காளான் தொழிலில் புரட்சியும் பெரும் வளர்ச்சியும் - ‘மஷ்ரூம் மில்லினியர்’ கதை!
ஒடிசாவில் ‘கலிங்கா மஷ்ரூம் சென்டர்’ மூலம் தான் மில்லியனர் ஆனது மட்டுமின்றி, 1 லட்சம் பேர் பொருளாதார ரீதியில் பயனடைய உறுதுணை புரிந்திருக்கிறார் சந்தோஷ் மிஸ்ரா.
ஒடிசாவின் ‘கலிங்கா மஷ்ரூம் சென்டர்’ கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ‘இல்லை’ எனில், சந்தோஷ் மிஸ்ராவை உங்களுக்கு தெரியவில்லை என்று பொருள். நிதி அளவிலான போராட்டங்களில் இருந்து ‘கலிங்கா மஷ்ரூம் சென்டர்’ மூலம் மில்லினியர் ஆனவர்தான் இந்த சந்தோஷ் மிஸ்ரா.
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பிப்லி என்ற நகரில் உள்ள ‘கலிங்கா காளான் மையம்’ புதுமைக்கும் விடாமுயற்சிக்கும் சாட்சியமாக நிற்கிறது.
தண்டாமுகுந்தா பூர் கிராமத்தைச் சேர்ந்த பிஜேபி கல்லூரி பட்டதாரி சந்தோஷால் நிறுவப்பட்ட இந்த மையம், இப்பகுதியில் காளான் வளர்ப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டப் பயணம்
சந்தோஷின் வெற்றிப் பயணத்தில் இடையூறுகள், போராட்டங்கள், தடைகள் இல்லாமல் இல்லை. கல்வியில் அவர் சிறந்தவராக இருந்தாலும் பணக் கஷ்டத்தினால் கல்வியை ஒரு கட்டத்துக்கு மேல் தொடர முடியவில்லை. 1989-ம் ஆண்டு தன் சேமிப்பான வெறும் 36 ரூபாயைக் கொண்டு ஒடிசா வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் காளான் விவசாய பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார்.
இவரது இந்த முடிவுதான் வாழ்க்கையில் சந்தோஷுக்கு சந்தோஷமான திருப்பு முனையாக அமைந்தது. இங்கிருந்து அவரது தொழில்முனைவுப் பயணம் தொடங்கியது.
காளான் வளர்ப்பு அத்தனை எளிதல்ல. இருப்பினும், இதன் தொழில்நுட்ப சிக்கல்களைப் புரிந்துகொண்ட சந்தோஷ், அதிக ஈரப்பதம், பூஞ்சை மாசுபாடு மற்றும் போதிய வெளிச்சமின்மை போன்ற பிரச்சினைகளை சமாளிக்க ஒடிசா பல்கலைக் கழக விஞ்ஞானிகளிடம் ஆலோசனை கேட்டார்.
சந்தோஷின் விடாமுயற்சி பலனளித்தது. ஒரு கொட்டகையில் 100 படுகைகளுடன் தொடங்கி, தனது தந்தை அளித்த சிறிய கடன் தொகை மூலம் சந்தோஷ் மே 1989-இல் 150 கிலோ காளான்களை அறுவடை செய்தார்.
5.2 கிலோ சிப்பி காளான்களை ரூ.120-க்கு தனது கல்லூரிக்கு அருகிலுள்ள கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு விற்பனை செய்தது சந்தோஷின் முதல் குறிப்பிடத்தக்க விற்பனையாக அமைந்தது.
இந்த வெற்றி ஒரு தொடக்கம் மட்டுமே. பிறகு, ரூ.60,000 கடன் பெற்றார். இதன்மூலம் 3,000 காளான் படுகைகளாக அதிகரித்தார். இப்படியே வளர்ந்து 1990-களில் ‘காளான் மில்லினியர்’ என்று கூறும் அளவுக்கு வளர்ந்தார். தினசரி வருமானம் ரூ.2,500 ஆக அதிகரித்தது.
1 லட்சம் பேருக்கு ஊக்குவிப்பு
வெறுமனே தான் சம்பாதிப்பதை, தன் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் சந்தோஷ் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தனிநபர்களுக்கு காளான் வளர்ப்பில் ஊக்குவிப்பு அளித்தார். பயிற்சி கொடுத்து வளர்த்து விட்டார். எனவே, அவரது ‘மஷ்ரூம் சென்டர்' தொழில்முனைவோர்களுக்கான பயிற்சிக் களமாக அமைந்தது.
குறிப்பாக, சந்தோஷின் இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களும், பொருளாதார ரீதியாக நலிவுற்ற, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் நிறைய பயனடைந்தனர். அவரது கட்டணப் பயிற்சித் திட்டங்கள் பல மாநிலங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.
இன்று ‘கலிங்கா காளான் மையம்’ தினமும் 2,000 காளான் பாட்டில்களை உற்பத்தி செய்கிறது. அத்துடன், சிப்பி மற்றும் நெல் வைக்கோல் காளான் போன்ற ரகங்களையும் பயிரிடுகிறது.
சந்தோஷ் தற்போது காளான் மாவு, ஊறுகாய், தின்பண்டங்கள் மற்றும் பலவற்றை தயாரிக்க ரூ.2 கோடியில் உணவுப் பதப்படுத்தும் பிரிவை நிறுவும் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சந்தோஷ் மிஸ்ராவின் கதை தொழில்முனைவோர் வெற்றியைப் பற்றியது மட்டுமல்ல; இது இடையூறுகளைச் சமாளிப்பது, சமூகங்களை மேம்படுத்துவது மற்றும் நிலையான விவசாய நடைமுறைக்கு முன்னோடியாக உள்ளது ஆகியவை பற்றியதுமாகும்.
நிதி நெருக்கடியில் தொடங்கி காளான் தொழில்துறையில் தலைவராக சந்தோஷ் மேற்கொண்ட பயணம், புதுமைக்கான ஊக்கமளிக்கும் உண்மை வாழ்க்கைக் கதையாகும்.
மூலம்: Nucleus_AI
‘கொடைக்கானலில் குங்குமப்பூ உற்பத்தி’ - ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ.4 லட்சம் வரை வருமானம் ஈட்டும் விவசாயி!
Edited by Induja Raghunathan