தன்னலமற்ற தமிழ்ச்செல்வியுடன் ஒரு சந்திப்பு!
நம்மில் பலர் தினசரி அலுவலக வேலையை செய்வதிலேயே களைத்து, சலித்துப் போய்விடுகின்றோம். ஆனால், தனது அரசுப் பணிக்குப் பின்னர் மிஞ்சும் நேரத்தில் மரக்கன்று நடுவது முதல், மருத்துவ உதவிகள், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்குச் சேவை என இருபத்து நான்கு மணிநேரத்துக்கும் அதிகமாகவே உழைத்து வருகின்றார் திருமதி. தமிழ்ச்செல்வி நிக்கோலஸ். இவர் தனது அயராத சேவைக்கான அங்கீகாரத்தை நம் நாட்டின் குடியரசுத் தலைவரிடம் சமீபத்தில் பெற்றார்.
தன் தயாரைப் போலவே காதல் திருமணம் முடித்த தமிழ்ச்செல்வி, மக்களின் நன்மைக்காக கடைசி மூச்சு வரை போராடிய தனது தந்தை, கி.அயோத்திராமன் அவர்களின் பாதையைப் பின்பற்றுகின்றார். “பொதுவாழ்வில் பெண்கள்” (women in public life) என்கிற தலைப்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம், நாடு முழுவதிலும் இருந்து பல துறைகளைச் சேர்ந்த பெண்களில் 100 பேரை ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்விக்கு தன்னலமற்ற சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி தமிழ்செல்வி கூறுவது,
‘சமூக ஊடகங்களில் யாருக்காவது உதவி தேவை என தெரியவந்தால், அவர்களது வசிப்பிடத்தை அறிந்து இந்தத் தகவல் உண்மைதானா? என அறிந்துகொள்வேன். அவர்களுக்கு உதவ யாரேனும் முன்வந்தால், நேரடியாக தேவைப்படுவரையும், கொடுக்கவிரும்புவரையும் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள வழிசெய்வேன். இதுபோல நான் செய்த உதவிகளை சமூக ஊடகத்தில் பகிர்ந்தால் மற்றவர்களுக்கும் உதவும் எண்ணம் வரும் என்று அவற்றைப் பற்றி பகிர்வது வழக்கம். இது என்னைப்போன்ற மனமுள்ள ஒரு நண்பர்கள் வட்டத்தை நான் பெறக் காரணமானது.’
சமீபத்தில் வெளியான ‘36 வயதினிலே’ திரைப்படத்தில் வருவது போன்ற ஒரு சந்திப்பு குடியரசுத் தலைவருடன் ஏற்படும் என எண்ணியதுண்டா? என கேட்டதற்கு,
‘அந்த படம் வந்தபோது மட்டுமல்ல, எனது மின்னஞ்சல் முகவரிக்கு இது தொடர்பான தகவல் வந்த பின்னரும் நான் நம்பவே இல்லை. உறங்கிக்கொண்டிருந்த எனது மகளை அந்த கடிதத்தைப் பார்க்கச் சொல்லி செய்தி உண்மைதானா? என்று கேட்டேன். உண்மைதான், என்று சொல்லி மீண்டும் தூங்கிவிட்டாள். மேலும், அரை மணிநேரம் தூங்கி எழுந்தவள் நேரே வந்து என்னை கட்டித் தழுவிக்கொண்டாள். அந்த நொடிதான் இது உண்மை என உணர்ந்தேன்.’
அலுவலகப் பணிக்கு இடையே எப்படி சேவைக்கு நேரம் ஒதுக்குகின்றீர்கள்?
‘ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள எனது நண்பர்கள் குழு வாட்ஸ் அப்பிலும் இருக்கின்றோம். இதனால் அவசர உதவி தேவைப்படும் இடத்திலும் யாரோ ஒருவர் தகுந்த நேரத்தில் உதவுகின்றோம். தற்போது ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு தனிப்பட்ட இலக்கை அடைவது என்ற குறிக்கோளுடன் செயல்படுகின்றோம். பத்து பேர் அடங்கிய குழுவாக உள்ள நாங்கள் இன்னும் பெரிய குழுவாக வளர்வோம் என்ற நம்பிக்கையுள்ளது.’
‘நான் நண்பர்களுடன் இணைந்து தொடங்கியுள்ள ‘நேச விழுதுகள்’ என்ற அமைப்பின் மூலம் கல்லூரியில் படிக்கும் எனது மகள் மற்றும் அவளது நண்பர்களைக் கொண்டு பள்ளிகளில் விழிப்புணர்வு கருத்தரங்களை நடத்தி வருகின்றோம். இதுவரை 2500 மரக்கன்றுகளை இதன் சார்பாக இலவசமாக வழங்கி இயற்கையை மேம்படுத்த ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.’
மரங்கள்தான் நம் வாழ்க்கைக்கு ஆதாரம். பூமியின் பாதுகாப்பு அதைச் சூழ்ந்துதான் உள்ளது. இதைப் பற்றிய விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்தாது, வீட்டிற்கு வருகை தருவோருக்கெல்லாம் ஒரு மரக்கன்றை பரிசாக வழங்கி அனைவரையும் மரம் வளர்க்க ஊக்குவிக்கின்றார். இதுதவிர, இயற்கை விவசாயம் செய்வதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி வைத்துள்ளார். தனது நிலத்தைச் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் கட்டிடங்கள் ஆனாலும் தனது நிலத்தில் விவசாயம் செய்வதில் உறுதியாக உள்ளதாக அவர் கூறினார்.
‘இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும். காணி நிலம் வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய போராடும் கடைநிலை விவசாயி அரசால் கவனிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். இவர்கள் விளைக்கும் பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்வது அரசாக இருக்க வேண்டும்’ என்றார்.
மாடித்தோட்டம் பற்றிய உங்கள் கருத்து?
வெகு சுலபமாக, குறைந்த அளவு தண்ணீரில் மாடித்தோட்ட முறையில் காய்கறிகளை வளர்க்க முடியும். ஆனால், இதை கவனிப்பது கடினம் என்று கூறி இந்த தோட்டத்துக்கு நாம் பெரும்பாலும் நேரம் ஒதுக்குவதில்லை என்று வருந்தினார்.
பெற்றோர்களின் ஆதரவின்றி இளம் வயது திருமணம், தனிக் குடித்தனம், கணவரின் ஆதரவு இருந்ததா?
‘நான் திருமணத்துக்கு முன்பே அரசுப் பணியில் இருந்தேன். ஆரம்பத்தில் புகைப்படக் கலைஞராக இருந்த எனது கணவர் நிக்கோலஸ், எங்களது காதல் திருமணத்துக்குப் பின் காவல் துறையில் பணியாற்ற விரும்பினார். இதற்கான தேர்வில் வென்று பயிற்சியும் பெற்றார். எங்களது குடும்பங்களின் ஆதரவு இல்லாததால் மகள் பிறந்தபோது உதவிக்கு யாருமின்றி தவித்தேன். எனக்கு துணையாக இருக்க வேண்டி பயிற்சி பெற்ற பின்னரும், தனது விருப்பமான காவல் துறை பணிக்கு அவர் செல்லவில்லை. அன்று முதல் இன்றுவரை எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் எனது கணவர் துணையாக இருக்கின்றார்.’
மதத்தைக் காட்டிலும் சக மனிதர்களுக்கு உதவுவதை பெரிதும் விரும்புபவர். இயற்கை ஆர்வலர், எந்த ஒரு சூழலிலும் துணிந்து போராட உறுதுணையாக இருப்பவர் என்றும் கணவரைப் பபற்றி கூறினார்
தந்தையின் இழப்பு கற்றுக்கொடுத்த பாடம் என்ன?
நமக்கு அருகிலேயே இருக்கும் வரை நம் பெற்றோர்களின் அருமையை உணர்வதேயில்லை. சின்ன விஷயங்களுக்காக அவர்களிடம் போட்டிபோட்டு பேசாமல் இருப்பதை நமது இளம் வயதில் சாதனையாக எண்ணினாலும், அவர்களை இழந்த பின்னர்தான் இருந்த நேரத்தை இப்படி தவற விட்டு விட்டோமே எனத் தோன்றும்.
‘அப்பாவின் மீது கோபித்துக்கொண்டு பேசாமல் முரண்டு பிடித்த காலத்தை எண்ணி தற்போது நான் வருந்துகின்றேன். அவரின் இழப்புதான், உயிர் எவ்வளவு முக்கியம் என புரிய வைத்தது. சாலையில் அடிப்பட்டு யாரேனும் துடிதுடித்தால் உடனடியாக அவர்களைக் காப்பாற்ற ஓடுவேன். உயிரை காப்பாற்ற நினைக்கும்போது, சிதறிக்கிடக்கும் ரத்தம் என்னைப் பயமுறுத்துவதில்லை.’
‘பெரியார் விரும்பியான அவர் அக்கம் பக்கத்து கிராமங்களில் வெள்ளம் உட்பட எந்தப் பிரச்சனை வந்தாலும் உதவுவார். அதுபோன்ற ஆபத்து காலத்தில் எங்களது வீட்டில் எத்தனையோ பேர் தங்கி இருந்ததை கண்கூடாகப் பார்த்திருக்கின்றேன். அவர் உயிரிழந்தபோது பல கிராமங்களிலிருந்தும், மக்கள் கூட்டம் திரண்டது. இவர் இறந்துபோன விவரம் தெரியாது ஒரு ஆண்டுக்கு பின்னரும் அவரைத் தேடி வந்த மக்கள் ஏராளம். இவையெல்லாம் அப்பாவின் வழியை நான் பின்பற்ற காரணம்’ என்று பெருமிதமாக கூறினார்.
விருதுக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது?
பயம் அதிகரித்துள்ளது. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. நாம் கவனிக்கப்படுகின்றோம் எனத் தோன்றுகின்றது. இன்னும் மக்களுக்காக நிறைய உழைக்க வேண்டும் என்று கூறும் தமிழ்ச்செல்வி சமூக ஊடகத்தில் தனது தன்னம்பிக்கை கொடுக்கும் எழுத்துக்களால் பலரை தன்வசம் ஈர்த்துள்ளார். இதனால் எங்கோ வசிக்கும் நேரில் சந்திக்காதவர்களும் நட்பு பாராட்டி அன்பை அள்ளித்தரும் குடும்பமாக கிடைத்துள்ளனர்.
டெல்லியில் மற்ற சாதனைப் பெண்களைச் சந்தித்தது எப்படி இருந்தது?
‘சொந்த உழைப்பில் ஊரிலுள்ள பள்ளிக் குழந்தைகள் கல்வி பயில உதவிய பெண், தன் ஊரைத் தவிர வேறு எதுவுமே அறியாதவராய் இருந்தார் என்பது ஆச்சரியமளித்தது. இளம் வயதிலேயே பல்வேறு விளையாட்டில் பங்கேற்று பட்டங்களைப் பெற்ற வைஷ்ணவி என்ற பெண், பல நாடுகளில் பட்டம் வென்ற செஃப் என இளம் வயது பெண்களின் சாதனையைப் பார்க்கும்போது, நான் ஒன்றும் பெரிதாக சாதித்ததாக தோன்றவில்லை’ என்றார்.
குடியரசுத் தலைவருடன் ஒன்றாக உணவு அருந்திய நாள் எப்படி இருந்தது?
குடியரசுத் தலைவருடன் மட்டுமல்லாது, எத்தனையோ துறைகளில் சாதித்த பெண்கள் ஒன்றுகூடி உணவு அருந்தியதை மறக்கவே முடியாது. உணவு உண்ணத் தொடங்கும் முன் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
‘நீங்கள் அனைவரும் குடியரசுத் தலைவருடன் உணவு உண்பதை பெருமையாகக் கருதலாம். இத்தகைய சாதனைப் படைத்த பெண்களுடன் உணவு உண்பதை நான் பெருமையாக எண்ணுகின்றேன்’ எனத் தெரிவித்தார். அந்த நொடிதான் மகிழ்ச்சியின் உச்சம்.
தமிழ்ச்செல்வியின் வேண்டுகோள்
இந்த உலகத்தில் நாம் வாழும் காலம் மிகவும் சிறியது. அதை அழகாக்க சக மனிதனுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடையுங்கள். மலர்ந்த முகத்துடன் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள். எப்பேற்பட்ட பதவியில் இருந்தாலும், என்ன சம்பாதித்தாலும் மரியாதையுடன் அனைவருடனும் பழகுங்கள். கோபத்தாலும், வெறுப்பாலும் எதையும் சாதித்துவிட முடியாது. கடைசி காலத்தில் பெற்றோர்களை தனிமைப் படுத்தாதீர்கள் எனக் கூறினார்.
தன்னம்பிக்கையின்றி உயிரைத் துறக்க எண்ணிய பலர் தமிழ்ச்செல்வியின் ஆலோசனைக்குப் பின்னர் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். தமிழ் மொழியின் மீது பற்றுக்கொண்ட தமிழ்ச்செல்வி தனது புதுமொழிகள் அடங்கிய புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளார்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
பெண் சாதனையாளர்கள் தொடர்பு கட்டுரைகள்:
ஜனாதிபதி கெளரவித்த பின் 'வாட்ஸ்ஆப்' மூலம் சங்கமித்த 100 சாதனைப் பெண்கள்!
எழுத்தாளர், புகைப்படக்கலைஞர் என பன்முகம் கொண்ட ராமலக்ஷ்மி ராஜன்