10 ஆண்டு போராட்டம்; சிஏ தேர்வில் தேர்ச்சி: மகிழ்ச்சியில் அப்பாவை கட்டிப்பிடித்து அழுத டீ விற்பவரின் மகள்!
சிஏ தேர்வில் வெற்றி பெற்ற டீ விற்பனை செய்பவரின் மகள், மகிழ்ச்சியில் சாலையிலேயே தனது தந்தையைக் கட்டிப்பிடித்து அழும் வீடியோ சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
வெற்றிகள் என்றுமே ஆனந்தக்கண்ணீரை வரவழைப்பவைதான். அதிலும் நீண்ட ஆண்டுகள் கடுமையான சூழலில் போராடி பெற்ற வெற்றி என்றால் கேட்கவா வேண்டும். அந்த வெற்றி தரும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
இப்போதும் அப்படித்தான், வறுமையான சூழலில் தனது பத்து ஆண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றியை, தனது தந்தையைக் கட்டிப் பிடித்து மாணவி ஒருவர் கண்ணீர் விட்டு வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டு வருகிறது.
டீ விற்பவரின் மகள்
டெல்லியைச் சேர்ந்த மாணவி அமிதா பிரஜாபதி. இவரது தந்தை இருசக்கர வாகனத்தில் தெருத்தெருவாகச் சென்று டீ விற்பனை செய்பவர். தினசரி தேவைகளுக்காக இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, சுற்றி இருப்பவர்களின் எதிர்ப்பையும் மீறி தன் மகளின் சிஏ கனவுகளுக்காக செலவு செய்து வந்துள்ளார்.
பிரஜாபதியும் தன் குடும்பச் சூழல் மற்றும் தனக்காக தன் தந்தை படும் கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை மனதில் கொண்டு, தீவிரமாக சிஏ தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். சுமார் பத்து ஆண்டுகள் இதற்காக அவர் திட்டமிட்டு படித்ததன் விளைவாக, இந்த ஆண்டு அவர் சிஏ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தனது வெற்றியை எப்படி அவர் தனது தந்தையிடம் தெரிவித்தார், அதற்கு அவரது ரியாக்ஷன் என்ன என்பவற்றை தனது லிங்க்டு இன் பக்கத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார் பிரஜாபதி. கூடவே, அந்த நெகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாகப் பதிவு செய்து அதனையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், தனது கனவு நனவான மகிழ்ச்சியில் பிரஜாபதி, வேலை முடிந்து வீட்டிற்கு வரும் தனது தந்தைக்காக சாலையிலேயே காத்திருக்கிறார். தனது தந்தை வந்ததும் அவரிடம் தான் சிஏ தேர்வில் வெற்றி பெற்ற செய்தியை மகிழ்ச்சியுடன் கூறுகிறார். தந்தையும், மகளும் சாலையிலேயே ஆனந்தக்கண்ணீர் விட்டு கட்டிப் பிடித்து அழுகின்றனர்.
கனவு நினைவானது
இந்த வீடியோவுடன் பிரஜாபதி வெளியிட்டுள்ள பதிவில்,
“நான் ஒரு குடிசைப்பகுதியில் வசிப்பவள். எனது தந்தை என் கல்விக்காக எல்லா சிக்கல்களையும் எதிர்கொண்டார். ஒவ்வொரு நாளும், என் கண்களில் கனவுகளுடன், இது கனவா அல்லது இது எப்போதாவது நிறைவேறுமா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். ஜூலை 11, 2024, இன்று அது உண்மையாகிவிட்டது. ஆம், கனவுகள் நனவாகியுள்ளது. எனது கனவு நிறைவேற 10 ஆண்டுகள் ஆகியுள்ளது,” என நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.
மேலும், 'டீ விற்று உன் மகளை இவ்வளவு படிக்கவைக்க முடியாது, அந்த பணத்தை மிச்சப்படுத்துங்கள், அதற்குப் பதிலாக வீடு கட்டுங்கள் என்று என் தந்தையிடம் அவரைச் சுற்றி இருப்பவர்களில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வளர்ந்த மகள்களுடன் தெருவில் எவ்வளவு காலம் வாழ்வீர்கள்? எப்படியிருந்தாலும், ஒரு நாள் திருமணமாகி அவர்கள் வேறொருவரின் வீட்டுக்கு சென்றுவிடுவார்கள், உங்களுக்கு எதுவும் மிச்சமிருக்காது’ என்றும் அவர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் என் தந்தை அதனை பொருட்படுத்தவில்லை.
இன்று நான் என்னவாக இருந்தாலும், என் அப்பாவும் அம்மாவும் என்னை மிகவும் நம்பியதற்குக் காரணம், ஒரு நாள் நான் அவர்களை விட்டு விலகுவேன் என்று நினைக்கவில்லை, என பெருமிதத்துடன் பிரஜாபதி அந்தப் பதிவில் தனது பெற்றோரைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் வீடியோ
கடந்த வாரம், இதேபோல், தானேவின் டோம்பிவிலியில் காய்கறி விற்கும் பெண் தனது மகன் சி.ஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து அழுத வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. தற்போது அதேபோல், பிரஜாபதி தனது தந்தையைக் கட்டிப் பிடித்து அழும் வீடியோ வைரலாகி வருகிறது.
எது எப்படியோ, நம்பிக்கையுடனும், விடாமுயற்சியும் சேர்ந்து, திட்டமிட்டுப் படித்தால் நிச்சயம் நினைத்த படிப்பை, இலக்கை அடையலாம் என்ற தன்னம்பிக்கையை இதுபோன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் இருப்பவர்கள் மனதில் விதைத்துச் செல்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
நீட் தேர்வில் 639 மதிப்பெண் - டாக்டர் கனவை நினைவாக்கிய பூக்கடைக்கார் மகள்!