட்டீர்களா?
பாலா: அப்படியும் சொல்லுவதற்கில்லை. சிறுவயதில் வீட்டின் சுவர்களையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருப்பேன். ஆனால் ஒருமுறை கூட அவர் என்னை கண்டித்ததில்லை. காமிக்ஸ் புத்தகங்களில் இருக்கும் ஓவியங்கள் மீது தலையில் படிந்திருக்கும் எண்ணெயில் தேய்த்த காகிதத்தால் அச்சு எடுப்பதுதான் சிறுவயதில் என் ஓவிய ஆர்வம். அதை பெரிய ஓவியத்திறமை என நான் ஃபிலிம் காட்டிக் கொண்டிருப்பேன். ஒருமுறை அப்படி அச்சு எடுத்துக் கொண்டிருந்ததை என் தாத்தா பார்த்துவிட்டார்.
உடனே கூப்பிட்டு, இதுதப்பு. இப்படி வரையுறதுல என்ன பெரிய திறமை இருக்கு. சொந்தமா யோசிச்சு கற்பனை செஞ்சு வரையணும்டா... என்றவர், ஒரு நரியும் சிங்கமும் பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி வரைஞ்சு காட்டு பார்ப்போம்” என்று எனக்கு ஒரு வேலையும் கொடுத்தார்.
அதுதான் இன்று நான் கார்ட்டூனிஸ்ட் ஆனதற்கான முக்கியமான விதை. ஒரு சிங்கத்தையும் நரியையும் வரைஞ்சு காட்டு என்று அவர் சொல்லியிருந்தால் நான் ஓவியன் ஆகியிருப்பேன். ஆனால் சிங்கமும் நரியும் பேசிக்கொண்டிருப்பதாக அவர் வரைய சொன்னது ஒரு அதீத கற்பனை. ஒரு சிங்கமும் நரியும் பேசிக் கொள்வது என்பது ஒரு கார்ட்டூன் தன்மை கொண்டசெயல். அதை அவர் சொன்னார். உடனே நானும் ஒரு காகிதத்தில் கிறுக்கிக் கொண்டுப்போய் காட்டினேன். அது ஒரு சுமரான கிறுக்கல். ஆனால் அவர் அதை அருமை என்றார். இப்படிதான் சொந்தமா யோசிச்சு வரையணும் என்று உற்சாகப்படுத்தினார். ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கு அதுதான் மிக முக்கியம். சுயமாக யோசித்து வரைவது.
பின்னர் மும்பைக்கு சென்று சார்ட்டர்ட் அக்கவுண்டனிடம் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போதான் அங்கே வந்துகொண்டிருந்த மும்பை தமிழ் டைம்ஸ் என்ற நாளிதழ் அறிமுகமானது. அதில் கதை கவிதை என்று ஆர்வக்கோளாறில் எழுதி கொண்டிருப்பேன். அதைப்பார்த்து பாலபாரதி, மதியழகன் சுப்பையா போன்ற நண்பர்கள் அறிமுகமானார்கள்.
அந்த நண்பர்களுடனான முதல் சந்திப்பின்போது நான் வரைந்த ஓவியங்களைக் கொண்டு சென்றிருந்தேன். அதை பார்த்தவுடன், 'உனக்கு ஓவியமே வரையத்தெரியல..” என்று பாலபாரதி சொன்னார்.
என்ன இப்படி பொசுக்குனு சொல்லிட்டாரே என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவர் மீண்டும் சொன்னார். ”உன்னுடையது ஓவிய கோடுகள் அல்ல. அது கார்ட்டூனிஸ்ட்டுக்கான கோடுகள். இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட்டுகள் ரொம்ப குறைவு. நீ முயற்சி செஞ்சா கார்ட்டூனிஸ்ட் ஆகிடலாம்..”என்று சொல்லி, நான் அரசியல் கார்ட்டூனிஸ்ட் ஆவதற்கான ஆர்வத்தை உண்டுபண்ணினார்.
அதோடு அரசியல் கார்ட்டூன்கள் வரைவதற்கான அடிப்படை தகுதிகள் என்னென்ன என்பதைப் பற்றி விளக்கிச்சொன்னவர், எனக்கு கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களின் கார்ட்டூன் புத்தகத்தின் நகல் ஒன்றை புரட்டிப்பார்க்க சொல்லி கொடுத்தார்.
அவரை சந்தித்துவிட்டு வந்த அன்றைய தினமே நான் கார்ட்டூனிஸ்ட் ஆவது என்று ஓவர் நைட்டில் முடிவு செய்தேன். அதன்பிறகு எந்நேரமும் செய்தி சேனல்களை பார்க்கவும் அரசியல் கட்டுரைகளை படிக்கவும் அரசியலை உற்று கவனிக்கவும் ஆரம்பித்தேன்.
விளைவு, வாசகர் கடிதம் எழுதிய அதே மும்பை தமிழ் டைமிஸில் 21வது வயதில் சப்-எடிட்டராக, ரிப்போர்ட்டராக, கார்ட்டூனிஸ்ட்டாக பல பரிமாணம் எடுத்தேன். அதன் ஆசிரியர் ராபர்ட் , உதவி ஆசிரியர்கள் இளங்கோ, முகிலன், ஐயம்பெருமாள், வரதராஜன், ஜெகன் ஆகியோர் அங்கு நல்ல பயிற்சியைக் கொடுத்தார்கள்.
நாம்: குமுதத்திற்கு எப்படி வந்தீர்கள்?
பாலா: அது சுவாரஸ்யமான கதை. 2005 ஆம் ஆண்டுவாக்கில், சும்மா சென்னையை சுற்றிப்பார்க்க வந்தேன். அப்படியே குமுதம் அலுவலகத்திற்கு போய்விட்டு வரலாம் என்று சென்றேன். ஆனால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. கையில் கார்ட்டூன் ஃபைல்கள் இருப்பதை பார்த்துவிட்டு வேலை தேடி வந்திருக்கிறேன் என்று நினைத்துவிட்டார்கள்போல... 'உங்க பயோடேட்டா கொடுத்துட்டு போங்க.. தேவைனா கூப்பிடுவாங்க..” என்று சொன்னார் ஒருவர். சரி இருக்கட்டும் என்று உடனடியாக ஒரு பயோடேட்டா தயார் செய்து கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
மறுநாள் குமுதம் ஆசிரியர்களுள் ஒருவரான கிருஷ்ணா டாவின்ஸி போன் செய்து அலுவலகம் வரச் சொன்னார். முதல் நாள் திறக்க மறுத்த குமுதம் கதவு மறுநாள் கிருஷ்ணா டாவின்ஸி பெயரை சொன்னதும் திறந்தது. ப்ரியா கல்யாண ராமன், ரஞ்சன், பெ.கருணாகரன் என நான் சந்திக்க விரும்பிய பல நண்பர்கள் அன்று அறிமுகமானார்கள்.
அன்றிலிருந்து குமுதத்தில் கார்ட்டூனிஸ்ட்டாக அரசியல்வாதிகளை வம்புக்கு இழுக்கும் பணி தொடர்கிறது.
நாம்: உலக அளவிலும், இந்திய அளவிலும் யாரெல்லாம் உங்களைக் கவர்ந்த கார்ட்டூனிஸ்டுகள் ?
பாலா: உலக அளவில் Naji al ali பிடித்தமான கார்ட்டூனிஸ்ட். அப்புறம் David low, Daryl cagle, Sergio Aragones, Don martin, Walt Disney உட்பட பலர் இருக்கிறார்கள். இந்தியாவில் சங்கர், ஆர்.கே.லக்ஷ்மன், உதயன், மதன், மதி, சுரேந்திரா, கேசவ் பிடித்தமானவர்கள். தமிழகத்தைப் பொறுத்தளவில் மறைந்த உதயன் அவர்களை கார்ட்டூன் போராளி என்பேன். சமரசமற்ற கோடுகள் அவருடையது.
அப்புறம், அரசியல்வாதியாக மாறிய பால்தாக்ரே, ராஜ்தாக்ரே போன்றோரும் நல்ல கார்ட்டூனிஸ்ட்டுகள். கார்ட்டூனிஸ்ட்டாக அவர்களை பிடிக்கும்.
நாம்: ஊரில் இருக்கும் எல்லோரையும் கார்ட்டூன் படம் போடும் நீங்கள், உங்க மனைவியை கார்ட்டூன் வரைஞ்சு இருக்கீங்களா? அதற்கு அவங்க ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு?
பாலா: ஆஹா.. பிரமாதமான அனுபவம் அது. ஆயிரம் பேரை போட்டுத்தள்ளினால்தான் அரை வைத்தியனாக முடியும் என்று சொல்வது போல், குடும்ப உறுப்பினர்களை எல்லாம் கார்ட்டூனாக்கி காலி செய்வதுதான் ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் முதல் பயிற்சியாக இருக்க முடியும்.
பொதுவாக பெண்களுக்கு ஓவியம் வரைந்தால்தான் பிடிக்கும். ஆனால் கார்ட்டூனிஸ்ட்டின் மனைவி என்பதால் என்னவோ அவருக்கு, நான் அவரை கார்ட்டூனாக வரைந்து கொடுத்தது பிடித்திருந்தது. அவர் பிடிச்சிருந்தது என்று சொல்லும் வரை.. ஒரே திக் திக் தான். இருக்காதா பின்னே, திருமணத்திற்கு முன்பே அவரை கார்ட்டூனாக வரைந்து கொடுத்திருந்தேன்.
நாம்: ஒரு கார்ட்டூனிஸ்டாக இன்றைய அரசியல் தலைவர்களில் எளிமையாக வரையக்கூடிய உருவம் யாருடையது? கடினமானது யாருடையது?
பாலா: பொதுவாக கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு அடையாளம் கொண்ட முகங்களை மிகவும் பிடிக்கும். ஏனெனில் கார்ட்டூன் என்பது உருவங்களை மிகப்படுத்தியோ, குறைத்தோ வரையக்கூடியது. அப்படி வரைவதற்கு ஒரு முகத்தில் அடையாளம் மிகமுக்கியம். பெரும்பாலும் பெண்கள் முகத்தில் அடையாளமில்லாமல் மொழு மொழுவென்று இருப்பார்கள். அவர்களை வரைய சிரமமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து வரைய வரைய ஒருநாள் அவர்களது முகமும் வசப்பட்டுவிடும்.
அந்த வகையில் இப்போதும் எப்போதும் கருணாநிதியின் முகம்தான் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு மிகவும் பிடித்தமானது. அப்புறம் ஜெயலலிதா, மன்மோகன், லாலு, அத்வானி ஓபாமா, புஷ், மோடி என பலரது முகங்கள் கார்ட்டூன் தன்மையானதுதான்.
சமீபமாக ஸ்டாலினும் விஜயகாந்தும் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு பிடித்தமானவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு பிடித்துவிட்டால் அடிக்கடி அவர்களை கார்ட்டூன் போடுவார்கள். கார்ட்டூனில் அடிக்கடி வரும் அரசியல்வாதிகளே பிரபலமாவார்கள்.
நாம்: நகைச்சுவை கார்ட்டூன்-அரசியல் கார்ட்டூன் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு?
பாலா: நகைச்சுவை துணுக்குகளுக்கு படம் வரைய மிகைப்படுத்திய கற்பனைகளுடன் வரையத்தெரிந்தால் போதுமானது. ஆனால் அரசியல் கார்ட்டூன் வரைய நாட்டு நடப்பும் சமூக அரசியலும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு படிக்க வேண்டும். படத்தைவிட கருத்தே அதில் முதன்மையானது.
நாம்: தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் இருக்கும் அளவுக்கு கார்ட்டூனிஸ்ட்கள் எண்ணிகை குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன?
பாலா: இந்தியாவில் பிற எந்த மாநிலத்தைக்காட்டிலும் முற்போக்கு பார்வை கொண்ட மண் என்று போற்றப்படும் தமிழகத்தில் கார்ட்டூனிஸ்ட்டுகளின் நிலை மோசமாக இருக்கிறது. இதற்கு கார்ட்டூனிஸ்ட்டுகள் காரணமல்ல. நான்காவது தூண்கள் பெரும்பாலானவை தங்கள் வழித்தடத்திலிருந்து விலகி பயணிக்க ஆரம்பித்துவிட்டதே இதற்கு முக்கிய காரணம்.
இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் பல ஊடகங்கள் ஏதாவதொரு கட்சி சார்ந்தவர்களால் நடத்தப்படுவது நம் எல்லோருக்கும் தெரியும்.
இதுபோன்ற சூழ்நிலையில் அதிகாரத்தை கோடுகளால் கேள்வி கேட்கக்கூடிய ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கு எப்படி அந்த ஊடகங்களில் வேலை கிடைக்கும். இப்படியான சிக்கலில்தான் தமிழகத்தில் அரசியல் கார்ட்டூன்களுக்கு பதிலாக ஜோக்குகளை வெளியிட்டு கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அதோடு ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பவன் அந்த கட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் அவன் மட்டுமே சொந்தக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் இன்று ஆசிரியர் குழுவினர் ஐடியா கொடுத்து ஓவியர்களை வரையச் சொல்கிறார்கள். இதுபோன்ற சிக்கல்களால் தமிழகத்தில் தனித்துவமான கார்ட்டூனிஸ்ட்டுகள் உருவாகாமல் போய்விட்டார்கள்.
ஆனால் ஒரு கார்ட்டூனிஸ்ட்டை உருவாக்குவது ஒன்றும் பிரச்னையில்லை. ஒரு மாதத்தில் உருவாக்கிவிடலாம். ஆனால் அந்த கார்ட்டூனிஸ்ட் புகுந்து விளையாட களம்..? அதுதான் இங்கு பெரும் காமெடியாக இருக்கிறது.
நாம்: உங்களின் கட்டுரைத்தொகுப்பு ஒன்று வரப்போவதாக அறிந்தோமே! அதைப்பற்றி?
பாலா: எனக்கு கார்ட்டூன் வரைய எந்தளவுக்கு பிடிக்குமோ அந்தளவுக்கு எழுதவும் பிடிக்கும். வெறுமனே கார்ட்டூனிஸ்ட்டாக மட்டும் இருப்பது எனக்குப் பிடிக்காது. ரிப்போர்ட்டிங் செய்ய வேண்டுமானால் உடனே கிளம்புவேன். ஒரு கட்டுரையை எடிட் செய்ய வேண்டுமா அதையும் செய்வேன். எல்லாம் மும்பை தமிழ் டைம்ஸில் கற்றுக்கொண்ட பாடம்.
அந்த அடிப்படையில் பிறர் பேசத் தயங்கும் சமூகப்பிரச்னைகள், நான் சந்தித்த நேசித்த எளிய மனிதர்களுடனான அனுபவங்கள் என ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருந்தேன். நான் பிரபல எழுத்தாளன் இல்லை. ஆனால் பரவலான வாசக நண்பர்களை பெற்றுக்கொடுத்தது என்னுடைய அச்சு பிச்சு எழுத்துகள். கார்ட்டூன்களுக்காக என்னை பின் தொடரும் நண்பர்களைப்போல் என் பதிவுகளுக்காக மட்டும் என்னை பின் தொடரும் நண்பர்கள் பலருண்டு. அப்படி பரவலாக பலராலும் பாராட்டப்பட்ட கட்டுரைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டவைகள் 'நமக்கு எதுக்கு வம்பு’ என்ற தலைப்பில் 'யாவரும் டாட் காம்’ பதிப்பகத்தின் வெளியீடாக வரவிருக்கிறது. அதற்கு முன்பாக குமுதம் வெளியீடாக என்னுடைய கார்ட்டூன் தொகுப்புகள் இரண்டு வெளிவந்திருக்கின்றன.
நாம்: உங்களைப் பொருத்தமட்டில் கார்ட்டூன் வரைவது? எழுதுவது எதை சவாலானது என்பீர்கள்?
பாலா: சவாலானது என்றால் கார்ட்டூன் வரைவதுதான் என்பேன். ஏனெனில் குறைவான கோடுகளில் நீங்கள் வாசகனுக்கு ஒரு செய்தியையும் விமர்சனத்தையும் கடத்தியாக வேண்டும்.
ஆனால் உணர்வுகளை கடத்துவது என்றால் அது எழுத்துதான். கார்ட்டூனை பார்த்த நொடியில் சொல்லவரும் செய்தி புரிந்துவிடும். ஆனால் எழுத்து கடத்தும் உணர்வுகள் அலாதியானது.. அது காலத்திற்கும் மனதில் தங்கிவிடும்.
நாம்: வளரும் மாணவர்கள் கார்ட்டூனிஸ்டாகவேண்டும் என்று விரும்பினால்.. என்ன மாதிரியான பயிற்சிகள் பெறவேண்டும்?
பாலா: தொடர் பயிற்சி. தினமும் இவ்வளவு நேரம் என்று கோடுகளுடன் செலவளிக்கவேண்டும். அப்புறம், கண்டதையும் கற்றவன் பண்டிதன் என்பதுபோல் கண்டதையும் கிறுக்கினால்கூட போதும். ஓரளவுக்கு கோடுகள் கைகளுக்குள் வசப்படுவதுபோல் தோன்றும்போது, நமக்கென்று ஒரு ஸ்டைல் வந்துவிடும். அதுதான் மிக முக்கியமானது. நமது கோடுகளில் எவருடைய சாயலும் இருக்கக் கூடாது. ஏனெனில் உங்கள் கோடுகள் 'அலக்’காக இருந்தால்தான் நீங்கள் தனித்துவமாக விளங்க முடியும். அதோடு தொடர் செய்தி வாசிப்பும் அரசியல் நிகழ்வுகளின் கவனிப்பும் அவசியம்.
கார்ட்டூன் வரைவதை விருப்பமாக செய்தால் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. "ஏக் மார் தோ துக்டா” என்று இறங்கி கிறுக்கலாம்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் ஃபேஸ்புக்