‘நூல்’ சொல்லும் பாடம்: சிறார்களை புத்தகம் வாசிக்க வைக்கும் பொறியாளர் ஜோடி!

  பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் ‘பிரச்சினை-தீர்வு’ திறனை அதிகரிக்க தொடங்கப்பட்ட ‘புதிர்’ அமைப்பின் கீழ் இயங்கும் ‘நூல்’, குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 

  27th Jun 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  பதினைந்து வருடங்கள் தொடர்ந்து பள்ளிக்கூடம், அடுத்து கல்லூரி என ஒரு எக்ஸாமிற்கு பிறகு அடுத்த எக்ஸாமை சந்திக்கும் இந்த தலைமுறையினர் இதனோடே நிறைய சிக்கல்களையும் கடக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த சிக்கல் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய திறனை பள்ளிக்கல்வியோ, கல்லூரி வாழ்க்கையோ பயிற்றுவிப்பதில்லை. 

  இதை கருத்தில் கொண்டு தான், மாணவர்கள் மத்தியில் பிரச்சினை-தீர்வு திறனை அதிகரிக்க, சென்னையை சேர்ந்த நவிலன் ஐந்து வருட ஆய்விற்கு பிறகு, 2017 ஆம் ஆண்டில் ‘புதிர்’ என்றொரு அமைப்பை தொடங்கினார். தற்போது ‘புதிரை’யும் , அதன் கிளைகளான ‘நூல்’, ‘கதைவிடு’ ஆகிய அமைப்புகளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக செயல்படுத்தி வரும் நவிலனும், அவருடைய மனைவி சௌம்யாவும் பொறியியல் படித்தவர்கள்.

  இதில், ‘நூல்’ (KNOOL) அமைப்பு குழந்தைகள் மத்தியில் வாசிப்பை அறிமுகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டு இருக்கிறது. சௌமியாவின் யோசனையாக இருந்து வடிவம் பெற்றிருக்கும் இந்த முயற்சி, வாசிப்பு பழக்கம் வெறும் சேத்தன் பகத் புத்தகங்களுக்குள் சுருங்கும் இந்த காலத்திற்கு அவசியமானது.

  செளமியா மற்றும் கணவர் நவிலன் ‘நூல்’ வகுப்புகளில் குழந்தைகள் உடன் 

  செளமியா மற்றும் கணவர் நவிலன் ‘நூல்’ வகுப்புகளில் குழந்தைகள் உடன் 


  “இந்த தலைமுறை குழந்தைகள் ரொமான்ஸ் கதைகளையும், பாலிவுட் ஸ்டைலில் இருக்கும் கதைகளையுமே படிக்கிறார்கள். நிறைய நல்ல எழுத்தாளர்கள் இருந்தாலும், அவர்களை எல்லாம் பற்றி யாருக்குமே தெரிந்திருக்கவில்லை,” என்கிறார் சௌமியா. 

  இதை மனதில் வைத்து, நல்ல எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் அறிமுகப்படுத்த நான்கு மாதங்களுக்கு முன்பு ‘நூல்’ அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.

  இளம் வயதிலேயே வாசிப்பை விதைத்தால், அது பசுமை மாறாமல் மனதிலேயே இருக்கும். அதை செய்வது தான் ‘நூலின்’ நோக்கம். எனவே, ஐந்து வயது குழந்தைகளும் ‘நூல்’ கூடத்திற்கு வரலாம். ‘நூல்’ எனும் எளிமையான, அதே சமயம் ஈர்க்கக் கூடிய பெயரை தேர்வு செய்ததை பற்றிக் கேட்ட போது,

  “எனக்கு வாசிப்பு பனிரண்டாவதுக்கு பிறகு தான் அறிமுகமாச்சு. ஆனால், என்னோட ஹஸ்பெண்ட் நவிலன் ரொம்ப சின்ன வயசுல இருந்தே படிக்கத் தொடங்கிட்டார். சின்ன சின்ன பத்திரிகைல இருந்து என்ன கிடைச்சாலும் அவர் படிப்பார். அதனாலேயே அவருக்கு தமிழ் ஆர்வம் அதிகம். ‘புதிர்’னு பெயர் வைச்சதும், ‘கதைவிடு’னு பெயர் வைச்சதுமே அதனால தான்,” என்கிறார்.

  பொறியியல் படித்த நவிலன் வாசிப்பில் தீவிர ஆர்வம் உள்ளவர். எழுதும் பழக்கமும் உண்டு. இவர் செய்த பொறியியல் புராஜெக்ட் பல ஆயிரம் முறைகள் இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பது அவர் துறையில் கொண்டிருக்கும் ஈடுபாட்டை நிரூபிக்கிறது. இந்தியாவில் இளநிலை கல்வி முடித்துவிட்டு, அமெரிக்காவில் மேல்நிலை படித்த சௌமியாவுமே ஸும்பா நடன பயிற்றுனர் உட்பட பல திறமைகளை கைக்குள் வைத்திருக்கிறார்.

  image


  மாதத்தின் இரண்டாம் ஞாயிறுகளில் ‘நூல்’ கூட்டம் நடைபெறுகிறது. ‘புதிர்’ அமைப்பின் சால்வர்’ஸ் க்ளப்பின் உறுப்பினர்களுக்கு அனுமதி கட்டணம் இல்லை. பிற குழந்தைகளுக்கு இருநூறு ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது.

  இக்கூட்டம் தொடங்கிய சில மணி நேரங்களுக்கு, பயங்கர கூச்சலாக, கலவரமாக இருக்குமாம். குழந்தைகள் அப்படி ஆர்வமாய் புத்தகத்தை பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்களாம். பிறகு, கொஞ்ச நேரத்தில் எல்லாரும் அமைதியாய் அமர்ந்து புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார்களாம். பெற்றோர்களும், உடன் இருந்து படிப்பதும் உண்டு.

  “ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்வோம். அந்த எழுத்தாளரை பற்றிப் பேசுவோம். ஆனால், எல்லா கூட்டமும் ஒன்றைப் போலவே இருக்காது. தமிழர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் வருவதனால் இப்போதைக்கு பொதுவாக ஆங்கில புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக தமிழ் புத்தகங்களும் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் இருக்கின்றன,” என்கிறார் சௌமியா.

  ரஸ்கின் பாண்ட், ரோஆல்ட் டால் மற்றும் ஷெய்ல் சில்வர்ஸ்டெய்ன் ஆகிய எழுத்தாளர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ரஸ்கின் பாண்ட் தன்னுடைய தனிப்பட்ட ‘ஆல்-டைம் ஃபேவரைட்’ கூட என்கிறார் சௌமியா. வாசிப்பு குழந்தைக்கு அறிமுகப்படுத்தப் படுவதில் பெற்றோர்களுக்கும் முக்கிய பங்கு இருப்பதாகவே நினைக்கிறார் சௌமியா. ரஸ்கின் பாண்ட் கதைகள் விடுதலை போராட்ட காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கும், அதனால் பெற்றோரும் பக்கத்தில் உட்கார்ந்து படிக்க வேண்டியது அவசியமாக இருக்கும் என்கிறார்.

  “ரோஆல்ட் டால் புத்தகங்களை திறந்துவிட்டால், குழந்தைகள் அதற்குள்ளேயே மூழ்கி விடுவார்கள். அந்தளவு, அந்த புத்தகங்களோடு தங்கள் வாழ்க்கைகளை தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்,” என்கிறார்.

  ‘புதிர்’ கூட்டங்களில் வாரம் முழுக்க மூளையை கசக்க பயிற்றுவிக்கப்படும் குழந்தைகளுக்கு, வார இறுதியில் நடக்கும் ‘கதைவிடு’, ‘நூல்’ புத்துணர்வளிப்பவையாக இருக்கும் என சௌமியா நம்புகிறார்.

  ‘கதைவிடு’ கூட்டங்களில் சொல்லப்படும் கதைகளில் ஹீரோ, வில்லன் பாணியில் இல்லாமல், குழந்தைகள் தினசரி சந்திக்கும் சிக்கல்களையோ, அவர்களுடைய வாழ்க்கை முறையையோ மையமாகக் கொண்டிருக்கும். இந்த மாதம் ‘புல்லியிங்’கை (bullying) மையமாக வைத்து கதைகள் சொல்லவிருக்கிறார்கள். 

  ‘கதைவிடு’ கூட்டங்களில் சொல்லப்படும் கதைகளை எல்லாம் ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் முயற்சியையும் செய்து கொண்டிருக்கிறார்கள் நவிலனும், சௌமியாவும். சிறார் இலக்கியத்திற்கு முக்கிய பங்காக அவை இருக்கும் என்பது நிதர்சனம்.

  image


  கூடவே, ஓவியக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக ‘வண்ணம்’ என்றொரு திட்டத்தையும் விரைவில் தொடங்கவிருக்கிறார்கள்.

  “இது தான் உனக்கு வரும்னு ஒரு குழந்தைக்கு சொல்றதை விட, எல்லாத்தையும் ட்ரை பண்ண வைக்கும் போது அவங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகும்,” என்கிறார் சௌமியா.

  வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவதால் உடனடியாக வாழ்வில் மாற்றம் வரும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், வாசிப்பு நம் வாழ்க்கையை ஏதோ விதத்தில் மாற்றிக் கொண்டே தான் இருக்கிறது என்பதை தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க நினைக்கிறோம் என நிறைவு செய்கிறார் சௌமியா. 

  நூல் முகநூல் பக்கம்: Knool

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

  Our Partner Events

  Hustle across India