'புதுயுக தொழில்முனைவு'- சிறப்புக் கட்டுரை தொடர் ஆரம்பம்!
21 ஆம் நூற்றாண்டின் தொழில் முனைவு பரிணாம வளர்ச்சி பற்றி விரிவாக அலசும் கட்டுரைத்தொடர் - பிரதி திங்கள் தோறும்!
மாற்றம் ஒன்றே என்றென்றும் மாறாதது. மண்ணில் தோன்றிய காலம் முதல் மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளை வகுத்துக்கொண்டான். அந்த வழிமுறைகளும் அணுகு முறைகளும் அறிவாற்றல், காலம் மற்றும் சூழல் மாற்றங்களின் காரணத்தால் பல்வேறு பரிணாமங்களை பெற்று அவற்றின் இயல்புத்தன்மைகளில் மாற்றம் பெறத்தொடங்கின. காலவேகத்தில் மனிதனின் அறிவாற்றலும் வாழ்வியல் குறித்த சிந்தனை மாற்றங்களும் அவனது தேவைகளை பூர்த்தி செய்யும் முறைகளை புரட்டிப்போட்டன. முதலில் தனக்கான தேவைகளை தானே உருவாக்கிக்கொண்ட மனிதன் பின்னர் தனக்கு மிஞ்சியதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களிடமிருந்து தனக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டான். இதை பண்ட மாற்றம் என்று அழைத்தார்கள். அதன் பின்னர் பணம் என்ற பொதுவான ஒன்றை உருவாக்கினான். பணத்தின் பரிணாம வளர்ச்சி ஒரு தனிக்கதை. பொற்காசுகளில் தொடங்கி இன்றைய மொபைல் காமர்ஸ் வரை பல்வேறு உருமாற்றங்களை பெற்றுக்கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறது பணம். பழைய தெருக்கடைகள் இணைய வெளியில் ஈ-காமர்ஸ் கடைகளாக வடிவம் பெற்று கற்பனை செய்திராத மாற்றங்களை வணிக உலகில் உருவாக்கி வருகிறது.
கடந்த நூற்றாண்டு மனித குல வரலாற்றின் மிக முக்கியமான மாற்றங்களை அறிவுசார் தொழில் நுட்பங்கள் மூலமாக உலகத்துக்குள் திணித்திருக்கிறது. நவீன வணிக உலகம் மனிதனின் சராசரி தேவைகளை அவனது மனவெளியில் விரிவாக்கி தேவைகளின் முக்கியத்துவத்தை மறு நிர்ணயம் செய்திருக்கிறது. நேற்று பகட்டாக இருந்த ஒன்று இன்று அத்தியாவசியத்தேவையாக பழக்கப்படுகிறது. புதிய சிந்தனை வியூகங்கள் புதிய பொருட்களையும் சேவைகளையும் உருவாக்குகின்றன. அறிவுசார் தொழில்நுட்பங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக மனிதனின் தேவைகளும் அவற்றை தீர்க்கும் முறைகளும் புது வடிவம் பெற்று வருகின்றன. நம்மை அறியாமலேயே காலச்சக்கரம் நம்மை வேறு ஒரு யுகத்துக்குள் கொண்டு தள்ளி விடுகிறது. புதுயுகம் புரியாத யுகமாக இருக்கிறது. அதன் தன்மைகள் வேறாக இருக்கின்றன. அதன் அணுகுமுறைகள் வேறாக இருக்கின்றன. எது சரி எது தவறு என்ற தெளிவின்மை பலமாக நம்மை குழப்புகிறது. புதிய சித்தாந்தங்கள் வெளியிடப்படுகின்றன. சில மாதங்களிலேயே அவை செல்லாதவைகளாக அறிவிக்கப் படுகின்றன.
தொழில் வணிக உலகில் 'புதுயுக தொழில் முனைவு' என்ற சொல்லாக்கம் வலுப்பெற்று வருகின்றது. "புதுயுக தொழில் முனைவு " என்ற சொல்லாடலை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். தொழில் முனைவு ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்மையில் மாற்றம் பெற்று வருகிறது. பொருட்களை உற்பத்தி செய்து விற்பது, வாங்கி விற்பது, சேவைகளை விற்பது என்று எல்லாமே தொழில் முனைவு என்ற விளிச்சொல்லுக்குள் அடங்கினாலும் கால மாற்றத்தினால் "தொழில் முனைவு" என்பதை சற்று விரிவு படுத்தி பார்க்க வேண்டி இருக்கிறது.
இன்றைய காலம் அறிவாட்சியின் காலம். அறிவு சார் புதுமையாக்கம் (knowledge innovation) தொழிலாக்கங்களில் (Venture Creation) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய மாறுபட்ட அணுகு முறையின் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் வித்தியாசமான தொழிலாக்கங்கள் (ventures) உருவெடுக்கின்றன. இவற்றின் வளரும் தன்மை (scalablity) வியக்கத்தக்க வகையில் இருக்கின்றது. இதற்கு தொழில் நுட்ப வளர்ச்சி பெரும் துணை செய்கிறது. இவ்வாறு அறிவுசார் புத்தாக்கம் (innovation), வளரும் தன்மை (scalability), தொழில்நுட்ப உபயோகம் (technology) இணைந்த தொழில் முயற்சிகள் புது யுக தொழில் முனைவு (New Age Entrepreneurship) என்று சொல்லப்படுகிறது. இத்தகைய தொழில்களின் மதிப்பீடு வெறும் அசையும் சொத்துக்களை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. மாறாக ஐடியாக்களின் சக்தியை வைத்து மதிப்பிடப்படுகிறது.
இந்த புதிய வெளியில் உலகெங்கும் உருவாகும் புதிய சிந்தனைகள் - அது சரியோ தவறோ நடைமுறைக்கு வெகு வேகமாக வந்து விடுகின்றன. இன்று அமெரிக்காவில் உருவெடுக்கும் ஒரு சிந்தனையாக்கம் நாளை அண்ணாநகரில் விரிவடைகிறது என்றால் அது இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மிகையில்லை. இந்த சூழலில் புது யுக தொழில் முனைவின் பல்வேறு பரிமாணங்களையும், அணுகுமுறைகளையும் அதேபோல் காலமாற்றத்தின் ஆரம்பங்களில் இயல்பாக நிலவும் தெளிவின்மையையும் தவறான சிந்தனைப் போக்குகளையும் ஆழமாக ஆராயும் முயற்சி தான் இந்த கட்டுரைத்தொடர். இதில் நாம் இந்த துறை சார்ந்து பரவலாக பேசப்படும் பல்வேறு அம்சங்களைப்பற்றியும் மற்றும் அவற்றின் தாக்கங்கள், விளைவுகள், சிந்தனைப்போக்குகள், பிரச்சினைகள், தீர்வுகள் பற்றியும் பேசப்போகிறோம். மேலும் புதுயுக தொழில் முனைவில் முன்னோடி நிறுவனங்கள் பற்றியும் முன்னோடி மனிதர்கள் பற்றியும் பேசப்போகிறோம். நவீன தொழில்யுகத்தில் தமிழகத்தின் கடைக்கோடி தமிழனும் தன் முத்திரையை பதிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.
கட்டுரையாளர்: சிவராஜா இராமநாதன், தலைமை நிர்வாகி, நேட்டிவ்லீட் பவுண்டேஷன் மற்றும் நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க்
(இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களுக்கான முதல் புதுயுக தொழில் சூழல் மேம்பாட்டை கட்டமைக்கும் நேட்டிவ்லீட் பவுண்டேஷன் மற்றும் நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களை உருவாக்கியவர். மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நேட்டிவ்லீட் அமைப்பு சிறு நகரங்களில் புதிய ஐடியாக்களோடு வரும் இளைஞர்களுக்கு அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மூலமாக வழிகாட்டலும் முதலீட்டு வாய்ப்பும் உருவாக்கித்தரும் ஒரு தளமாக இயங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு நகரங்களின் இயல்பான தொழில் வாய்ப்புகளை புதிய சிந்தனைகள் மூலமாக எப்படி மேம்படுத்துவது என்ற ஆய்வுகளையும் மேற்கொள்கிறது. நேட்டிவ் லீட் அமைப்பு மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி ஆகிய நகரங்களில் இயங்கி வருகிறது.)