நீட் தேர்வில் 639 மதிப்பெண் - டாக்டர் கனவை நினைவாக்கிய பூக்கடைக்கார் மகள்!
நீட் தேர்வில் 639 மதிப்பெண் பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பூக்கடை தொழிலாளியின் மகள் சுபலட்சுமி மருத்துவராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் சதவிகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் மொத்தம், 24.06 லட்சம் பேர் தேர்வு எழுதினர், இதில் மொத்தம் 13 லட்சத்து 16,268 அதாவது, 56.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தாண்டு ஒரு லட்சத்து 52,920 பேர் தேர்வு எழுதியதில் 89,426 அதாவது, 58.47% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு 54.4% மாவணர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அதிகபட்சமாக, ராஜஸ்தானில் இருந்து 11 பேரும், தமிழகத்தில் இருந்து, 8 பேரும் , மஹாராஷ்டிராவில் இருந்து, 7 பேரும் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேசிய அளவில், 10 திருநங்கையர், 7.69 லட்சம் மாணவியர் மற்றும் 5.47 மாணவர்கள் என, 13.16 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களில், 3.34 லட்சம் பொது பிரிவினர், 6.19 லட்சம் மிக பிற்படுத்தப்பட்டோர், 1.79 பட்டியலினத்தவர், 68,479 பழங்குடியினத்தவர், 1.16 லட்சம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 1.16 லட்சம் பேர், மஹாராஷ்டிராவில் 1.43 லட்சம் பேர், ராஜஸ்தானில் 1.21 லட்சம் பேர், தமிழகத்தில், 89,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் நாடு முழுதும் உள்ள, 80,000 மருத்துவ இடங்களுக்கு போட்டியிட்டு உள்ளனர்.
தனியார் பயிற்சி மையங்களில் படித்த 8 தமிழக மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊதியூர் சாந்தி நிகேதன் பள்ளி மாணவன் சஞ்சய் 687 மதிப்பெண் பெற்று அரசு உதவி பெறும் பள்ளி பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பழனியம்மாள் பள்ளி மாணவி ரூபா ஸ்ரீ 441 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
பலமுறை தேர்வெழுதும் மாணவர்களில் கணபதிபாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பவானி 650 மதிப்பெண்கள் பிடித்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர்களோடு, திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 236 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நீட் தேர்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரின் மதிப்பெண்கள் உயர்ந்து வருகின்றன. இதேபோல், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பலரும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பூக்கடை தொழிலாளியின் மகள் சுபலட்சுமி தனது இரண்டாவது முயற்சியில் நீட் தேர்வில் 639 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.
"கடந்த ஆண்டும் நான் நீட் தேர்வை எழுதி இருந்தேன், அதில் 530 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த போதும் பொருளாதார வசதி இல்லாததால் இரண்டாவது முறை தேர்வு எழுதினேன். வீட்டில் இருந்தே ஆன்லைனில் படித்து 2024 நீட் தேர்வை எழுதினேன். NCERT பாடப்புத்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தேன், இந்த முறை 639 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 39,836 இடம் பெற்றிருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவினாலேயே என்னால் மதிப்பெண் பெற முடிந்தது," என்று சுபலட்சுமி தெரிவித்துள்ளார்.
"பணம் கட்டித் தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று இல்லை, மாணவர்கள் மனது வைத்தால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே அதிக கட்டணமின்றி டாக்டருக்கு படிக்க முடியும்," என்று கூறியுள்ளார் சுபலட்சுமி.
கடந்த ஆண்டு என்னுடைய மகளை தனியார் பயிற்சி மையத்திற்கு அனுப்பி நீட் தேர்வுக்கு படிக்க வைத்தேன். அப்போது அவர் 530 மதிப்பெண் பெற்றிருந்தார். சுயநிதி கல்லூரியில் ஆண்டுக்கு 9 லட்சம் செலவு செய்து படிக்க வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பொருளாதார ரீதியாக அது சாத்தியம் இல்லை என்பதால் என்னுடைய மகள் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதாகக் கூறினார்.
”ஆன்லைனிலேயே பயிற்சி வகுப்பை எடுத்துக் கொண்டு இன்னொரு ஆண்டு படித்தார், இரண்டாம் ஆண்டில் 639 மதிப்பெண் பெற்றிருக்கிறார். நீட் தேர்வு போன்ற தகுதித் தேர்வு இருப்பதாலேயே எங்களைப் போன்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மருத்துவராகும் கனவு நனவாகிறது. இல்லையெனில், கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும். நிச்சயமாக என்னுடைய மகள் எடுத்திருக்கும் மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவ கல்லூரியிலேயே இடம் கிடைக்கும், அந்த கட்டணத்தை நான் எப்படியாவது கட்டிவிடுவேன். எனவே, நீட் தகுதித் தேர்வு அவசியம்,” என்று சுபலட்சுமியின் தந்தை கருணாநிதி கூறியுள்ளார்.
பட உதவி: பாலிமர் டிவி
பயிற்சி வகுப்பு செல்லாமல் யூடியூப்பில் படித்தே நீட்டில் 687 மதிப்பெண் - சாதித்து காட்டிய தமிழக மாணவன் சஞ்சய்!